மராட்டிய கவர்னர் கோஷ்யாரியும், சர்ச்சை பேச்சுகளும்...


மராட்டிய கவர்னர் கோஷ்யாரியும், சர்ச்சை பேச்சுகளும்...
x

மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தான் பதவி விலக விரும்புவதாக தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

அவரின் இந்த முடிவுக்கு அவரது பல சர்ச்சை பேச்சுகளும் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அவரின் சர்ச்சை பேச்சுகளின் விவரம் வருமாறு:-

பழைய அடையாளம்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, சத்ரபதி சிவாஜி பழைய காலத்தின் அடையாளம். அம்பேத்கரும், மத்திய மந்திரி நிதின் கட்காரியும் புதுயுக அடையாளங்கள் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

மும்பை நிதி தலைநகர்

அதேபோல கடந்த ஆண்டு ஜூலை மாதம் "குஜராத்தியர்கள், ராஜஸ்தானியர்கள் இல்லையெனில் மும்பை நிதி தலைநகராக இருக்காது" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கவர்னர் பேசியது விமர்சனங்களுக்கு வித்திட்டது. அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புகழ்பெற்ற கோலாபுரி செருப்பை கவர்னருக்கு காட்டவேண்டிய நேரம் இது என காட்டமாக விமர்சித்தார்.

மும்பை பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கும் விழாவில் கலந்துகொண்ட கவர்னர், "புதிய சர்வதேச மாணவர்கள் விடுதிக்கு சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் பெயரை சூட்டுமாறு பல்கலைக்கழக துணை வேந்தர்களிடம் வலியுறுத்தியது" சர்ச்சையை கிளப்பியது.

சத்ரபதி சிவாஜியின் குரு

மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, பகத்சிங் கோஷ்யாரி, "சத்ரபதி சிவாஜி மகாராஜின் குரு சமர்த் ராமதாஸ் மற்றும் பல மகாராஜாக்களும் சக்கரவர்த்திகளும் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள். ஆனால் சாணக்கியன் இல்லை என்றால் சந்திரகுப்தனை பற்றி யாருக்கு தெரிந்திருக்கும்? அதேபோல சமர்த் ராமதாஸ் இல்லாவிட்டால் சத்ரபதி மகாராஜா பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்" என கூறி எதிர்க்கட்சிகளின் வாயில் அவலாக விழுந்தார்.

குழந்தை திருமணம்

அதேபோல கடந்த ஆண்டு மார்ச் மாதம் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் குழந்தை திருமணத்தை கேலி செய்யும் கவர்னரின் வீடியோ வைரலானது. இதில் சவித்ரிபாய் புலே தனது 10 வயதில் 13 வயதே நிரம்பிய ஜோதிராவ் புலேவை திருமணம் செய்துகொண்டார். இப்போது கற்பனை செய்து பாருங்கள் திருமணத்திற்கு பிறகு பையனும், பெண்ணும் என்ன செய்திருப்பார்கள்? அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? என்று கூறியது இன்றளவும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.


Next Story