106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி சாதனை


106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி சாதனை
x

இங்கிலாந்தைச் சேர்ந்த கேட் ஜேய்டன் என்ற பெண்மணி 106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முழங்காலில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து ஓடி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் அதிக நாட்கள் மாரத்தான் ஓடிய பெண்மணி என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார். 35 வயதாகும் கேட் ஜேய்டன், தடகள வீராங்கனை. இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் வசிக்கும் இவர், அகதிகள் மறு வாழ்வுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் மாரத்தான் ஓட்டத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி இவரது மாரத்தான் பயணம் தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 42.1 கி.மீ (26.2 மைல்) தூரம் ஓடுவதை இலக்காக நிர்ணயித்திருக்கிறார். ஜேய்டன் முதலில் 100 மாரத்தான் ஓடுவதற்குத்தான் திட்டமிட்டிருக்கிறார். சிரியாவிலுள்ள அலெப்போ நகரம் முதல் இங்கிலாந்து வரை 4,216 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடுவதுதான் அவருடைய பயண இலக்கு. இந்த இரு நாடுகளுக்கு இடையே தான் பயணிக்கும் பாதையில் அகதிகள் இடம் பெயர்வு அதிகம் நடக்கிறது, என்கிறார் ஜேய்டன்.

அதனால்தான் அந்த பாதையை தான் தேர்ந் தெடுத்ததாக குறிப்பிடுபவர் பயணத்தை தொடங்கிய சில நாட்களிலேயே எதிர்பாராத அளவுக்கு நிதியை திரட்ட தொடங்கிவிட்டார். ஜேய்டனின் பயண நோக்கம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதும் ஏராளமானவர்கள் நிதி வழங்குவதற்கு முன் வந்தார்கள். தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மாரத்தான் ஓடுவதற்கு தீர்மானித்திருக் கிறார்.

மாரத்தான் மீதான ஆர்வமும், பயணத்தின்போது கிடைத்த உற்சாக வரவேற்பும் ஓடும் கால அளவை அதிகப்படுத்தி இருக்கிறது. எனினும் முழங்கால் காயம் ரூபத்தில் மாரத்தானுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது.

''106 மாரத்தான்களை தொடர்ச்சியாக ஓடுவது கடினமான விஷயம். மாரத்தான் ஓட தொடங்கிய 46-வது நாளில் முழங்காலில் வலி ஏற்பட தொடங்கியது. அது ஓட்டத்தை கடினமாக்கிவிட்டது. எனினும் பயணத்தை பாதியில் நிறுத்த எனக்கு மனமில்லை. வலியை பொருட்படுத்தாமல் ஓட்டத்தை தொடர்ந்தேன்'' என்கிறார்.

ஜெய்டன் 106 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி மாரத்தான் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். அது தற்போது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 95 நாட்கள் 95 மாரத்தான்களை நிறைவு செய்த அலிசா கிளார்க்கின் சாதனையை ஜெய்டன் முறியடித்துள்ளார்.

மேலும் 106 நாட்கள் மாரத்தான் பயணம் மேற்கொண்ட ஸ்காட்லாந்தின் பே கன்னிங்ஹாம்-எம்மா பெட்ரி தம்பதியரின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார். அந்த தம்பதியினரும் டிமென்ஷியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதற்காக மாரத்தானை தொடர்ந் திருக்கிறார்கள்.


Next Story