விண்ணைத் தொடும் 'அவனி சதுர்வேதி'


விண்ணைத் தொடும் அவனி சதுர்வேதி
x

‘அவனி சதுர்வேதி’ என்ற பெயரை இணையத்தில் தேடிப்பார்த்தால், பல சாதனை செய்திகள் வெளிவரும். போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி, வெளிநாட்டு போர் பயிற்சி பெற்ற முதல் இந்திய பெண் விமானி போன்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரரும் அவரே.

பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்துவரும் அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...!

சிறு வயதிலிருந்தே 'பறக்கும்' கனவுகொண்ட அவனி சதுர்வேதி, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தில் இருவர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பைலட் கனவு இயல்பாக இருந்தது. 'நான் கல்பனா சாவ்லா போன்று பறக்க வேண்டும்' என்று குழந்தைபோல சொல்லிக்கொண்டிருந்தார்.

''குழந்தையாக இருக்கும்போது நாம் அனைவருமே வானத்தை நோக்கி ஒரு பறவையைப்போல பறக்க விரும்புவோம்" என்று அந்த நாட்களை நினைவுகூர்கிறார் அவனி.

ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு பிரபல கல்லூரியில் பி.டெக் படித்தவர், இந்திய விமானப் படை தேர்வையும் எழுதினார். ஐ.பி.எம். மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தவர், இந்திய விமானப் படை வாய்ப்பு கிடைத்ததும்,சந்தோஷமாகப் பறந்துவிட்டார்.

''மற்ற பெண் குழந்தைகள்போல அல்லாமல், சிறு வயதில் விமான மாதிரிகளை வைத்துத்தான் விளையாடுவாள். கல்பனா சாவ்லா இறந்தபோது, அவனிக்கு வயது 11. கல்பனா சாவ்லாபோல உங்கள் எல்லோரையும் பெருமைப்படுத்துவேன் என்றாள்" என்கிறார் அவரின் தாய், சவிதா சதுர்வேதி.

அவனியின் விமானப் படை தேர்வு உறுதிப்படுத்தப்படும் வரை, அந்தத் தேர்வை எழுதியதே தாய்க்கு தெரியாதாம். "முதலில், சாதாரண விமானத்தில் பறக்கும் பிரிவில் (ஸ்ட்ரீம்) தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன்பின், பைட்டர் பிளையிங் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வெவ்வேறு ஏர்கிராப்டினை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்று, தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியது" என்கிற அவனி, 'மிக்-21 பைசன்' (Mig-21 Bison) என்கிற ரஷிய வகை விமானத்தை இயக்க, பயிற்சி பெற்று அசத்தினார். இதற்காக, இவர் எடுத்த பயிற்சிகள் சவால்கள் நிறைந்தது.

பிலாட்டஸ் (Pilatus) என்கிற விமானத்தில் அடிப்படை பயிற்சி பெற்று, ஆறு மாதம் ஐதராபாத்தில் ஹக்கிம்பேட்டில் இருக்கும் விமானப் படை தளத்தில், கிரண் பைட்டர் ஜெட் வகை விமானத்தை ஓட்டிப் பயிற்சி எடுத்தார்.

ஒரு வருட தீவிரப் பயிற்சி. அதற்கு பிறகு தனியாக விமானத்தை இயக்கி, சாதனை படைத்தார். இந்திய விமானப்படையில், பெண்கள் பிரிவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல சாதனைகள், அவனி சதுர்வேதி என்ற பெயரிலேயே பதிவாகி இருக்கிறது. இப்போது வெளிநாட்டு போர் பயிற்சிகளில், பங்கேற்ற முதல் இந்தியப் பெண் விமானி என்ற சாதனையும், இவரது பெயரிலேயே பதிவாகி இருக்கிறது.


Next Story