விசில் அடிக்கும் 'பாலைவனக் கீரி'!


விசில் அடிக்கும் பாலைவனக் கீரி!
x

கீரி இனத்தைச் சேர்ந்த சிறிய பாலூட்டி விலங்கு ‘பாலைவனக் கீரி'. ஆங்கிலத்தில் இதை மீர்கட் (Meerkat) என்று சொல்வார்கள். இதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...?

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் உள்ள கலகரி பாலைவனம், நமீபியாவின் நமிப் பாலைவனம், தென்மேற்கு அங்கோலா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இந்தப் பாலைவனக் கீரிகள் அதிகம் காணப்படுகின்றன. இவை 20 முதல் 50 கீரிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டமாக வாழும் இயல்புடையவை. ஆண் கீரிகள் அதிகபட்சமாக 730 கிராம் எடையும், பெண் கீரிகள் 720 கிராம் எடையும் கொண்டிருக்கும். இதன் உடல் 25-35 செ.மீ. நீளம் வரையும், வால் 17-25 செ.மீ வரையிலும் இருக்கும்.

தனது இரண்டு கால்களையும் கொண்டு நிமிர்ந்து நிற்கும்போது வால் பகுதியை பயன்படுத்தி சமநிலைபடுத்துகின்றன. வலுவாக இருக்கும் 4 விரல்கள், இரையைத் தோண்டி சாப்பிட உதவுகின்றன. வளைந்த நகங்கள் மரம் ஏறவும் உதவுகின்றன.

பல்லி, பாம்பு, சிலந்தி, தேள், முட்டை, சிறிய பாலூட்டிகள் மற்றும் சிறிய பறவைகளை இவை விரும்பிச் சாப்பிடும். ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் கால்களை உயர்த்தித் தூக்கி அசைக்கும். பிறகு விசில் சத்தம் எழுப்பி கூட்டத்தை எச்சரிக்கும். ஒவ்வொரு ஆபத்துக்கும் ஒவ்வொரு விதமாக சமிக்ஞை கொடுக்கும். குட்டிகள் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே தேவையான இரையைத் தானாகத் தேடிக் கொள்கின்றன. இளம் மஞ்சள், பழுப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் இவை காணப்படும். பாலைவனக் கீரிகளின் காதுகள் பூனையைப் போலவும், மூக்கு கூர்மையாகவும் இருக்கும். இவை 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.


Next Story