டிக்டாக் செல்வந்தர்

அமெரிக்காவில் ஏழையாக வாழ்ந்த கபி லாமே, டிக்டாக் வாயிலாக ரூ.700 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.
டிக்டாக் மூலம் வாழ்ந்தவர்களும் உண்டு, வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. ஆனால், அமெரிக்காவில் ஏழையாக வாழ்ந்த கபி லாமே, டிக்டாக் வாயிலாக ரூ.700 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.
கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமானவர்தான் இந்த கபி லாமே. உணவகம், வீடுகளில் வேலை செய்து வந்தார். கொரோனா காலத்தில் வேலை இழந்ததும், விரக்தியடைந்த அவர் டிக்டாக் செய்யத் தொடங்கி, அதன்மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். சம்பாதிக்கவும் தொடங்கினார்.
இன்று உலகிலேயே டிக்டாக்கில் அதிக பின்தொடர்பாளர்களை (15 கோடி) கொண்டவர் இவர்தான். இந்த வாய்ப்பை கபி லாமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தனக்கென மேலாளர், அலுவலகம் உருவாக்கி, அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். ஆம்...! இவர் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு போடுவதற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர் வாங்குகிறார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி.
தன்னைப் போலவே இருக்கும் பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், சமூகவலைத்தள செல்வாக்கு பெற்றவர்களை இணைக்கும் அயன் கார்ப்பரேசன் என்னும் நிறுவனத்தை இவர் உருவாக்கியுள்ளார். அதன் மூலமும் பல விளம்பர வர்த்தகங்களை செய்கிறார்.
பொதுவாகவே திடீர் பணக்காரர்கள் ஆடம்பரத்தின் உச்சத்திற்குச் சென்று அதிகளவிலான பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். ஆனால் இவர் சற்று வித்தியாசமானவர். அதனால்தான் ரியல் எஸ்டேட்டில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார். கூடவே உணவகமும் நடத்தி வருகிறார். சில மென்பொருள் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
ஹாலிவுட்டில் காமெடியனாக வேண்டும் என்பதுதான் கபி லாமேவின் கனவு. இதற்காக நடை, உடையை மாற்றி வருகிறார். ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையிலிருந்து வந்ததால், மிகவும் பொறுப்புடனும், எதிர்காலத்தின் மீதான பயத்துடனும் நிதானமாகச் செயல்படுகிறார். கடந்த 2 ஆண்டுகளில் இவருடைய வாழ்க்கையை டிக்டாக் தலைகீழாக மாற்றியுள்ளது.






