பெரும்பாலான ஐ.டி ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப ஆர்வம் காட்டவில்லை - ஆய்வில் தகவல்!


பெரும்பாலான ஐ.டி ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப ஆர்வம் காட்டவில்லை - ஆய்வில் தகவல்!
x
தினத்தந்தி 26 Jun 2022 11:01 AM GMT (Updated: 26 Jun 2022 11:01 AM GMT)

ஐடி நிறுவன பணியாளர்கள் ஒர்க் பிரம் ஹோம் - வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை விரும்புகின்றனர்.

பெங்களூரு,

ஐடி நிறுவன பணியாளர்கள் ஒர்க் பிரம் ஹோம் முறையை விரும்புகின்றனர். இதன்காரணமாக, ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை (ஒர்க் பிரம் ஹோம்) தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சி.ஐ.ஈ.எல் நிறுவனம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. 9 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வேலை செய்யும், முன்னணியில் உள்ள முதல் 10 ஐ.டி.நிறுவனங்கள் உட்பட 40 நிறுவனங்களில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், கிட்டத்தட்ட 50 சதவீத ஐடி நிறுவனங்கள் கடுமையாக முயற்சித்து ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வந்து பணிபுரிய அழைத்து பார்த்தும் பயனில்லை.கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 30 சதவீத நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன.

மீதமுள்ள நிறுவனங்கள் அலுவலகத்தில் இருந்து பணியைத் தொடங்கியுள்ளன அல்லது ஊழியர்களை அலுவலக இடங்களுக்கு விரைவில் அழைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையிலிருந்து மாறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

40 சதவீத நிறுவனங்கள் ஹைப்ரிட் முறையில் இயங்கி, ஊழியர்களை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யச் சொல்கிறது. ஹைபிரிட் சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு வரச் சொல்லியும், இந்த நிறுவனங்களில் 25 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளனர்.

மறுபுறம் சிறிய ஐடி நிறுவனங்களில் 30 சதவீத ஊழியர்கள் முழுநேர அடிப்படையில் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆக மொத்தம், தொழிலாளர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைப்பதில் முதலாளிகள் சிரமப்படுகின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசி பேர் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்;ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்பக் கட்டளையிடுவது ஐ.டி.துறையில் பெரும்பாலானோர் ராஜினாமா செய்யக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.


Next Story