அதிக வருமானத்துக்கு தோள் கொடுக்கும் தோட்டக்கலை பயிர்கள்


அதிக வருமானத்துக்கு தோள் கொடுக்கும் தோட்டக்கலை பயிர்கள்
x

விவசாயத்தில் அதிக வருமானம் கொடுப்பனவற்றில் தோட்டக்கலை பயிர்கள் முன்னணியில் இருக்கின்றன. தேசிய அளவில் தோட்டக்கலை துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

தமிழ்நாடு 7 விதமான வேளாண் காலநிலைகளையும், பல்வேறு விதமான மண் வளங்களையும் கொண்டுள்ளதால் பழங்கள், காய்கறிகள், சுவைதாளிதப்பயிர்கள், மலை பயிர்கள், மருத்துவ பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள் மற்றும் பூக்கள் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது.

தமிழகத்தின் மொத்த பரப்பளவான 130.05 லட்சம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் 15.88 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பழப்பயிர்களில் மா, 1.48 லட்சம் ஹெக்டேரிலும் (46 சதவீதம்), வாழை 1.02 லட்சம் ஹெக்டேரிலும் (32 சதவீதம்) சாகுபடி செய்யப்படுகிறது.

வருமானம் அதிகரிப்பு

தோட்டக்கலை பயிர்களின் மொத்த உற்பத்தி 230 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆகும். தோட்டக்கலை பயிர் சாகுபடியில் தேசிய அளவில் தமிழகத்தின் பங்கு 6.09 சதவீதமாக உள்ளது. தோட்டக்கலை உற்பத்தியில் 5.47 சதவீதமாக இருக்கிறது.

தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு தரப்படுத்துதல், சந்தைபடுத்துதல் மூலம் வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. மேலும், மக்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதனால், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தோட்டக்கலை இயக்குனர்

தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆர்.பிருந்தாதேவி கூறியதாவது:-

வேளாண் உற்பத்தியை இருமடங்காக்கி, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக பெருக்குவதே தமிழக அரசின் முக்கிய கொள்கையாகும்.

தோட்டக்கலைப் பயிர்களில் வீரியமிக்க மற்றும் பாரம்பரிய ரகங்கள் சாகுபடியை ஊக்குவித்தல், இடுபொருட்களை உரிய நேரத்தில் வழங்குதலை உறுதி செய்து, உயர்ரக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தோட்டக்கலையை லாபகரமான தொழிலாக உயர்த்துதல், பண்ணை எந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறுவடை பின்செய் நேர்த்தி ஆகியவை அரசின் கொள்கைகளை அடைவதற்கு வழிவகுக்கின்றன.

அதிக லாபம் ஈட்டும் தொழில்

தோட்டக்கலைத்துறை சமீபத்திய ஆண்டுகளில் இந்திய விவசாயத்தின் முக்கியமான மற்றும் துடிப்பான பகுதியாக உருவெடுத்துள்ளது. நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் அதன் பங்கு பெருகி வருகிறது.

திறமையான நில பயன்பாட்டின் மூலம் விவசாயத்தை அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி வருகிறோம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஏராளமான வேளாண் தொழில்களைத் தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தோட்டக்கலை பயிர்கள் பல்வகைப்படுத்துதல், இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு திறமையான வேலைவாய்ப்பை உருவாக்குதல் என அடையாளம் காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் அதிகரிப்பு

தோட்டக்கலை பயிர் சாகுபடி மற்றும் உற்பத்தி ஆண்டுதோறும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் கீழ் 79 அரசு தோட்டக்கலை பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

தோட்டக்கலை பயிர்களின் இனத்தூய்மையான மற்றும் தரமான நடவுசெடிகளை சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விநியோகம் செய்வதே அரசு தோட்டக்கலை பண்ணைகளின் முக்கிய நோக்கமாகும்.

இப்பண்ணைகளானது விவசாயிகளுக்கு சமீபத்திய தொழில்நுட்பங்களை விளக்கும் மாதிரி செயல்விளக்க பண்ணைகளாக திகழ்வதுடன், நிலமற்ற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.

தோள் கொடுக்கும் தோழன்

தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பளவை உயர்த்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு வகையான மானியங்களை வழங்கி வருகிறது. அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை சந்தித்து இந்த மானியங்களை விவசாயிகள் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தோட்டக்கலை பயிர்கள் அதிக வருமானத்துக்கு தோள் கொடுக்கும் தோழனாக இருக்கும் அதேவேளையில் இதனை முறையாக மேற்கொண்டால் மட்டுமே இந்த பயனை முழுமையாக அடைய முடியும் என்பது தான் உண்மை.


Next Story