'நிலைவிலங்கு' பூட்டப்பட்ட லட்சுமிபதி ராஜூ


நிலைவிலங்கு பூட்டப்பட்ட லட்சுமிபதி ராஜூ
x

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள், தியாகிகளின் பங்கு முக்கியமானதாகும். விருப்பாட்சி கோபால்நாயக்கர், சுப்பிரமணியசிவா வரிசையில் பி.எஸ்.கே.லட்சுமிபதி ராஜூவும் தவிர்க்க முடியாதவர் ஆவார்.

அப்போதைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் பழனியில் 1915-ம் ஆண்டு கிருஷ்ணசாமி ராஜூ - நல்லம்மாள் தம்பதிக்கு மகனாக பி.எஸ்.கே.லட்சுமிபதி ராஜூ பிறந்தார். சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்துக்கு பிறகு அரசியல், ஆன்மிகம், சமூகம் என அனைத்துத் துறைகளிலும் பங்கெடுத்து மக்கள் நலனுக்காக பாடுபட்டார்.

இவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சம்பவங்களை அவரது பேரன் ராஜா கூறியதாவது:-

சுதந்திரப் போராட்ட காலத்தில் எனது தாத்தாவின் தந்தை கிருஷ்ணசாமி ராஜூ கதர் இயக்கத்தில் இருந்தார். எனவே தனது தந்தையை பார்த்து அவருக்கும் சுதந்திர தாகம் பிறந்தது. சிறு வயதிலேயே பள்ளி படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1931-ம் ஆண்டு தனது 16-ம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக என் தாத்தா லட்சுமிபதி ராஜூ கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறை அதிகாரியாக இருந்த 'ஹவ்', எனது தாத்தாவுக்கு 'நிலைவிலங்கு' பூட்டினார். கை, கால், கழுத்து, உடல் என அனைத்தும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதற்கு 'நிலைவிலங்கு' என்று பெயர். இந்த விலங்கு பூட்டப்பட்டவர்களால், உட்காரலாம், நிற்கலாம். ஆனால் நகர முடியாது.

1940-ல் தனிநபர் சத்தியாகிரகம், 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றார். 1942-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி அவருக்கு திருமணம் நடைபெற இருந்த நாளில் அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 1946-ல் பழனி வன்னியர் வலசு பகுதியில் மகாத்மாகாந்தி பங்கேற்ற தீண்டாமை ஒழிப்பு கூட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை இவரையே சாரும்.

சுதந்திரத்துக்கு முன்னதாகவும், பிறகும் காங்கிரசில் தன்னை இணைத்து காமராஜர், கக்கன் உள்ளிட்ட தலைவர்களின் அன்பை பெற்றவர்.

பழனி நகராட்சி தலைவராகவும், எம்.எல்.ஏ. வாகவும் பதவியேற்று பழனி நகர வளர்ச்சிக்காக செயல்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story