பாலிவுட்டை பதற வைக்கும் 'கே.ஜி.எப்.2'


பாலிவுட்டை பதற வைக்கும் கே.ஜி.எப்.2
x

ரூ.100 கோடியில் உருவான ‘கே.ஜி.எப்.’ இரண்டாம் பாகம், முதல் நாளில் உலக அளவில் ரூ.120 கோடியை வசூல் செய்தது. இந்தி மொழியில் மட்டும் ரூ.53.95 கோடியை முதல் நாளில் வசூலித்திருந்தது

ஒரு காலத்தில் இந்திய படங்கள் என்றாலே, அது இந்தி மொழியில் உருவாகும் பாலிவுட் படங்கள்தான் என்ற பிம்பம், உலக அரங்கில் உருவாக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த பிம்பம் கடந்த சில ஆண்டுகளாக உடைபட்டுக் கொண்டிருக்கிறது.

பாலிவுட் என்ற பிம்பம் உடைபட முக்கியமான காரணம், எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது உருவாக்கத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்தியாவின் மற்ற மொழித் திரைப்படங்களிலும் திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களாலும் உலகத்தரமான சினிமாக்களைத் தர முடியும் என்பதையும் பறைசாற்றியது. அதோடு தென்னிந்தியாவில் இருந்து உருவான ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம், இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் பல கோடிகளை அள்ளியது.

கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மற்றொரு படமான 'ஆர்.ஆர்.ஆர்.', முதல் நாளில் உலக அளவில் ரூ.238 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. அதில் இந்தியில் மட்டும் ரூ.20.7 கோடியை வசூலித்திருந்தது. இந்தப் படம் தென்னிந்திய மொழி களின் படைப்புகளுக்கான வீரியத்தை மீண்டும் ஒரு முறை பறைசாற்றியது. இந்தப் படத்திற்கு முன்னதாக 2021 டிசம்பர் மாதம் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லுஅர்ஜூன் நடிப்பில் 'புஷ்பா' திரைப்படம் வெளியானது. பான் இந்தியா படமாக உருவாகியிருந்த இந்தப் படமும், இந்தியில் நல்ல வசூலை எட்டியிருந்தது.

அவற்றையெல்லாம் கூட தட்டுத்தடுமாறி கடந்து வந்துவிட்ட பாலிவுட்டை, கன்னட மொழி திரைப்படமாக 'கே.ஜி.எப்.2' மிகப்பெரிய சரிவை சந்திக்கச் செய்திருக்கிறது. கடந்த மாதம் 14-ந் தேதி வெளியான இந்தத் திரைப்படம், பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது. கே.ஜி.எப். திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றிருந்த காரணத்தால், இரண்டாம் பாகத்திற்கு இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதை அந்தப் படக்குழுவினர் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.

ரூ.100 கோடியில் உருவான 'கே.ஜி.எப்.' இரண்டாம் பாகம், முதல் நாளில் உலக அளவில் ரூ.120 கோடியை வசூல் செய்தது. இந்தி மொழியில் மட்டும் ரூ.53.95 கோடியை முதல் நாளில் வசூலித்திருந்தது. தென்னிந்தியாவில் இருந்து இந்தியில் டப் செய்யப்பட்ட ஒரு படம் முதல் நாளில் அதிகபட்சமாக செய்த வசூலாக இது பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு வெளியான 'பாகுபலி-2' திரைப்படம் கூட, முதல் நாளில் இந்தியில் ரூ.41 கோடியை மட்டும்தான் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் கே.ஜி.எப்.2 திரைப்படம் ஏற்படுத்திய இந்த அதிரடி வசூல் வேட்டைதான், பாலிவுட்ைட கொஞ்சம் கலங்கச் செய்திருக்கிறது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது கே.ஜி.எப்-2 திரைப்படம் வெளியாகி, சுமார் 15 நாட்களுக்குப் பிறகு பாலிவுட்டில் தொடர்ச்சியாக இரண்டு பிரமாண்ட படங்கள் வெளியாயின. ஒன்று.. அஜய்தேவ்கன் மற்றும் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான 'ரன்வே 34'. மற்றொன்று டைகர் ஷெராப் நடிப்பில் உருவாகியிருந்த 'ஹீரோபன்ட்டி 2' திரைப்படம். கிட்டத்தட்ட தலா ரூ.70 கோடியில் இந்த இரண்டு படங்களும் தயாராகி இருந்தன.

கே.ஜி.எப்.2 திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்து விட்டிருந்தால், இந்தப் படங்கள் பெரிய வெற்றியைப் பெறும் என்று பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்த்த நிலையில், அந்தப் படங்களின் முதல் நாள் வசூல் அனைவரையும் வியப்பிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. 'ஹீரோபன்ட்டி 2' திரைப்படம், இந்தி மொழியில் முதல் நாள் வசூலாக ரூ.8 கோடியை வசூலித்திருக்கிறது.

அதேசமயம் 'ரன்வே 34' திரைப்படம் முதல் நாளில் இந்தி மொழியில் ரூ.3 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இரண்டு படங்களுமே இந்தி மொழியில் முதல் நாளில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கிறது.

அதே சமயம் மூன்று வாரங்களைக் கடந்திருக்கும் 'கே.ஜி.எப்.2' திரைப்படம், இந்தி மொழியில் இதுவரை ரூ.400 கோடியை வசூல் செய்திருப்பதோடு, இன்னும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் இதுவரை உலக அரங் கில் ரூ.1300 கோடி வசூலைக் கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story