பாலின பாகுபாட்டை உடைத்தெறிந்தவர்..!

பெங்களூருவைச் சேர்ந்த 28 வயது என்ஜினீயர் சோகைல் நர்குந்த், ஸ்வெட்டர் பின்னுவது பெண்களுக்கானது என்பதை உடைத்தெறிந்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்து வருவதோடு, மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வருகிறார். கொரோனா காலத்தில் சோகைல் வீட்டிலிருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தான் ஸ்வெட்டர் பின்னக் கற்றுக் கொண்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, ''ஆரம்பத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கவலைப்பட்டேன். அதனால் படிப்படியாக என் உடல்நிலை மோசமடைந்தது. மனநலம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டபோது பின்னலாடை பக்கம் திரும்பினேன். அந்தப்பணி என்னை அமைதிப்படுத்தியதை உணர்ந்தேன்.
ஆரம்பத்தில் நூல் மற்றும் குச்சிகளை வாங்கி யூடியூப்பைப் பார்த்து எப்படி பின்னுவது என்பதைக் கற்றுக்கொண்டேன். பின்னர் என் ஆர்வம் அதிகரித்ததால், இன்ஸ்டாகிராமில் ஒரு பின்னல் பயிற்சியாளரை அணுகினேன். அவர் எனக்கு நிறைய உதவினார். என் வேலையை என் தந்தையிடம் காட்ட வெட்கப்பட்டேன்.
இது பெண்களுக்கான வேலை, இதை ஏன் செய்கிறாய் என்று என் தந்தை திட்டிவிடுவாரோ என்று நினைத்தேன். ஆனால், என் வேலையைப் பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தது எனக்கு வியப்பை அளித்தது. ஆடைகளைப் பின்னுவதற்கும் பாலினத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். அவர் அளித்த உற்சாகம் என்னைத் திருப்திப்படுத்தியது. உடனே இன்ஸ்டாகிராமில் பக்கத்தைத் தொடங்கி நான் பின்னிய ஆடைகள், ஸ்வெட்டர்களை பகிர்ந்தேன். மேலும் வகுப்புகளும் எடுக்க ஆரம்பித்தேன்.
இன்றைக்கு கையால் பின்னிய ஆடைகளை இன்ஸ்டாகிராம் வழியே விற்பனை செய்து கொண்டிருக்கிறேன். பல பின்னலாடை பிரியர்களுக்கு எனது தயாரிப்பு பிடித்துப் போயிருக்கிறது.
என் தந்தை மற்றும் சகோதரியின் ஆதரவுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடிவு செய்தேன். ஒருவர் எங்கு வேண்டுமானாலும் செல்போனை பயன்படுத்துவது போல், நான் எங்கு சென்றாலும் ஆடையைப் பின்னுகிறேன். டாக்டருக்காக காத்திருக்கும் போதும், டாக்சி, பேருந்து, ரெயிலில் பயணிக்கும் போதும் நான் ஆடைகளைப் பின்னுகிறேன். இதனைச் செய்ய நிறைய தைரியம் தேவைப்பட்டது. அப்படி ஏற்பட்ட உத்வேகத்தில் இன்று நிலைத்து நிற்கிறேன். ஆடைகளை கையால் பின்னி வருவாய் ஈட்டுவது என் நோக்கம் அல்ல. 'எங்களுக்கும் ஆடை பின்ன ஆசை, ஆனால் வெட்கமாக இருந்தது. நீங்கள் எங்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறீர்கள்' என்று பலரும் பாராட்டுகிறார்கள்.
பாலின பாகுபாடு இல்லாத வீட்டில் தான் நான் வளர்ந்தேன். என் சகோதரிக்கு முன்பே நான் சமையல் கற்றுக்கொண்டேன். வாகனம் ஓட்டவும் நான் தான் முதலில் கற்றுக் கொண்டேன். இவையெல்லாம் பொதுவெளியில் ஆடையைப் பின்னுவதற்கான தைரியத்தை எனக்கு அளித்தன. ஆடை பின்னலில் ஈடுபடுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தெறிந்து, இதனை மேம்படுத்த விரும்புகிறேன்'' என்றார்.






