இயற்கையை நேசித்த ஹம்போல்ட்


இயற்கையை நேசித்த ஹம்போல்ட்
x

புவியில் தனிநபர் ஒருவரின் பெயரால் அநேக இடங்கள் அழைக்கப்படுகின்ற பெருமையைக் கொண்டவர் ஹம்போல்ட்.

வட, தென் அமெரிக்கக் கண்டங்களின் அனேகப் பகுதிகள், ஐரோப்பியக் கண்டத்தில் பெரும்பாலான பகுதிகள் இன்றைக்கும் ஹம்போல்ட்டின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்தப் புவியில் தனிநபர் ஒருவரின் பெயரால் அநேக இடங்கள் அழைக்கப்படுகின்ற பெருமையைக் கொண்டவர் ஹம்போல்ட். இப்படி பல இடங்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ள ஒருவர், ஓர் அறிவியல் அறிஞர்.

உலக வரலாற்றையும் அறிவியலின் பார்வையையும் தலைகீழாக திருப்பிய டார்வினின் 'On the Origin Of the Species' நூலை எழுதுவதற்கான அடிப்படை பார்வையைத் தந்தவர் ஹம்போல்ட். உலகெங்கும் இயற்கையின் அமைப்பை, அதன் புவியியல் தன்மை, காலநிலை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தியவர். புவி காந்தப்புலம் குறித்த இன்றைய ஆய்வுகளுக்கு அடிகோலியவர். பருவநிலை மாற்றம் குறித்த அபாயத்தை அன்றே விளக்கியவர். இளைய தலைமுறைகளை ஊக்குவித்து, பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊற்றாக விளங்கியவர். இன்றைய ஜெர்மனியில் (அன்றைய பிரஷ்யா), 1769-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் ராணுவ அதிகாரிக்கு மகனாக ஹம்போல்ட் பிறந்தார்.

ஹம்போல்ட் தன்னுடைய 9 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். பொருளாதாரத்தைப் படிப்பதன் மூலம் எளிதில் அரசின் உயர் பதவிகள் கிடைக்கும் என்கிற தனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றினார். 1700-களின் பிற்பகுதி என்பது ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பல புதிய சிந்தனைகள் ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கொண்டிருந்த காலம். புதிய சிந்தனைகளும் அதன் மீதான விவாதங்களும் அன்றைய இளைஞர்களிடத்தே பரவலாகத் தாக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. அப்போதுதான் ஹம்போல்ட் - ஜியோர்ஜ் போர்ஸ்டரை சந்தித்தார். அந்த சந்திப்பு அவரது எதிர்கால வாழ்க்கையை வடிவமைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் நாடுகளுக்குப் பயணித்தனர். அதுவே ஹம்போல்ட்டின் முதல் கடற்பயணமும்கூட.

அவருடைய தாய் இறந்த 1796-ம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் இயற்கை அமைப்பு குறித்த தரவுகளை ஹம்போல்ட் சேகரித்துக்கொண்டிருந்தார். இயல்பாகவே அறிவுவேட்கை மிகுந்த ஹம்போல்ட் தன் வாழ்க்கையின் மூலம் சொன்ன செய்தி, ஆய்வாளர்கள் அறையைவிட்டு வெளிவர வேண்டும். பரந்து விரிந்திருக்கும் இயற்கை, அத்தனை அறிவியல் ரகசியங்களையும் நமக்குக் கற்றுத்தர காத்துக்கொண்டிருக்கிறது என்றார்.


Next Story