கட்டிப்பிடி வைத்தியம்

உலகின் பல பகுதிகளில் காதலர் தின கொண்டாட்டம் ஒரு வாரம் நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் அனுசரிக்கப்படுகிறது. காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டிப்பிடித்து அரவணைத்து அன்பை பரிமாறும் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் தங்கள் மனதுக்கு பிடித்தமானவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். காதலர்கள்தான் கட்டிப்பிடித்து அன்பை பொழிய வேண்டும் என்றில்லை. தங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள், நெருக்கமாக பழகுபவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து அன்பை பொழியலாம்.
அப்படி கட்டிப்பிடிப்பது 'தகவல் பரிமாற்றத்தின் சிறந்த வடிவம்' என்று ஆய்வுகளும் கூறுகின்றன. சில சமயங்களில் நெருங்கி பழகுபவர்களிடம் வார்த்தைகளால் உணர்வுகளை பரிமாற முடியாதபோது அவர்களை அரவணைப்பது உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும். அந்த நேரத்தில் நீங்கள் எத்தகைய உணர்வுகளை கொண்டிருக்கிறீர்கள் என்பதை கட்டிப்பிடிப்பவருக்கு உணர்த்தவும் செய்யும்.
கட்டிப்பிடிப்பதை இரு இதயங்கள் கைக்குலுக்குவது போன்ற உணர்வுடன் ஒப்பிடுகிறார்கள். எந்தவொரு சூழலிலும் அவரை நம்புகிறீர்கள் என்பதையும், அவருடன் சிறந்த உறவை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தெரியப்படுத்த விரும்பினால் கட்டிப்பிடி வைத்தியம் சிறந்த தேர்வாக இருக்கும்.






