நீரிழிவு நோயை தடுக்கும் வாழ்க்கை முறைகள்


நீரிழிவு நோயை தடுக்கும் வாழ்க்கை முறைகள்
x

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 7.7 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது நீரிழிவு நோய்க்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது. குளுக்கோஸ் அளவை சரியாக நிர்வகிக்காவிட்டால் இதய நோய், சிறுநீரகம் சார்ந்த நோய் பாதிப்புகள், பார்வை இழப்பு உள்பட பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீரிழிவில் பல வகைகள் இருந்தாலும் டைப்-1, டைப்-2 ஆகிய இரு நீரிழிவு வகைகள் பொதுவானவை. இவற்றுள் டைப்-1 நீரிழிவு நோய் பெரும்பாலும் குடும்பத்தில் ஏற்கனவே நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர் மூலம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர், இளைஞர்கள் போன்றவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. டைப்-2 நீரிழிவு நோயை பொறுத்தவரை உடல் பருமன்தான் மூல காரணமாக அமைந்திருக்கும். குடும்பத்தினர் மூலமும் பாதிப்பு உண்டாகும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். அதிலும் டைப்-1 நோய் பாதிப்பு திடீரென்று ஏற்படக்கூடியது. துரதிருஷ்டவசமாக அதில் இருந்து மீண்டுவிட முடியாது. நீரிழிவு நோய் அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் இன்சுலின், மருந்து, உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் அதை நிர்வகிக்கலாம். அதேவேளையில் சரியான வாழ்க்கை முறையை கடைப் பிடிப்பதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயின் வீரியத்தை ஓரளவுக்கு தடுத்துவிடலாம். அதிலும் மரபணு ரீதியாக டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்பை எதிர்கொண்டால் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

எடை இழப்பு: உடல் பருமன் கொண்டிருப்பது டைப்-2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும் என்பதால் உடல் எடையை கட்டுக்கோப்புடன் பராமரிப்பது அவசியமானது. அதிக உடல் எடை கொண்டவர்கள் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமானது. உடற்பயிற்சி அதற்கு கை கொடுக்கும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருக்கும் சூழலை தவிர்ப்பதும் நல்லது.

சமச்சீர் உணவு: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளடங்கிய சமச்சீர் உணவு அத்தியாவசியமானது. எனவே, மேக்ரோ நியூட்ரியண்ட்கள் உள்ளடக்கிய உணவை உண்ணுங்கள். பருவகால பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி: டைப்-2 நீரிழிவு நோயை தடுக்க உடல் செயல்பாடும் முக்கியமானது. விறுவிறுப்பாக நடைப் பயிற்சி, நீச்சல், யோகா போன்றவற்றை பின்பற்றலாம். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்த உடல் இயக்க செயல்பாடாக அமையும். தினமும் ஏதாவதொரு உடற்பயிற்சி செய்து வருவதும் பலன் கொடுக்கும். இவை நீரிழிவு நோயில் இருந்து பாது காப்பதோடு மகிழ்ச்சியான வாழ்க்கை முறைக்கும் வித்திடும்.

மன அழுத்தம்: நீரிழிவு நோய்க்கு மன அழுத்தமும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. எனவே மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆழ்ந்த சுவாசம், தியானம் மற்றும் யோகா ஆகியவை மன அழுத்தத்தை நிர்வகிக்கும் சில வழிமுறைகளாக அமைந்திருக்கின்றன.

தூக்கம்: சரியான தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாகும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியமானது. ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் அறையின் சூழல் அமைந் திருக்க வேண்டும். இரவு நேரத்தில் காபின் கலந்த பானங்களை தவிருங்கள். எளிதில் செரிமானமாகும் உணவு களையே சாப்பிடுங்கள்.


Next Story