உலக மகளிர் தினம் இன்று கொண்டாட்டம்வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள் ;கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்கிறார்கள்


உலக மகளிர் தினம் இன்று கொண்டாட்டம்வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள் ;கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்கிறார்கள்
x

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஈரோடு

பெண்கள் எல்லாத்துறைகளிலும் இப்போது வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். 'எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண்' எனும் மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, அவர்கள் சாதனை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.

பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகளிர் குல மாணிக்கங்கள்

தாய், மனைவி, மகள், சகோதரி, தோழி என உறவின் அனைத்து நிலைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். இந்த பாத்திரங்களில் எதையும் நிராகரித்து எந்த ஆணாலும் வாழ்ந்து விட முடியாது. 'உலகம் அனைத்தையும் கட்டி காப்பாற்றி, அமுதூட்டி வரும் நூல்கள், கலைகள், கலைமன்றங்கள் யாவும் பெண்களே' என்றார் ஷேக்ஸ்பியர். அந்தளவு உலகில் சிறப்புக்குரியவர்கள் பெண்கள்தான். அதனால்தான் நதிகள் தொடங்கி மலைகள் வரை பெண்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.

'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்ற நிலையெல்லாம் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களுக்கே சவால் விடும் பணிகளில் கோலோச்சி வருகிறார்கள். இன்று அவர்கள் தொடாத உயரமே இல்லை, எட்டாத உச்சம் இல்லை. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்த வேளையில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு துறைகளிலும் கோலோச்சும், சாதனை படைத்து வரும் மகளிர் திலகங்களை இன்றைக்கு பார்க்க இருக்கிறோம். இடர்ப்பாடுகளையும், சிக்கல்களையும் கடந்து சாதனை மங்கைகளாக ஜொலிக்கும் மகளிர் குல மாணிக்கங்களையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் இங்கே காணலாம்.

பெண் சுதந்திரம்

ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம்:-

மகளிர் தினத்தை தமிழ்நாடு பெண்கள் உற்சாகமாக கொண்டாடும் ஒரு நிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். இலவச பஸ் பயணம், மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, விரைவில் மகளிருக்கு உரிமைத்தொகை என்று பெண்களுக்கான ஆட்சியை தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி இருப்பதன் மூலம் மேயர்களாக, கவுன்சிலர்களாக, ஊராட்சி மன்ற தலைவர்களாக, ஒன்றியக்குழு தலைவர்களாக ஏராளமான பெண்கள் பதவிக்கு வந்து இருக்கிறார்கள்.

பெண் சுதந்திரம் என்பது இப்போது போதுமானதாக இருக்கிறது. நான் சிறுமியாக இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறும் உரிமை கூட கிடையாது. இப்போது அப்படியா இருக்கிறது. நள்ளிரவில் கூட பெண்கள் கார்கள், 2 சக்கர வாகனங்கள் ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள். எல்லா வேலைகளிலும் இருக்கிறார்கள். கிடைத்திருக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருந்தால் போதுமானது. பெண்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதேநேரம் இளம்பெண்கள், முதலில் தங்கள் குடும்பத்தை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்துக்கு பிறகுதான் மற்ற அனைத்தும் என்பதை மனதில் வைத்து அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும். பெண்ணாக பிறந்ததால் அச்சம் தேவையில்லை.

இரும்பு சத்து

மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா:-

ஒரு பெண் நன்றாக கல்வி கற்று, நல்ல வேலைக்கு செல்கிறபோது அது மற்ற பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், அவர்களும் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் உயர வாய்ப்பாகிறது. தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சித்தால் பெண்கள் எந்த துறையாக இருந்தாலும் சாதிக்க முடியும். இன்று பெண்களுக்கான அனைத்து களங்களும் திறந்தே உள்ளன. கல்வியையும் திறமையையும் வளர்த்துக்கொண்டால் மிகச்சிறந்த பதவிகளை பெற முடியும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிக மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். சமீப காலமாக 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு பிரச்சினை அதிகரித்து இருக்கிறது. துரித உணவுகள் போதிய சத்துகளை உடலுக்கு தராது. வளர் இளம் பெண்களின் உடல் வளர்ச்சி, உடலின் ஹார்மோன் மாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சத்தான உணவு தேவை. இதை பெண்கள் கண்டிப்பாக உணர்ந்து கொண்டு கல்வி, பதவி, முன்னேற்றம் ஆகியவற்றுடன் சத்தான உணவை சாப்பிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள் பயப்படக்கூடாது

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஏ.கனகேஸ்வரி:-

நமது அரசும், சட்டமும் பெண்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பினை கொடுத்து இருக்கின்றன. பெண்களுக்கு குடும்பம், சமூகம், பொதுவெளி என்று எங்கிருந்து ஒரு பாதிப்பு வந்தாலும் அவர்களை காக்கும் கரங்களாக சட்டம், சமூக நலத்துறை உள்ளது. பெண்கள் 181 என்ற கட்டணமில்லாத தொலைபேசியில் அழைத்தால் உதவிகள் கிடைக்கிறது.

பொதுவாக பெண்களின் வளர்ச்சியில் தடையாக இருப்பது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் ரீதியான மிரட்டலாகும். இதில் இருந்து பெண்கள் தங்களை எளிதில் மீட்டுக்கொண்டு வெளிவர ஏராளமான வழிகள் உள்ளன. குடும்பத்தில் உள்ள நபர்கள், உறவினர்கள், இணையவாசிகள், பொது இடங்கள் என்று எங்கிருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் உடனடியாக அவர்கள் சட்டத்தின் மூலம் மீட்பு பெற முடியும். எனவே பெண்கள் எந்த சூழலிலும் பயப்படக்கூடாது. 1098 என்ற எண் எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பானது. ஈரோடு மாவட்ட பெண்கள், குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 96552 20100 என்ற மொபைல் எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.

தைரியமுடன் பெண்கள் நடந்து கொள்ள, முதலில் நல்ல கல்வி கற்க வேண்டும். கல்வியுடன் தங்களுக்கு தாங்களே சுயஒழுக்க நெறியை வகுத்துக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் இல்லாத கல்வியால் எந்த பயனும் கிடையாது. கல்வி, வேலை, பதவி என்று உயர்ந்தாலும் பெண்களுக்கு எதிரான தடைகள் ஏதோ வடிவில் வந்து கொண்டே இருக்கிறது. அவற்றை உதறித்தள்ளிவிட்டு பெண்கள் கடந்து செல்ல வேண்டும்.

மிகப்பெரிய வளர்ச்சி

தமிழ்நாடு மின்சார வாரிய ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் கே.இந்திராணி:-

பெண் குழந்தைகள் ஒரு குடும்பத்தின் செல்வம். பெண் குழந்தைகள் இருக்கும் வீடு மகிழ்ச்சியான வீடாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் இல்லாத துறைகள் இல்லை என்கிற மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து இருக்கிறார்கள். இது மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் கல்வியில், பதவியில், பொருள் சம்பாதிப்பதில் உயர்வான இடத்தில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பினால் பதில் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்காது. மகிழ்ச்சிக்கு அடிப்படை அன்பு, பாசம் ஆகும். படிப்பும் பதவியும் மரியாதை தரும் என்றால் அன்பும் பாசமும்தான் மகிழ்ச்சி தரும். எனவே எந்த உயரத்துக்கு சென்றாலும் குடும்ப உறவுகளை மறக்கிற ஒரு நிலையை பெண்கள் எடுத்துவிடக்கூடாது. நாம் எத்தனை பெரிய பதவிக்கு போனாலும், நமக்கு பின்புலமாக இருந்து நமக்கு பலமாக இருப்பது குடும்ப உறுப்பனர்களின் அன்புதான். நான் சாதாரண அரசு பள்ளிக்கூடத்தில் படித்து இந்த உயர் பதவிக்கு வந்திருப்பது எனது குடும்பத்தினரின் அன்பும் பாசமும்தான். அதையே அனைவருக்கும் நானும் கூறுகிறேன்.

வட்டியில்லா கடன்

ஈரோடு நாச்சியப்பா வீதியில் டீக்கடை நடத்தி வரும் ஏ.கிரிஜா:-

எங்கள் குடும்ப தொழில் கைத்தறி நெசவாகும். சிறு வயதில் இருந்தே கைத்தறி நெசவு செய்து வந்தேன். அந்த தொழில் நசிவடையும் நேரத்தில், எனக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் டீக்கடை நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக இருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு டீ போடுவதற்கு பழகினேன். அப்போது எனக்கு சரியாக டீ போட வராது. பலரும் டீ குடித்து விட்டு திட்டி இருக்கிறார்கள். ஆனால், நான் விட்டு விடாமல் டீ போட்டு பழகினேன். தற்போது நான் போடும் டீயை கேட்டு வாங்கி குடிக்கிறார்கள். இதற்கு காரணம் நான் சரியாக டீ போடவில்லை என்று கூறியவர்கள்தான். ஒரு வேளை நான் மனம் வருத்தப்பட்டு தொடர்ந்து டீ போட பழகாமல் இருந்திருந்தால் இன்று டீக்கடை நடத்த முடியாத நிலையும் ஆகி இருக்கும். மகளிர் தினம் கொண்டாடும்போது எங்களை போன்ற மகளிர் நடத்தும் சிறு தொழில்களுக்கு வட்டி இல்லாத கடன் உதவியை அரசுகள் அளித்தால் எங்களாலும் விரைவாக முன்னேற முடியும்.

வேலை செய்தால் சாப்பாடு

கட்டிட சித்தாள் வேலை செய்து வரும் மொடக்குறிச்சி காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி ஆர்.சுமதி:-

நான் 18 ஆண்டுகளாக சித்தாள் வேலை செய்து வருகிறேன். முதலில் வேலைக்கு சென்றபோது ஒரு நாள் கூலியாக ரூ.70 கிடைத்தது. இப்போது ஒரு ஷிப்ட் (8 மணி நேரம்) வேலைக்கு ரூ.500 கூலி கொடுக்கிறார்கள். இதுவே ஆண்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. என்னைப்போன்ற பெண்கள் அனைவருக்கும் இதுபோன்று பாதி கூலிதான் கிடைக்கிறது. நாங்கள் கேட்டாலும் அதிக கூலி தரமாட்டார்கள். பெண்கள் என்றாலே கூலி குறைவுதான். ஆனால் எல்லா வேலைகளையும் ஆண்களுக்கு நிகராக செய்கிறோம். பெண்கள் தினம் என்றெல்லாம் சொல்கிறார்கள். எந்த தினமாக இருந்தாலும் நாம் வேலை செய்தால்தான் நமக்கு சாப்பாடு. பெண்கள் தினம் என்று பெண்களுக்கு என்ன சிறப்பு செய்கிறார்கள். எதுவும் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story