7 கண்டங்களுக்கு அதிவேகமாக பயணித்து சாதனை


7 கண்டங்களுக்கு அதிவேகமாக பயணித்து சாதனை
x

7 கண்டங்களுக்கும் அதிவேகமாக பயணம் செய்து உலக சாதனை படைத்திருக்கிறது, இந்திய ஜோடி.

அண்டார்டிகா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 7 கண்டங்களுக்கும் அதிவேகமாக பயணம் செய்து உலக சாதனை படைத்திருக்கிறது, இந்திய ஜோடி. டாக்டர் அலி இராணி மற்றும் சுஜோய் குமார் மித்ரா ஆகியோர் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

இவர்களில் டாக்டர் அலி இராணி 1987-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். சுஜோய் மித்ரா கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்தவர்.

அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு தொழில் முனைவோராக தன்னை ஐக்கியப்படுத்தியுள்ளார். இருவருமே பயணப்பிரியர்கள். இதுவரை டாக்டர் அலி இராணி 90 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். சுஜோய் மித்ராவோ 172 நாடுகளுக்கு பயணம் செய்து அசத்தி இருக்கிறார்.

டாக்டர் அலி இராணிக்கு 64 வயதாகிறது. ஆனாலும் பயணத்தின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. தொடர் பயணங்களை இருவருமே விரும்பியதால் அது நாடுகளை கடந்து கண்டங்களிலும் காலூன்றும் எண்ணத்தை விதைத்திருக்கிறது. அதனை உலக சாதனையாகவும் மாற்றிவிட்டார்கள். இருவரும் 7 கண்டங்களிலும் காலூன்றி தங்கள் பயணத்தை 3 நாட்கள் 1 மணி நேரம் 5 நிமிடங்கள் 4 வினாடிகளில் முடித்துள்ளனர்.

இவர்களது பயணம் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி அண்டார்டிகாவில் தொடங்கி இருக்கிறது. டிசம்பர் 7-ந்தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பார்ன் நகரில் தங்கள் இறுதி பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். இது அதிவேகமாக பயணத்தை நிறைவு செய்ததாக பதிவாகி இருக்கிறது. கின்னஸ் அமைப்பும் இவர்களது பயணத்தை உறுதிபடுத்தி தற்போது சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த டாக்டர் கவ்லா அல்ரோமைதி, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3 நாட்கள் 14 மணி நேரம் 46 நிமிடம் 48 வினாடிகளில் 7 கண்டங்களை கடந்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. அதனோடு ஒப்பிடும்போது 13 மணி நேரத்திற்கு முன்பாகவே டாக்டர் அலி இராணி-சுஜோய் குமார் மித்ரா ஜோடி தங்கள் பயணத்தை நிறைவு செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துவிட்டது.

கின்னஸ் சாதனையை முறியடித்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டாக்டர் அலி இராணி, "நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள மக்களை பயணம் ஒன்றிணைக்கிறது. நாங்கள் இருவரும் இந்த விஷயத்திற்காக உலக சாதனையை முறியடிப்பது திருப்திகரமான உணர்வை தருகிறது. இந்த சாதனையை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இன்னும் அதிகமான மக்கள் பயணம் செய்வதற்கும், இந்த அழகான உலகத்தை ஆராய்வதற்கும் ஏதாவது ஒரு வகையில் எங்கள் பயணமும், சாதனையும் பங்களிக்கும் என்று நம்புகிறோம்'' என்கிறார்.

''கின்னஸ் உலக சாதனை படைத்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு, ஆனால் சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தப் பயணம் முடிந்திருக்கலாம். ஆனால் நாம் அடைய வேண்டிய மைல்கற்கள் இன்னும் நெடுந்தொலைவு உள்ளது. இன்று நாம் ஒரு சாதனையை முறியடிப்பதில் வெற்றி பெற்றிருக்கலாம். நாளை நம் சாதனையை வேறொருவர் முறியடிப்பார். எனவே போராட கற்றுக்கொள்ளுங்கள். அதனை அனுபவியுங்கள். கஷ்டங்களை கண்டு துவளாதீர்கள். தோல்வியடைய ஆசைப்படுங்கள். அது படிப்பினையை கொடுக்கும். நிச்சயம் அற்புதத்தை நிகழ்த்திவிடும்" என்றார் சுஜோய் மித்ரா.


Next Story