கடந்து வந்த பாதை


கடந்து வந்த பாதை
x

நவம்பர் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு இது.

கடந்த வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையிலான தகவல்கள் இங்கே வழங்கப்படுகிறது. நவம்பர் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு இது...

நவம்பர் 6

* மக்களிடம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் இல்லாத நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அவலம் நேரப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

* டாக்டர்கள் படிப்பை முடித்தவுடன் குறிப்பிட்ட காலம் அரசுப்பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்து பிணை பத்திரம் வழங்குவது முடிவுக்கு வருகிறது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதில் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

திருப்பதி சொத்து

திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூ.2½ லட்சம் கோடி என்ற தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 7

* பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

* விதிமீறல் கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதித்து விட்டு, பின்னர் அவற்றை வரன்முறை செய்வதற்கு பதிலாக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்ப பெற்றுவிடலாமே? என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதியும் தொடங்குகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

நவம்பர் 8

* தமிழகத்தின் 17-வது வன விலங்கு சரணாலயம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அமைகிறது. இதற்கு புதிய காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் என்று தமிழக அரசு பெயர் அறிவித்துள்ளது.

* 10 லட்சம் பேர் எழுதிய குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியானது. இதில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

* புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இந்தியா தலைமை

'ஜி-20' அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து மக்களுக்கும் பெருமிதம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நவம்பர் 9

* பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்படும் என மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

* முதுநிலைபடிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைமை

சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி ஏற்றார்.

நவம்பர் 10

* 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

* இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், சூரிய மின்சக்தி உற்பத்தியால் எரிபொருள் செலவில் ரூ.34 ஆயிரம் கோடியை இந்தியா சேமித்துள்ளது.

மின்மயம்

இந்திய ரெயில்வேயின் 65 ஆயிரத்து 141 கிலோ மீட்டர் அகலப்பாதை வழித்தடங்களில் 53 ஆயிரத்து 470 கிலோ மீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன.

நவம்பர் 11

* முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

* இந்த நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.10.54 லட்சம் கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

* ஜார்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா, சட்டசபையில் நிறைவேறியது.

நவம்பர் 12

* சுப்ரீம் கோர்ட்டு அளித்த விடுதலை தீர்ப்பையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

* அணைகளில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

44 செ.மீ.

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 செ.மீ. மழை பதிவானது.

உலகம்

நவ. 6- இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்வதில் ரஷியா முதலிடம் பிடித்துள்ளது. வழக்கமாக கச்சா எண்ணெய் விற்பனை அதிகம் செய்து வந்த ஈராக், சவுதி அரேபியா ஆகியவை 2 மற்றும் 3-வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.

நவ. 7- ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை தாக்குவதற்கான பயிற்சி என்று வட கொரியா சொல்கிறது.

நவ. 8- இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நவ. 9-தைவானுடன் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில் போருக்கு தயாராகும்படி தனது நாட்டு ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டார்.

நவ. 10 - உக்ரைனில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் ஆகும்படி ரஷியா உத்தரவிட்டுள்ளது.

* இலங்ைக தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

* அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் 5 இந்தியர்கள் வெற்றி பெற்றனர்.

* ஆப்கானிஸ்தானில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவ. 11. - உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கியது.

நவ. 12 - கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை சூழல் சுமுகமாக இருந்தாலும், கணிக்க முடியாதது என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.

விளையாட்டு

நவ. 6- 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்க அணி சூப்பர்12 சுற்றுடன் வெளியேறியது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

நவ. 7- அக்டோபர் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நவ. 8- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

நவ. 9- 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்த முதலாவது அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நவ. 10 - 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது.

* உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 11 -இளம் வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கும்பிளே தெரிவித்துள்ளார்.

* ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கப்பதக்கம் வென்றனர்.

நவ. 12 - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.


Next Story