தங்கம் வாங்க தங்கமான சில யோசனைகள்


தங்கம் வாங்க தங்கமான சில யோசனைகள்
x

ஹால்மார்க் என்பது நகைகளில் பயன் படுத்தப்பட்டிருக்கும் தங்கத்தின் அதிகாரப்பூர்வ விகிதத்தை குறிப்பதாகும்.

இன்றைய காலகட்டத்தில் தங்கத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.இந்திய மக்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்று சொல்லலாம். தங்கத்தை நகையாக வாங்கி அணிந்துகொள்வது மட்டுமல்லாமல் தங்க நகைகளில் முதலீடு செய்வதற்கும் இப்பொழுது மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.சராசரியாக இந்தியாவிலும் , உலகத்தின் பல்வேறு மூலைகளிலும் வசிக்கின்ற இந்தியர்கள் தங்க நகைகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன.இந்தியா முழுவதிலும் இருக்கின்ற நகைக் கடைகளின் எண்ணிக்கையும் இதற்குச் சான்றாகும். நகைகளை வாங்கும் பொழுது தங்கம் எந்த அளவு தூய்மையானது என்பதை கவனித்து வாங்க வேண்டும். தூய்மையற்ற தங்கத்தை வாங்கி விட்டு சில நாட்களிலேயே அவை நிறம் மங்கி அதன் உண்மையான நிறத்தைக் காட்டும் பொழுது வருந்துவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. தூய்மையற்ற தங்க நகைகளை வாங்கி மக்கள் ஏமாறுவதை எப்படித் தடுக்கலாம்?தூய்மையான தங்க நகைகளை வாங்கவும் மற்றும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும் சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

தங்க நகைகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

தங்கம் என்று சொல்லக்கூடிய மஞ்சள் உலோகத்தின் மீது ஈர்ப்பு இல்லாதவர்களே இருக்க முடியாது.தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக விழாக்காலங்களில் பெரும்பாலான நகைக்கடைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதைப் பார்க்கமுடியும்.ஆபரணங்களாக மட்டுமல்லாமல் தங்க பிஸ்கட் மற்றும் தங்கக் காசுகளையும் வாங்கி தங்கத்தில் முதலீடு செய்வதை காலம் காலமாகவே பின்பற்றி வருகிறார்கள்.சிறந்த விலையில் தங்கத்தை வாங்கும் அவசரத்தில், தவறு செய்வது சகஜம். இருப்பினும், தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், உங்கள் முதலீட்டிற்கான மதிப்பு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

*தூய்மையை சரிபார்ப்பது:

தங்கம் வாங்குவதில் முதல் படியாக நாம் வாங்க விருப்பப்படும் நகையை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க வேண்டும்.தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க சிறந்த வழி, நகையின் மீது உள்ள அடையாளத்தை கண்டறிவதாகும். ஹால்மார்க் என்பது நகைகளில் பயன் படுத்தப்பட்டிருக்கும் தங்கத்தின் அதிகாரப்பூர்வ விகிதத்தை குறிப்பதாகும்.இந்தியாவில் தயாரிக்கப்படும் தங்க நகைகளின் தூய்மை குறித்த சான்று அளிப்பதற்கும் மற்றும் ஹால்மார்க் முத்திரைகளை வழங்குவதற்கும் பொறுப்பான அதிகாரபூர்வ ஏஜென்சி என்று இந்திய தரநிலைகளை(பிஐஎஸ்) சொல்லலாம்.எனவே, நீங்கள் தங்கம் வாங்கும் போது, எப்போதும் பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற தங்கத்தை வாங்குவது சிறந்ததாகும்.

*அடிப்படைகளை அறிந்துகொள்வது:

பிஐஎஸ் ஹால்மார்க்கைச் சரிபார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்,ஆனால் அதை எப்படி சரி பார்ப்பது என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதல்லவா . ஹால்மார்க் கொண்ட எந்த நகையும் பொதுவாக பிஐஎஸ் முத்திரையுடன் பொறிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணுடன் வருகிறது.இது ஹால்மார்க் ஆண்டையும் எந்த நகைக் கடையில் நாம் நகை வாங்குகிறோம் என்பதை அறிந்துகொள்ள ஒரு அடையாளத்தையும் கொண்டுள்ளது. அதேபோல் கேரடேஜ் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள,"K" என்ற எழுத்தும் நாம் வாங்கும் நகையில் பொறிக்கப்பட்டிருக்கும். இது நாம் வாங்கக்கூடிய தங்கம் எத்தனை காரட் அல்லது தங்கத்தின் தூய்மையின் சதவீதத்தைக் குறிப்பதாக இருக்கும்.உதாரணமாக நீங்கள் 22 காரட் கம்மலை வாங்குகிறீர்கள் என்றால், அதில் 91.6% சுத்தமான தங்கம் உள்ளது என்று அர்த்தம்.இந்த கேரடேஜ் கொண்ட நகைகளில் 916 பொறிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள், ஒயிட் கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் நகைகள் பொதுவாக 18 காரட் தங்கத்தில் வருகின்றன.

*விலையை சரிபார்த்தல்:

தங்கம் வாங்கும்போது அவை ஹால்மார்க் தங்கம் தானா என்பதை சரி பார்த்து வாங்குவது போலவே விலையையும் சரி பார்த்து வாங்குவது மிகவும் முக்கியமாகும். தங்கத்தின் தூய்மையை அதன் விலையே நிர்ணயிக்கின்றது.நடைமுறையில் உள்ள சந்தை விலையைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றது.நகைக்கடைகள் தங்களுடைய கடைக்கு வரும் நுகர்வோருக்கு தினசரி தங்கத்தின் விலையை தங்கள் கடையில் உள்ள விலைக்குறிப்பு பலகையில் தெரியப் படுத்துகிறார்கள். தங்கத்தின் விலையை எவ்வாறு கணக்கிடுவது என்ற கேள்வி எழுகிறதல்லவா.தங்கத்தின் தூய்மையை தங்கத்தின் விலையில் இருந்து தள்ளுபடி செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

*செய்கூலியை பேச்சுவார்த்தையின் மூலம் குறைத்தல்:

தங்க நகைகளை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று செய்கூலி கட்டணத்தை பேரம் பேசி வாங்குவது ஆகும். நகை தயாரிப்பில் ஏற்படக்கூடிய தொழில் கூலியை நகைக் கடைக்காரர்கள் நகை வாங்கும் நம்முடைய கணக்கில் சேர்கிறார்கள். இது பொதுவாக தற்போது இருக்கும் தங்க விலையின் சதவீதத்தைப் பொருத்து மாறுபடக் கூடியதாக இருக்கின்றது.எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் நகைகளுக்கு சிறந்த விலையைப் பெறுவதற்கு பேரம் பேசுவது உங்களது உரிமை என்றே சொல்லலாம் .

கவனிக்க வேண்டியவை

1.நகைகளை வாங்கும் பொழுது கட்டாயம் கடைக்காரரிடம் நகைகளுக்கு உண்டான ரசீதுகளை தவறாமல் வாங்க வேண்டும்.

2.ஒரு கடையில் வாங்கிய நகைகளை மற்றொரு கடையில் விற்கும் பொழுது நமக்கு சரியான விலை கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே நாம் வாங்கிய கடைகளிலேயே நகைகளை விற்பது சிறந்தது.

3.தங்கத்தில் முதலீடு செய்வதாக இருக் கும் பட்சத்தில் கற்கள் பதித்த நகைகளை வாங்காமல் முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளை வாங்குவது சிறந்த யோசனையாகும்.

4.நகை வாங்கும் கடைகள் பிரபலமானதாக இருந்தால் மட்டும் பத்தாது அவை நம்பிக்கையானதாக இருக்கின்றதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்து வாங்குவது நல்லது.

5.நாம் வாங்கும் நகைகளில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக அவை வாங்கிய கடைகளில் எடுத்துச்சென்று அந்தக் கடைக்காரர்களிடம் என்ன பிரச்சனை என்பதைத் தெரியப்படுத்தலாம். சில நேரங்களில் நகைகளில் ஏற்படும் பிரச்சனைகளை பல மாதங்களோ அல்லது பல வருடங்களோ கழித்து நாம் வாங்கிய கடைகளுக்கு எடுத்துச் சென்று கூறும்பொழுது அதில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


Next Story