பால்கனியில் மினி வனத்தை வடிவமைத்த இளம் விஞ்ஞானி


பால்கனியில் மினி வனத்தை வடிவமைத்த இளம் விஞ்ஞானி
x

கொரோனா பரவலால் நடைமுறைப் படுத்தப்பட்ட வீட்டில் இருந்து அலுவலக பணி சூழல்தான் இந்த மாற்றம் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது. வீட்டு பால்கனியில் மினி காட்டை வளர்த்தெடுத்த இளம் பெண்ணின் பெயர், மானசி தனுகே.

2016-ம் ஆண்டு வரை ஒரு செடி கூட நடவு செய்யாதவர் இன்று தனது வீட்டு பால்கனியில் மினி காட்டையே உருவாக்கி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட பூக்கும், படரும் செடி வகைகளால் வீடே வனப்பிரதேசம் போல காட்சி அளிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். 'டேட்டா சயின்டிஸ்ட்' எனப்படும் தரவுகளை ஆராயும் விஞ்ஞானியான இவர், வீட்டில் இருந்து பணியை தொடர்ந்தபோது அமைதியான சூழல் கொண்ட இடத்தை தேடி இருக்கிறார். பால்கனிதான் சவுகரியமான இடமாக தெரிந்திருக்கிறது. இதையடுத்து வீட்டில் உள்ள இரண்டு பால்கனிகளிலும் செடிகள் வளர்க்க தொடங்கி இருக்கிறார். அழகுக்காக ஓரிரு செடிகள் வளர்ப்பதில் மானசிக்கு விருப்பமில்லை. மனதுக்கு பிடித்தமான செடிகளை வளர்க்க வேண்டும் என்பதை விட மன ஆறுதலை தரும் தோட்டமாக அமைந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். 150 சதுர அடி மற்றும் 180 சதுர அடி கொண்ட பால்கனிகளில் செடிகளை நட்டு பராமரித்தவர் மினி காட்டையே உருவாக்கி விட்டார்.

''வேலை செய்யும்போது மனம் அமைதி அடைய வேண்டும். அதற்கு ஏற்றவகையில் சுற்றுச்சூழல் அமைந்திருக்க வேண்டும். தோட்டம்தான் எனக்கு ஆறுதல் அளித்தது. பசுமை படர்ந்த செடிகளுக்கு இடையே அமர்ந்திருக்கும்போது இனிமையான சந்திப்புகள் நடந்தேறும். எனக்கு சிறுவயதில் இயற்கை மீது நாட்டம் இருந்ததில்லை. 2016-ம் ஆண்டு வரை ஒரு மரக்கன்று கூட நான் என் கையால் நட்டதில்லை. என் வாழ்க்கை துணைவர் தான் என்னில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் வன விலங்கு புகைப்பட கலைஞர். நாங்கள் இருவரும் சேர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு பயணம் செய்வோம். அப்போது தான் இயற்கை மீதும், தோட்டக்கலை மீதும் மெல்ல ஆர்வம் ஏற்பட தொடங்கியது. வன பகுதியில் காணப்படும் சில தாவரங்களை வளர்ப்பதற்கு விரும்பினோம்.

அவை வளர்வதற்கு உகந்த சூழல் கொண்ட இடங்கள் குறித்து ஆராய்ந்தோம். நர்சரிக்கு சென்றபோது சில செடிகளை வாங்கி வந்தோம். அவற்றை வீட்டில் வளர்த்தபோது சில நாட்களில் வாடி போய்விட்டது. அப்போதுதான் ஒவ்வொரு செடிகளின் வளர்ப்பு முறையும், நடவு முறையும் வேறுபடும் என்பதை புரிந்து கொண்டோம். நான் டேட்டா விஞ்ஞானியாக இருப்பதால் பழைய தரவுகளை எல்லாம் மாற்றியமைத்து புதிதாக உருவாக்க வேண்டும் என்று விரும்புவேன். அதே கோட்பாட்டையே செடி வளர்ப்புக்கும் பயன்படுத்தினேன். ஆரம்ப காலத்தில் செடி வளர்த்தபோது எதிர்கொண்ட பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தேன். செடிகளில் அதிக சூரிய ஒளி பட்டதால் விரைவாக இலைகள் உலர்ந்து போனது. அதிக அளவு தண்ணீர் ஊற்றுதல், பூச்சி தாக்குதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்பட்டன.

முதலில் செடிகளின் வளர்ச்சிக்கு உகந்த உரங்களை தேர்ந்தெடுத்தேன். அதிக சூரிய ஒளி படுவதை தடுக்க நிழல் பாங்கான இடங்களுக்கு செடிகளை மாற்றி அமைத்தேன். பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த வேம்பு நீரை பயன்படுத்தினேன். முதலில் சோதனை அடிப்படையில் இந்த யுக்தியை பின்பற்றினேன். அந்த காலகட்டம் ஒவ்வொரு தாவரங் களின் தன்மையையும் புரிந்து கொள்ள உதவியது. உதாரணமாக சதைப்பற்றுள்ள தண்டு கொண்ட தாவரங்களுக்கு தினசரி நீர் பாய்ச்ச தேவையில்லை'' என்பவர் பால்கனி பகுதி முழுமையும் செடிகள் வளர்ப்பதற்கு ஏதுவாக சில மாற்றங்களை செய்தார்.

''பால்கனி தோட்டத்தில் செடிகள் வளர்ப்பதற்கு நிறுவிய மரச்சாமான்கள் மழை நீரில் சேதமடைந்து போனது. அதனால் வெயிலுக்கும், மழைக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய கட்டமைப்புகளை நிறுவினோம். கொரோனா ஊரடங்கு காலகட்டம் செடி வளர்ப்புக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. செடிகளுடன் கூடுதல் நேரம் செலவிட முடிந்தது. அதனால் விதவிதமான செடிகளை வாங்கி வளர்க்க தொடங்கினோம். தற்போது பூகெய்ன்வில்லியா, ஜெரனியம், தன்பெர்கியா, கர்வி மற்றும் மார்னிங் குளோரி போன்ற 10 வகையான பூச்செடிகள் உள்ளன. பிலோடென்ட்ரான்கள், போத்தோஸ், டிலான்சியா போன்ற பல வகையான தாவரங்களும் உள்ளன'' என்கிறார்.

மானசியின் பால்கனி தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன. அவை படர்ந்து விரிந்து மினி காட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வை தருகின்றன. அவை சுத்தமான காற்றை சுவாசிக்க உதவுவதோடு அமைதியான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன என்றும் சொல்கிறார்.

''ஒவ்வொரு செடியுடனும் சில நிமிடங்களையாவது செலவிட வேண்டும். இலைகள் மஞ்சள் நிறத்திலோ அல்லது உலர்ந்தோ இருந்தால் அதனை நீக்கி விட வேண்டும். எனக்கு பல்வேறு விதமான செடிகளை ஒரே சமயத்தில் வளர்ப்பதில் விருப்பமில்லை. ஒரே செடியை அதிக எண்ணிக்கையில் வளர்க்க விரும்புகிறேன். என் வீட்டில் அவை நன்றாக வளர்த்தால் அதனோடு நெருங்கிய இனங்களை வளர்க்க தொடங்கி விடுவேன்.

இப்போதெல்லாம் நான் உரங்களை வெளியில் வாங்குவதில்லை. உரம் தயாரிக்க போதுமான நேரம் கிடைக்கிறது. சமையலறை கழிவுகள், காய்ந்த இலைகள் மற்றும் கோகோ பீட் ஆகியவற்றை உர தயாரிப்புக்கு பயன்படுத்துகிறேன். செடிகளுக்கு மத்தியில் இருக்கும்போது உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக உணர்கிறேன். அந்த சூழலில் வேலை பார்ப்பதும் மனதை லேசாக்குகிறது'' என்கிறார்.


Next Story