இந்திய த்ரோ பால் அணியை வழிநடத்தும் மதுரை மங்கைகள்

எறிபந்து (த்ரோ பால்), இப்போது பிரபலமாகிவரும் விளையாட்டுக்களில் ஒன்று. இந்த விளையாட்டில், மதுரையை சேர்ந்த இரு வீரமங்கைகள் சாதனை படைத்து வருகிறார்கள். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் இவர்கள் நிகழ்த்திய சாதனைகள், தற்போது இந்திய த்ரோ பால் அணியில், இடம்பெற செய்திருக்கிறது.
மதுரையை சேர்ந்த இளம் என்ஜினீயர்களான துர்கா, சினேகா ஆகியோர்தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். அடுத்த மாதம் நேபாளத்தில் நடக்கும் உலக அளவிலான எறிபந்து போட்டியில், இந்திய அணிக்காக விளையாட இருப்பதுடன், இந்திய அணியை வழிநடத்தவும் இருக்கிறார்கள். ஆம்..! துர்கா கேப்டனாகவும், சினேகா துணை கேப்டனாகவும் அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
இதுபற்றி துர்கா, சினேகா ஆகிய இருவரையும் சந்தித்து பேசினோம்..
நான் மதுரை காளவாசலை சேர்ந்தவர் என துர்காவும், பீ.பி.குளத்தை சேர்ந்தவர் என சினேகாவும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு, ஒருசேர பேட்டியை ெதாடர்ந்தார்கள்.
"பள்ளிப்பருவத்தில் இருந்து நாங்கள் 'த்ரோ பால்' விளையாடுகிறோம். வெவ்வேறு பள்ளியில் படித்ததால், எதிரெதிர் அணியில் விளையாடினோம். இருப்பினும் நாங்கள் இருவரும், விருதுநகர் காரியாப்பட்டி சேது என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த பிறகு, ஒரே அணியில் விளையாட தொடங்கினோம். எங்கள் கல்லூரியில் முதலில் த்ரோ பால் போட்டி கிடையாது. எங்களின் ஆர்வ மிகுதியால் 'த்ரோ பால்' போட்டியை கொண்டு வர வைத்தோம். தொடர்ச்சியாக போட்டியில் வெற்றி பெற்றோம்'' என்று உற்சாகமுடன், பேசினார்கள். இவர்கள் இருவருமே கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து, நல்ல வேலைக்கும் தேர்வாகி இருக்கிறார்கள். அதோடு த்ரோ பால் விளையாட்டிலும் பட்டைய கிளப்புகிறார்கள்.
''கைப்பந்து போட்டிக்கும், த்ரோ பால் போட்டிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பார்ப்பதற்கு எளிமையானதாக தோன்றினாலும் கொஞ்சம் கடினமானது. நிறைய விதிமுறைகள் இருக்கிறது. ஒரு அணியில் 9 பேர் விளையாட வேண்டும். இந்த 9 பேரும், ஆடுகளத்தில் 9 இடங்களில் நின்று விளையாடுவார்கள். வேகமாக வரும் பந்தை கைகளால் பிடித்து, அதே வேகத்தில் மறு பக்கத்தில் இருக்கும் அணிக்கு எறிய வேண்டும்'' என போட்டியின் விதிமுறைகளை விளக்கும், இவர்கள், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எறிபந்து விளையாடி வருகிறார்கள். அந்த அனுபவமே, இவர்களை தேசிய அணிக்கு அழைத்து சென்றிருக்கிறது.
''த்ரோ பால் அணியில் 14, 17, 19 வயதிற்குள், 19 வயதிற்கு மேல் என்ற 4 பிரிவுகள் இருக்கிறது. 19 வயதிற்கு மேற்பட்டவர்களின் பிரிவில் நாங்கள் விளையாடுகிறோம். கடந்த ஏப்ரல் மாதம் தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றோம். அதில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடி தங்கம் வென்று உலக போட்டிக்கு நாங்கள் இருவரும் தகுதி பெற்றோம்'' என்றனர்.
ஏற்கனவே பல போட்டிகளில் கேப்டன் பொறுப்பை வகித்ததால், இந்திய அணிக்கும் தலைமை தாங்கும் வாய்ப்பு இவர்களில் துர்காவிற்கு கிடைத்திருக்கிறது. அதேபோல இந்திய அணியின் துணை கேப்டனாக சினேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களின் ஆலோசனையின் பேரில் தான் மற்ற வீரர்கள் விளையாட இருக்கிறார்கள் என்பது தமிழகத்திற்கு கூடுதல் பெருமை தான்.
''உலக அளவிலான போட்டியில் தேர்வாகி இருப்பதால் வருகிற 15-ந் தேதி மதுரையில் இருந்து டெல்லிக்கு செல்கிறோம். இதுபோல் மற்ற மாநில வீராங்கனைகளும் டெல்லிக்கு வருவார்கள். அவர்களுடன் இணைந்து 15 நாட்கள் சிறப்பு பயிற்சி மேற்கொள்வோம். அதன் பின்னர் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நடக்க இருக்கும் சர்வதேச போட்டிக்காக, நேபாளத்திற்கு செல்ல இருக்கிறோம். தற்போது தினமும் காலை, மாலையில் பயிற்சி மேற்கொள்கிறோம். கல்லூரி நாட்களில், காலை நேரம் மட்டுமின்றி மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை விளையாடுவதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் எங்களுக்கு சிறப்பு அனுமதி அளித்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டோம். அதன் மூலமே இந்த இடத்தை பிடிக்க முடிந்தது. இதற்கு எங்கள் பயிற்சியாளர் செந்தில்குமார் முக்கிய காரணம்'' என்றவர்கள், ஏழ்மையான பின்னணியில் வளர்ந்தவர்கள்.
இவர்களில் துர்கா, சிறுவயதிலேயே தந்தையின் இழப்பை தாங்கிக்கொண்டு, அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். இவருக்கு காயத்ரி என்ற தங்கையும் உள்ளார். அதேபோல சினேகாவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவரே. இருப்பினும் இவ்விருவரின் கனவுகளை மெய்பட வைக்கும் உற்சாகம், அவர்களது குடும்பத்தினரிடம் இருக்கிறது. அதனால்தான், பல தடைகளை தாண்டியும், முன்னேறி இருக்கிறார்கள். இவர்கள் தங்களது எதிர்கால இலக்கு பற்றி பகிர்ந்து கொண்டனர்.
''எங்கள் இருவருக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் ஒரே இலக்கு. அந்த இலக்கை நோக்கி தான் பயணித்தோம். தற்போது அதில் பாதியை நிறைவு செய்திருக்கிறோம். அடுத்தது, இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்று கொடுக்க வேண்டும் என்பது தான் இப்போதைய இலக்காக இருக்கிறது. வேறு எதையும் பற்றியும் யோசிக்கவில்லை'' என்று பொறுப்பாக முடித்தனர்.
தோழிகளாக இருக்கும் இவர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.. உலக அளவிலும் இந்திய அணி தங்கம் வெல்லட்டும்.






