வருமான வரிக் கணக்குத் தாக்கலில் தவறு செய்திருந்தால் எப்படி திருத்துவது..?


வருமான வரிக் கணக்குத் தாக்கலில் தவறு செய்திருந்தால் எப்படி திருத்துவது..?
x
தினத்தந்தி 19 March 2023 2:00 PM GMT (Updated: 2023-03-19T19:30:28+05:30)

வருமான வரிக் கணக்குத் தாக்கலில் ஏதாவது வருமானம் விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதாவது வரிச்சலுகையைக் கோராமல் விட்டிருந்தாலோ வரிக்கணக்கைத் திருத்தம் (Updated Return) செய்ய முடியும்.

வருமான வரித்துறையால் உங்கள் வரிக்கணக்கு படிவம் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் மட்டுமே மாற்றி வரிக்கணக்குத் தாக்கல் செய்ய முடியும்.

இதற்கென தனியே ஐ.டி.ஆர்.யூ. படிவம் இருக்கிறது. வருமான வரித் துறையின் இ-பைலிங் இணையதளத்தில் (https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login) 'Updated Return' என்கிற ஆப்ஷனைத் (option) தேர்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும். அப்போது ஒரிஜினலாக முதலில் என்றைக்கு வரிக்கணக்கு தாக்கல் செய்தீர்கள், அதன் ஒப்புகை (Acknowledgement) எண் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டியிருக்கும். மாற்றப்பட்ட வரிக்கணக்கு தாக்கலை 2023 மார்ச் 31-ந் தேதி வரைக்கும் தாக்கல் செய்யலாம். இந்தக் காலம் வரை அபராதம் செலுத்தி வரிக்கணக்கை மாற்றித் தாக்கல் செய்ய முடியும்.

பழைய வரிக்கணக்குகள் எல்லாம் மாற்றப்பட்டு, கடைசியாகச் செய்திருக்கும் வரிக்கணக்குத் தாக்கல்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதே நேரத்தில், பல தடவை விவரங்களை மாற்றி மாற்றித் தாக்கல் செய்தால் அல்லது மிகப் பெரிய மாற்றத்தைச் செய்திருந்தால், வரித் துறையின் கண்காணிப்பு (Scrutiny) அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

வருமானவரித்துறை உங்களின் வரிக்கணக்குத் தாக்கலை மதிப்பாய்வு செய்து, அதை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு பிரிவு 143(1)-ன் கீழ் தகவல் அனுப்பிவிட்டது எனில், உங்களால் வரிக்கணக்கை மாற்றித் தாக்கல் செய்ய கூடாது.

பழைய கணக்குகளையும் தாமதமாக வரிக்கணக்குத் தாக்கல் (Belated returns) செய்ய முடியும். இதற்கு அபராதம் கட்ட வேண்டும். இதற்கான கெடு தேதியும் வரிக்கணக்கை மாற்றிச் செய்வதற்கான கெடு தேதியும் மார்ச் 31-தான்.

மேலும், வரிக் கணக்கை மாற்றி தாக்கல் செய்யும்போது அதை உறுதிப்படுத்த இ-வெரிபிகேஷன் மேற்கொள்ள வேண்டும் அல்லது பெங்களூருவுக்குப் படிவம் V -ஐ பிரிண்ட் எடுத்து அனுப்ப வேண்டும்.

* வரிக் கணக்குத் தாக்கலை உறுதிப்படுத்துங்கள்..!

ஒருவரின் வருமான வரிக் கணக்கு தாக்கல் எப்போது வரித்துறையால் உறுதிப்படுத்தப்படுகிறது எனில், வரிக்கணக்கைத் தாக்கல் செய்தது வரிதாரர்தான் என்பதை நிரூபிக்கும்போதுதான். இதை வரிக்கணக்கு தாக்கல் செய்தவுடன் இ-வெரிபிகேஷன் (E-Verification) என்கிற முறையில் செய்யலாம். அதாவது உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வருவதை வருமானவரித்துறையின் புதிய இணையதளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.

அடுத்து உங்களின் வங்கிக்கணக்கு நெட் பேங்கிங் வழியாக வருமான வரித்துறையின் இணைய தளத்துக்குச் சென்று உறுதிப்படுத்தலாம். வங்கிக் கணக்கு, டீமேட் கணக்கு மூலம் கூட ஒருவர் வரிக்கணக்குத் தாக்கல் செய்ததை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

மேற்கண்ட முறையில் செய்யவில்லை எனில், பெங்களூருவில் இருக்கும் வருமானவரித்துறையின் பரிசீலனை மையத்துக்கு வரிக்கணக்கு தாக்கல் செய்தற்கான படிவத்தை (Acknowledgement form - Form V) பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பலாம்.

இ-வெரிபிகேஷன் அல்லது பெங்களூருக்கு அனுப்புவதை வரிக்கணக்குத் தாக்கல் செய்த 120 நாள்களுக்குள் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை எனில், நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாகிவிடும்; வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வரலாம்; அபராதம் கூட விதிக்கப்படலாம்.

படிவம் V-ஐ சாதாரண தபால் அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலம் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் அனுப்பக்கூடாது. இந்தப் படிவத்தில் கையெழுத்து போட்டு அனுப்புவது முக்கியம். இல்லை எனில், வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாகி விடும்.

-மேக்ஸிடோம் சுப்பிரமணி, சென்னை.

ஏ.ஐ.எஸ். ஆப்ஸ்

வருமான வரி தாக்கல், வரிச் சலுகை, கடந்த 3 வருட வருமான வரி தாக்கல் மற்றும் ரிட்டன் சம்பந்தப்பட்ட மொத்த தகவல்களையும் தெரிந்துகொள்ள, ஏ.ஐ.எஸ்.ஆப்ஸ் உதவும். இதை ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இது, கடந்த கால வரிவிவரங்களை விளக்குவதுடன், இப்போது தாக்கல் செய்திருக்கும் அப்டேட்களையும் தெரிந்து கொள்ள முடியும். வருமான வரி குறித்த சந்தேகங்கள் அதிகம் கொண்டிருக்கும் சாமானியர்கள், இந்த ஆப் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

பாரம் 26 ஏ.எஸ். எந்தெந்த காரணங்களால் பிழையாக கருதப்படும்?

1. டி.டி.எஸ். ரிட்டன் தகவல்கள் நிரப்பப்படாமல் இருப்பது

2. டி.டி.எஸ். தொகை செலுத்தப்படாமல் இருப்பது

3. தவறான பான் நம்பர்

4. தவறான டி.டி.எஸ். செலான் தகவல் - இதுபோன்ற காரணங்களால், படிவம் 26 ஏ.எஸ் பிழையாக கருதப்படும்.

கடந்த 2 வருடங்களுக்கான ஐ.டி.ஆர். தாக்கல் செய்ய முடியுமா?

செய்யலாம். கடந்த 2 வருடங்களுக்கு ஐ.டி.ஆர். தாக்கல் செய்யாமல் விட்டிருந்தால், அதையும் சேர்த்து இப்போது தாக்கல் செய்யலாம்.


Next Story