வறுமையை அகற்ற தீப ஒளி ஏற்றுவோம்


வறுமையை அகற்ற தீப ஒளி ஏற்றுவோம்
x

தீமை ஒழிந்து நன்மை ஒளிர்ந்த நாளே ‘தீபாவளி’ என்று கொண்டாடப்படுகிறது.

சென்னை

இனிமையான நிகழ்வுகளை நிழலாடச் செய்பவை கொண்டாட்டங்கள். தனி நபர், குடும்பம், கிராமம், நகரங்கள் என்று கொண்டாட்டங்கள் பலதரப்பட்டவை. அவற்றில் நாடு முழுவதும் நடைபெறும் கொண்டாட்டங்களாக பண்டிகைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, தீபாவளி பண்டிகை. திகட்டும் இனிப்பு, நூல் மணம் மாறாத புத்தாடை, காது மற்றும் கண்களுக்கு விருந்தாகும் பட்டாசு சத்தம் என்று, தீபாவளியின் இனிமையே தனிதான்.

இந்துக்கள் மட்டுமின்றி எல்லா மதத்தினரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பண்டிகையாகவே தீபாவளி உள்ளது. இந்தியாவைத் தாண்டி, உலக நாடுகளில் இந்தியர்கள் வாழும் இடங்களில் எல்லாம் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகவே தீபாவளி இருக்கிறது.

பூமாதேவியின் அவதாரமான சத்யபாமாவின் மூலமாக நரகாசுரனைக் கொன்று, மனிதர்களையும், தேவர்களையும் கிருஷ்ணர் காத்து நின்ற தினம் தீபாவளி என்பது பொதுவான ஆன்மிக கருத்து. இலங்கை யுத்தத்தில் ராவணனைக் கொன்று, சீதையுடன் ராமபிரான் அயோத்தி திரும்பிய நாளே தீபாவளி என்றும் புராணக் கதைகள் தீபாவளியின் கொண்டாட்டத்துக்கான காரணத்தைச் சொல்கின்றன.

சீக்கியர்கள் பொற்கோவில் கட்டுமானப் பணி தொடங்கிய நாள் என்றும், சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த நாள் என்றும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். வட இந்தியாவில் தீபாவளி நாளில் சிறப்பு பூஜை செய்து தீப வழிபாடு முடித்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறார்கள். தமிழ்நாட்டில் முதல்நாள் இரவிலேயே பட்டாசு வெடித்து உற்சாகம் களைகட்டும்.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தங்கள் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடாதா என்று ஏங்கித் தவிப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். பட்டாசு, இனிப்பு, புத்தாடை என்ற மற்றவர்களின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், 'இன்று ஒருநாள் நல்ல உணவு கிடைக்காதா?' என்று எதிர்பார்த்திருக்கும் வறுமை மிகு குடும்பங்களும் கூட நம் அருகிலேயே இருக்கின்றன. எனவே உற்சாகம் தரும் இந்த நல்ல நாளில், பகிர்ந்து வாழ்தல் என்ற நல்ல வழக்கத்தையும் தொடங்குவது சிறப்பானதாக இருக்கும்.

ஆடை, அணிகலன்களை அனைவருக்கும் பகிர்வது என்பது இயலாத காரியம். ஆனால் நம் வீட்டில் செய்யும் இனிப்புகள், உணவுகளை இயலாதவர்களுக்கு வழங்க முயற்சிக்கலாம். வறுமையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, வசதி இருந்தும் உறவுகள் இல்லாது தனித்து இருப்பவர்களும் கூட ஒரு வகையில் வறுமையானவர்களே. அவர்களின் முகத்திலும், அகத்திலும் மகிழ்ச்சி ஏற்படும் வகையில், நாங்கள் இருக்கிறோம் என்று அக்கம் பக்கத்தவர் இந்த தீபாவளி தினத்தில் தீப ஒளியை ஏற்றலாம்.

தீமை ஒழிந்து நன்மை ஒளிர்ந்த நாளே 'தீபாவளி' என்று கொண்டாடப்படுகிறது.தீபாவளியைப் பற்றி புராணங்கள் பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; நாம் இந்த நாளில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மனிதம் பற்றி சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம். இல்லாதவர்களின் வாழ்விலும், இயலாதவர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி தீபத்தையும், முகத்தில் மத்தாப்பு சிரிப்பையும் வரவழைக்க முயற்சி செய்வோம். அனைவருக்கும் தீபாவளி தித்திப்பாக அமையட்டும்.


Next Story