ஈகையை பிரதிபலிக்கும் 'பிள்ளைக்கதிர்'


ஈகையை பிரதிபலிக்கும் பிள்ளைக்கதிர்
x

அறுவடைப் பணியில் ஈடுபடும் ஆண், பெண்களுக்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை இருந்தால் அவர்களுக்கு ‘பிள்ளைக் கதிர்’ வழங்கப்படும்.

வருண பகவானின் கருணையாலும், பகலவனின் பார்வையாலும், பூமித்தாயை புகலிடமாக கொண்டு மண்ணில் அவதரிக்கும் பயிர்கள், மனிதனின் பசிப்பிணியை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், தமிழர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருப்பது நெற்பயிர்கள்.

பண்டைக்கால நெல் அறுவடைக்கும், தற்போதைய அறுவடை பணிக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. நவீன எந்திரத்தின் வருகையால், பாரம்பரிய நெல் அறுவடை பணி பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய் விட்டது.

பண்டைய காலத்தில் நெல் அறுவடை காலம் வந்து விட்டாலே, கிராமப்புறங்களில் திருவிழா கோலம் களைகட்டும். குழு, குழுவாக மக்கள் பிரிந்து வயலுக்கு சென்று அறுவடை பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர் இருப்பார். இவர், 'கூர்வடி' என்று அழைக்கப்படுவார். அவரது தலைமையில், ஆண், பெண் என்று 10 முதல் 20 பேர் வரை இருப்பர். ஒருவர் தனது வயலில் அறுவடை பணி மேற்கொள்ள வேண்டுமானால், கூர்வடியை அணுகுவார். கூர்வடி, வயலின் பரப்பளவுக்கு ஏற்ப ஆட்களை அழைத்து வருவார். தடி (கம்பு) ஒன்றையும் அவர் வைத்திருப்பார். ஒட்டுமொத்த வயலையும் தான் வைத்திருக்கும் தடியால் அளவீடு செய்வது கூர்வடியின் முக்கிய பணி ஆகும். அதன்பிறகு வயலுக்கு வந்த ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வயலை கூர் (பிரித்து) செய்து கொடுப்பார்.

ஒவ்வொரு நபருக்கும், வயலில் அறுவடை செய்யப்படுகிற பயிரின் எல்லை அளவு நிர்ணயம் செய்யப்படும். அந்த எல்லையை கண்டறியும் வகையில், அடையாளக் குறியிடுவதும் கூர்வடியின் வேலைதான். அனைவருக்கும் எல்லை குறிக்கப்பட்டதும் நெல் அறுவடை பணித் தொடங்கும். அதன்பிறகு கதிர்களை களத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் பணி தொடங்கும். தாங்கள் அறுத்த கதிர்களை தாங்களே களத்துக்கு சுமந்து செல்ல வேண்டும். தங்களது உடல் வலுவுக்கு ஏற்ப, கதிர்களை கயிற்றால் கட்டி தலைச்சுமையாக சுமப்பார்கள்.

வரப்புகளில் பாதம் பதித்து, பல்வேறு வயல்களை கடந்து களத்து மேட்டுக்கு நெற்கதிர்கள் போய் சேரும். அங்கு கதிர் அடிப்பதற்கு தனியாக ஆட்கள் இருப்பார்கள். அவர்கள், தாங்கள் வைத்திருக்கும் கயிற்றில் கதிர்களை வைத்து தரையில் ஓங்கி அடிப்பார்கள். அப்போது, நெல்மணி தனியாக பிரியும். இருப்பினும் சில நெல்மணிகள் கதிரோடு ஒட்டியிருக்கும். அதனை பிரித்தெடுப்பதற்காக களத்தில் வட்டமாக பிரித்து போடுவார்கள். அதன் மீது மாடுகள் வலம் வரும். இதற்கு 'புணையல் அடித்தல்' என்று பெயர்.

தொடர்ந்து மாடுகள் சுற்றிக்கொண்டே இருக்கும். மாடுகளின் கால்களில் மிதிபடுவதால், கதிர்களில் ஒட்டியிருக்கும் சில நெல்மணிகளும் உதிர்ந்து விடும். அதன்பிறகு ஆண், பெண் தொழிலாளர்கள் பதர்களை மட்டும் நீக்கி விட்டு நெல் மணிகளை தனியாக சேகரிப்பார்கள். அறுவடைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு களத்து மேட்டில் வைத்து கூலியாக நெல் வழங்கப்படும். இதனை 'கொத்து' என்று அழைப்பர்.

களத்து மேட்டில் கூலியாக நெல் வழங்குவது ஒருபுறம் இருக்க, அறுவடை பணியில் ஈடுபடுவோருக்கு 'அரிவாள் கட்டு' வழங்கப்படும். இது, வயலில் வைத்து கொடுக்கப்படுகிறது. அறுவடை பணியில் ஈடுபடுகிற அனைவருக்கும் அரிவாள் கட்டு கிடைக்கும். இரு கைகளும், இறுக பிடிக்கும் அளவுக்கு நெற்கதிர்கள், அரிவாள் கட்டாக வழங்கப்படும். இதைத் தவிர அறுவடை பணியில் ஈடுபடும் சிலருக்கு மட்டும் 'பிள்ளைக்கதிர்' கொடுப்பார்கள். இதுதான், தமிழர்களின் ஈகை குணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

அதாவது அறுவடைப் பணியில் ஈடுபடும் ஆண், பெண்களுக்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை இருந்தால் அவர்களுக்கு 'பிள்ளைக் கதிர்' வழங்கப்படும். பிள்ளைகளுக்காக (குழந்தை) வழங்கப்படும் கதிர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிவாள் கட்டுக்காக கொடுக்கப்படுகிற கதிர் அளவைப் போலவே, பிள்ளைக்கதிரும் வழங்கப்படுவதும் கூடுதல் சிறப்பு. அறுவடைப் பணியில் ஈடுபடுவோருக்கு கூலியாக கொத்து, அரிவாள் கட்டு வழங்குவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கும் கதிர்களை கொடுத்து கை கொடுப்பதில்தான் தமிழர்களின் பண்பாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.


Next Story