பளு தூக்கும் வீராங்கனையின் வாழ்க்கை பின்னணியும்.. சேவையும்..!


பளு தூக்கும் வீராங்கனையின் வாழ்க்கை பின்னணியும்.. சேவையும்..!
x

கிராமப்புற சிறுமிகளுக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்து, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்களை பெற பின்புலமாக இருந்து ஊக்கப்படுத்தி வருகிறார், சர்வதேச பளுதூக்கும் வீராங்கனை பூனம் திவாரி.

45 வயதாகும் பூனம் திவாரி உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டோய் பகுதியை சேர்ந்தவர். சர்வதேச அளவில் பளுதூக்கும் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். பளுதூக்கும் வீராங்கனையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு கடும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

சர்வதேச போட்டிக்குள் காலடி எடுத்து வைப்பதற்குள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து விட்டார். தான் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்களை எல்லாம் அனுபவ பாடமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை சிறு வயதிலேயே பெற்றுவிட்டார். அதன் காரணமாக, தன்னை போல் பளு தூக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் கிராமப்புற சிறுமிகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்தார்.

யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியொரு பெண்மணியாக ஏழை சிறுமிகளுக்கு பயிற்சி அளித்தார். இவரிடம் பயிற்சி பெற்ற சிறுமிகளில் பலர், தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ளனர். அதனைத்தான் தன்னுடைய உழைப்புக்கு கிடைத்த பரிசாக எண்ணி பெருமிதம் கொள்கிறார்.

பூனம் திவாரி, 2002-ம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த சர்வதேச போட்டியில் முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் பெற்றார். அதன்பிறகு பல பதக்கங்களைக் குவித்துள்ள பூனம் திவாரி, சர்வதேச, தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் நடுவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, தன்னுடைய சொந்த ஊரான ஹார்டோய் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு தொடர்ந்து பளுதூக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அவர்களில் பெரும்பாலானோர் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் என்பதால், இலவசமாகவே பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற சிறுமிகளில் 23 பேர் தேசிய அளவிலும், 24 பேர் மாநில அளவிலும் பளுதூக்கும் போட்டியில் சிறந்து விளங்குகின்றனர்.

கிராமப்புற பெண் குழந்தைகளை சிறந்த வீராங்கனைகளாக உருவாக்கி சாதிக்க வைத்துக் கொண்டிருக்கும் பூனம் திவாரியின் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. அந்த கசப்பான அனுபவத்தை பூனம் விவரிக்கிறார்…

"என்னோடு பிறந்தவர்கள் 5 பேர். நடுத்தர குடும்பம்தான். 9-ம் வகுப்பு படித்தபோதே நானே சம்பாதித்து என் படிப்பு செலவுகளை பார்த்துக் கொண்டேன். கடந்த 2002-ம் ஆண்டு ஆசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்றேன்.

அந்த சமயத்தில்தான் என் தந்தை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எந்நேரமும் அவர் இறந்து போகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்தச் சூழ்நிலையிலும், நான் முன்னோக்கிச் செல்ல என் தந்தை ஊக்கமளித்தார். அப்போது, தென் கொரியாவுக்குச் சென்று போட்டியில் கலந்துகொள்ள ஹார்டோய் கிராம மக்கள்தான் பணம் கொடுத்து உதவினர். அந்த இக்கட்டான சூழலில் சர்வதேசப் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வெற்றி பெற்றதன் மூலம், கனவு நினைவாகியது. சாம்பியன் பட்டம் வென்ற எனக்கு கிடைத்த பணத்தில் தந்தைக்கு சிகிச்சை அளித்தேன்.

எனது வெற்றிக்கு என் தந்தை ராஜ்தார் மிஸ்ராவே காரணம். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். சிறுமியாக இருந்தபோதும், திருமண வயதிலிருந்தபோதும், அவர்தான் என்னைப் பளுதூக்கும் பயிற்சி பெற அனுமதித்தார்.

தன் மகளை ஒரு விளையாட்டு வீராங்கனையாக அனுமதித்த தற்காக, பழமைவாத ஆணாதிக்க சமுதாயத்தினரின் துன்புறுத்தலுக்கு என் தந்தை ஆளானார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

என் தந்தையும் பளுதூக்கும் வீரர்தான். ஆரம்பத்தில் அவர்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். இன்றைக்கு நான் சாதித்ததற்கு அவரே காரணம்" என்றார் கண்கலங்கியபடி.

இவரிடம் பயிற்சி பெறும் 22 வயது சைலஜா கூறுகையில், "பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை எங்கள் கிராமத்தில் ஊக்கப்படுத்துவதில்லை. குறிப்பாக, 4 வயது குழந்தைக்கு தாயான என்னைப் போன்றோர் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறோம். என் உறவுப் பெண் ஒருவர் பூனம் திவாரியிடம் பயிற்சி பெற்று தேசிய அளவில் பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டார். அதனால், பூனம் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் பளுதூக்கும் பயிற்சிக்குச் செல்ல குடும்பத்தினர் அனுமதித்தனர்" என்றார்.

17 வயதாகும் மற்றொரு வீராங்கனை பலாக் சிங் கூறுகையில், "பூனம் திவாரியிடம் கடந்த 5 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றேன். இதன் காரணமாக தேசிய அளவில் தங்கப்பதக்கங்களை வென்றேன். நான் வெற்றியடைந்ததை பார்த்து, என் அக்கா, தோழி மற்றும் அத்தை ஆகியோரும் தற்போது பளுதூக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்'' என்றார்.

தான் சந்தித்த இடர்பாடுகள், கஷ்டங்களை கிராமப்புற குழந்தைகள் எதிர்கொள்ளக் கூடாது என்பதே பூனம் திவாரியின் குறிக்கோளாக இருக்கிறது. கிராமங்களில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிற திறமைசாலிகளை, தேசத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் பூனம் திவாரியை பலரும் மனமார பாராட்டுகிறார்கள். அவரை நமது நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கிறார்கள்.

இவரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஹார்டோய் மைதானத்தில் பயிற்சியாளர் வேலை கிடைத்திருக்கிறது. அந்த ஊக்கம், பூனம் திவாரியை உற்சாகமாக இயங்க வைப்பதுடன், அவரது பொருளாதார சூழ்நிலையையும் சமாளிக்க உதவுகிறது.

''பளுதூக்கும் பயிற்சி பெற்றபோது, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற லட்சியம் எல்லாம் என்னிடம் இருந்ததில்லை. என் குடும்பத்தின் பொருளாதார சூழல் மோசமாக இருந்ததால் அதை சீராக்க, ஒரு அரசு வேலை தேவைப்பட்டது. அப்படிதான் பளுதூக்கும் பயிற்சிக்கு வந்தேன். ஆனால் அது கொஞ்சம் தாமதமாக கிடைத்திருக்கிறது'' என்ற ஆதங்கத்துடன், விடைபெற்றார்.


Next Story