பளு தூக்கும் மங்கை சாய்மா

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். அத்திபூத்தாற்போல, பெண்ணின் வெற்றிக்கு பின்புலமாக ஆணும் இருக்கத்தான் செய்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பளு தூக்கும் சங்கம் முதல் முறையாக பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியை ஜம்முவில் நடத்தியது. இதில், சாய்மா 255 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். அவரது வெற்றிக்கு பின்னால் அவரது கணவர் உபாய்ஸ் ஹாபீஸ் இருந்துள்ளார்.
பளுதூக்கும் வீரரான உபாய்ஸ், தன் மனைவி சாய்மாவுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார். அதனை சாய்மா ஆர்வமாக கற்க, அதுவே தங்கப்பதக்கத்தை வெல்ல காரணமாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் காஷ்மீரில் பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் சாய்மா பெற்றுள்ளார்.
"ஜிம்மில் சேர்ந்தபோது அதிக உடல் எடையுடன் இருந்தேன். இதனால் பயிற்சி செய்வதற்கு ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். என் கணவர்தான் தன்னம்பிக்கையூட்டினார். அவரே அடிப்படை பயிற்சியுடன் பளு தூக்கும் பயிற்சியையும் அளித்தார். வெற்றி இலக்கை அடைவதற்கான பாதையை வகுத்து கொடுத்தார். சமூகப் பிரச்சினைகளால் வீட்டுக்குள் முடங்கும் பெண்களுக்கு உதாரணமாக இருக்க நான் விரும்புகிறேன்.
திருமணமாகி குழந்தை பிறந்த பிறகுதான், நான் சாதித்திருக்கிறேன். எத்தகைய கனவாக இருந்தாலும், அதனை சாதிக்காமல் பெண்கள் விடமாட்டார்கள் என்பதை நிரூபித்து காட்டவே தொடர்ந்து விளையாட்டில் ஈடுபடுகிறேன்.
எதிலும் அர்ப்பணிப்புடன் நீங்கள் இருந்தால், உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். அதனை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது" என்கிறார், சாய்மா.
சாய்மாவின் கணவர் உபாய்ஸ் கூறுகையில், "இந்த வெற்றியை அடைந்ததற்கு சாய்மாவின் உழைப்பே காரணம். நான் அவருக்கு வழிகாட்டினேன். அவ்வளவுதான். பளுதூக்குதலுக்குரிய மன வலிமை இயற்கையாகவே என் மனைவிக்கு இருப்பதை அறிந்தேன். நீ பளுதூக்கும் பயிற்சி செய்தால் சாதிக்க முடியும் என்று கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டார். கடவுள் அருளால் பெரும் சாதனையைப் படைத்துள்ளார்" என்றார்.
இளங்கலை பட்டதாரியான சாய்மா, தற்போது பெண்களுக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அதேசமயம் அவரும் பயிற்சியை தொடர்ந்தபடி போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகிறார்.






