அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா? எனறு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள்தான் படிப்பார்கள். போதுமான வசதிகள் இருக்காது. அங்கு முறையாக ஆங்கிலம் கற்க முடியாது. ஆசிரியர்கள் ஏனோ தானோ என்றுதான் பாடம் நடத்துவார்கள். இவை எல்லாம் அரசுப் பள்ளிகளை நினைக்கையில் பல பெற்றோர்களின் மனங்களில் நிழலாடும் அச்சங்கள்.
இந்த அச்சங்கள் மாறவேண்டும். பெற்றோர்கள் மட்டுமே நினைத்து மாற்றிவிட முடியாது. அரசு நினைக்க வேண்டும். அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் நினைக்க வேண்டும். அர்ப்பணிப்பு மனதுடன் அறப்பணியாற்ற வேண்டும். அவ்வாறு நடக்கும் என்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே போகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
கல்வி நலத்திட்டம்
கல்விக்காக தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களையும், காலை மதிய உணவுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் வருகிற 28-ந்தேதி வரை 'அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசு பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதுபற்றி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அவற்றைக் காண்போம்.
தகுதியான ஆசிரியர்கள்
பெருந்துறை ஒன்றியம் வெட்டயன்கிணர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.பானுரேகா:-
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எங்கள் பள்ளிக்கூடத்திலேயே தனியார் பள்ளிக்கூடங்களை விட்டு வரும் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் தகுதியானவர்கள். அரசு நடத்தும் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் இருக்கிறார்கள். பாடம் எடுப்பது தொடர்பாக பல்வேறு பயிற்சிகளை தொடர்ந்து பெற்று வருகிறார்கள். வகுப்புகளின் தரம் மிகவும் நன்றாகவே இருக்கிறது.
செயல்வழி கற்றல் முறையில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இது ஆசிரிய- ஆசிரியைகளுக்குள் போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் குழந்தைகள்தான் நன்றாக படிக்கிறார்கள் என்று போட்டிப்போட்டுக்கொண்டு கற்பிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இணையதளத்தில் தங்கள் குழந்தைகளின் திறமையை வீடியோ பதிவேற்றம் செய்து வெளிக்கொண்டு வருகிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களில் இல்லாத ஒருகட்டமைப்பாக இது அரசுப்பள்ளிக்கூடங்களில் உள்ளது.
தனிக்கவனம்
அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லை என்பதால் பஸ் வசதி இருக்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். இன்னொன்று அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள் என்பதால் மற்றவர்களும் சுயகவுரவத்துக்காக அனுப்புகிறார்கள். ஆனால், இதை எல்லாம் கடந்து அரசு வழங்கும் திட்டங்கள் முழுமையாக குழந்தைகளுக்கு கிடைக்க அரசு பள்ளிக்கூடங்களை பெற்றோர்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு. காலை சிற்றுண்டி, மதியம் உணவு, சீருடை, பாடப்புத்தகங்கள் என்று அத்தனையும் இலவசம் என்பதை விட உயர் கல்விகளில் இடஒதுக்கீடு, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை என அரசு பள்ளிக்கூடங்களில் குறிப்பாக தமிழ் வழியில் படித்தால் ஏராளமான சலுகைகள் உள்ளன. அரசுப்பள்ளிக்கூடங்களிலும் ஆங்கில வழியில் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்க முடியாமல், பள்ளிக்கூடத்துக்கே போக மாட்டேன் என்று இருந்த சில மாணவர்கள், இன்று எங்கள் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவர்களாக இருக்கிறார்கள். மதிப்பெண் இல்லை என்று தனியார் பள்ளியில் வருந்திய சில மாணவர்கள் இன்று தேசிய போட்டித்தேர்வில் வெற்றி பெற்று ஊக்கத்தொகை பெறுகிறார்கள். அந்த அளவுக்கு நாங்கள் மாணவ- மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்துகிறோம்.
தனித்திறமைகள்
தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மா.லோகநாதன்:-
அரசுப்பள்ளிக்கூடங்கள் மீது பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழி கொண்டு வந்து இருப்பதுடன், மாணவ- மாணவிகளின் தனித்திறமைகளை சிறந்த முறையில் வெளிக்கொண்டு வருகிறோம். இது பெற்றோர்களை மிகவும் கவருகிறது. இங்கு ஒரு ஆண்டு முழுமையாக படித்த மாணவ- மாணவிகள் கண்டிப்பாக தனியார் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டார்கள். எனவே இந்த ஆண்டு இன்னும் அதிகமாக அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்.
உற்சாகம்
பொம்மலாட்டம் சிறப்பு கற்பித்தலுக்காக விருது பெற்ற நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி:-
ஸ்மார்ட் வகுப்புகள், அகன்ற திரை, தொடுதிரை வகுப்புகள் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ளன. இந்த ஸ்மார்ட் வகுப்புகளில் எந்த கட்டுப்பாடும் இன்றி குழந்தைகள் கல்வி பயில்கிறார்கள். எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 3-ம் வகுப்பு படிக்கும்போதே குழந்தைகளின் தனித்திறனை வெளிக்கொண்டு வருகிறது. இந்த வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் படிப்பதே குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் கற்பனைத்திறனுக்கு கட்டுப்பாடு இல்லை என்ற நிலை இருப்பதால் பேச்சு, பாட்டு என்று சிறப்பாக வளர்கிறார்கள். என் மேடை என் பேச்சு, பாடல் களம், கதை சொல்லும் களம் என்று வகுப்புகள் மிக உற்சாகமாக நடத்தப்படுகிறது. ஒரு முறை பெற்றோர்கள் இந்த வகுப்புகளை வந்து பார்த்தால் அரசுப்பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளையும் சேர்த்து விடுவார்கள். இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எனவே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
அங்கீகாரம்
ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மைக்குழு தலைவரும், இல்லத்தரசியுமான பி.ஹேமலதா:-
எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கொரோனா காலக்கட்டம் வரை 2 பேரும் தனியார் பள்ளிக்கூடத்தில்தான் படித்தனர். அரசு பள்ளிக்கூடங்கள் குறித்த தகவல்கள் எனக்கு மனநிறைவு தராததால் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியவில்லை. ஆனால் கொரோனா காலம் எனக்கு சிறந்த வாய்ப்பை அளித்தது. பல பள்ளிக்கூடங்கள் குறித்தும் விசாரித்து, எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் 2 மகள்களையும் சேர்த்தேன்.
இப்போது கல்வி மட்டுமின்றி அவர்களின் தனித்திறனாகிய நடிப்பு, பாட்டு, பேச்சு, நடனம் என்று அனைத்தையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு இடையே நடக்கும் போட்டிகளில் எனது மகள்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வருகிறார்கள். தனிப்பட்ட ஒரு மாணவன், மாணவி மீது கவனம் வைக்காமல் அனைத்து குழந்தைகளையும் ஒன்று போல பாவிக்கிறார்கள். பெற்றோர்களிடம் பள்ளி மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் கேட்கிறார்கள். நான் இந்த பள்ளிக்கூடத்தின் பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக இருக்கிறேன். தனியார் பள்ளிக்கூடத்தில் இப்படி ஒரு பெற்றோருக்கு அங்கீகாரம் வழங்கப்படுமா?.
எந்த நேரத்திலும் ஆசிரியர்களை தொடர்பு கொள்ள முடிகிறது. இதுவே தனியார் பள்ளிக்கூடத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். எனது மகள்கள் பிளஸ்-2 வரை அரசு பள்ளிக்கூடத்தில்தான் படிப்பார்கள்.
பரிசுகள்
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த எஸ்.சுஜிதா காயத்ரி:-
எனது 2 மகன்களை தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தேன். மூத்த மகன் இப்போதும் தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 முடித்து விட்டான். 2-வது மகனுக்கு சற்று பார்வை குறைபாடு உண்டு. பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவு செய்தபோது ஒரு தனியார் பள்ளிக்கூடத்துக்கு சென்றேன். அங்கு அவனது குறைபாட்டினை சுட்டிக்காட்டி மிக அநாகரிகமாக பேசிவிட்டனர். இந்தசூழலில் கொரோனா ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. எனது மகனை அருகில் இருந்து கண்காணிக்கும் வகையில் நான் நடத்தி வரும் விடுதி அருகே உள்ள எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன். நானே நம்ப முடியாத அளவுக்கு எனது மகனின் திறமையை வெளிக்கொண்டு வந்தனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்திய கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் 3 பரிசுகள் பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றான். இப்போது தனியார் தொலைக்காட்சி பாடல் போட்டியில் 2 சுற்றுகள் வெற்றி பெற்று இருக்கிறான். எங்களைப்போன்ற பெற்றோர்களுக்கு ஆதரவாக அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளன. விதவிதமாக உணவு, எந்த வேறுபாடும் இல்லாமல் பழகும் ஆசிரியைகள், சக குழந்தைகள் அரசு பள்ளிகளில்தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சமீப காலமாக அரசு பள்ளிக்கூடங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக என்ற ஒப்புமையை கடந்து தனியார் பள்ளிக்கூடங்களுக்கு மேலாக கற்பித்தல் என்கிற நடைமுறையை பல அரசுப்பள்ளிக்கூட ஆசிரிய- ஆசிரியைகள் மேற்கொண்டு இருப்பதால் அரசுப்பள்ளிக்கூடங்கள் மீதான பார்வையும் சற்று மாற்றம் அடைந்து உள்ளது.






