அமேசான் மழைக்காடுகளில் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி "பண்டைய கால நகரங்கள்" கண்டுபிடிப்பு!


அமேசான் மழைக்காடுகளில் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பண்டைய கால நகரங்கள் கண்டுபிடிப்பு!
x

லேசர் தொழில்நுட்பமான ‘லிடார்’ முறையை பயன்படுத்தி, அமேசானில் பண்டைய கால நகரங்கள் உண்மையில் இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரியோ டி ஜெனிரோ,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகள் பூமியின் மிகவும் சுவாரஸ்யமான இடங்களில் ஒன்றாகும். இப்பகுதி பல இழந்த நகரங்களையும் கொண்டுள்ளது. அவற்றை பல நூற்றாண்டுகளாக வல்லுநர்கள் பலர் தேடி வருகின்றனர்.

அமேசானில் நடத்தப்பட்ட முந்தைய ஆராய்ச்சிகளால், 1,700 சதுர மைல்களுக்கு மேல் நூற்றுக்கணக்கான தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் வெளியே தெரிய வந்தன.

அப்படி தொலைந்துபோன நகரங்களில் ஒன்றாக 'தங்க நகரம்' என்றழைக்கப்படும் எல் டொராடோ கூறப்படுகிறது. இந்த நகரத்தை பற்றி அறிய, பல ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள மழைக்காடுகளுக்குள் ஆய்வு நடத்தினர். ஆனால், அவையனைத்தும் பயனற்றதாகவே அமைந்தன.

ஆனால் இப்போது, பிரபலமான லேசர் தொழில்நுட்பமான 'லிடார்' முறையை பயன்படுத்தி, அமேசானில் பண்டைய கால நகரங்கள் உண்மையில் இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமேசான் காடுகளுக்கு மேல், சுமார் 600 அடி உயரத்தில் உள்ள ஹெலிகாப்டர்களில் இருந்து ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் இது தெரிய வந்துள்ளது.


இந்த கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களால் நிர்வகிக்கப்பட்ட ஆரம்பகால 'நகர்ப்புறம்' இருந்ததை இது காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இது குறித்து எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோஸ் இரியார்டே கூறுகையில், "பொலிவியன் அமேசானின் இந்த பகுதியில், கொலம்பியனுக்கு முந்தைய சமூகங்கள் இருந்ததாக, நாங்கள் நீண்ட காலமாக சந்தேகித்தோம். ஆனால் அதற்கான ஆதாரங்கள், இந்த அடர்ந்த காடுகளின் கீழ் மறைக்கப்பட்டுள்ளன. அங்கு நேரில் சென்று பார்ப்பது கடினம்.

இப்போது எங்கள் நவீன லிடார் அமைப்பு மூலம், பண்டைய காலத்தில் கட்டப்பட்ட மொட்டை மாடிகள், நேரான தரைப்பாதைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகியவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

மேலும், லேசர்கள் மூலம் பல்வேறு பகுதிகளில், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளை இணைக்கும் கால்வாய்களின் அமைப்பு இருந்ததும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 'நேச்சர்' இதழில் இது குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.


Next Story