படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு வழிகாட்டுபவர்..!


படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு வழிகாட்டுபவர்..!
x

சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி, படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்த தன்னால் முடிந்த பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்குகிறார்.

பெட்ரோல் நிலையங்கள், சூப்பர் மார்கெட்டுகள், சாலையோர கடைகள்... என பல இடங்களில் நிறைய இளம் பெண்கள் பணியாற்றுவதை பார்த்து, சர்வ சாதாரணமாக கடந்து சென்றிருப்போம். ஆனால், சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி, அவர்களை அப்படி எளிதாக கடந்து செல்வதில்லை. அவர்களை அணுகி பேசுகிறார். அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், எந்த காரணத்தினால் இப்படியொரு இக்கட்டான சூழலில் பணியாற்றுகிறார்கள், அவர்களுக்கு படிக்கும் ஆர்வம் இருக்கிறதா..?, படிப்பு கற்றுக்கொடுத்தால் படிப்பார்களா?... என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தன்னால் முடிந்த பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்குகிறார்.

இவர்கள் மட்டுமல்ல, அரசுப்பள்ளியில் படித்து மேல்படிப்பிற்கு பணமின்றி சிரமப்படும் ஏழை-எளிய மாணவிகள், பெற்றோர் ஆதரவின்றி வளரும் குழந்தைகளுக்கு இலவச படிப்பு மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

''பல சந்தர்ப்பங்களில், பல இடங்களில் நாம் சந்திக்கும் பல பெண்களில், 90 சதவிகிதத்தினர், நன்கு படித்தவர்கள். கல்லூரி படிப்பை முடிக்காவிட்டாலும், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்-2 பொதுத்தேர்வில், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். இருப்பினும் குடும்ப சூழல், இளம் வயது திருமணம், கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி படிப்பை பாதியில் இடை நிறுத்தியது... என ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஒரு சோகம் ஒளிந்திருக்கும்.

உண்மையில், அவர்கள் பல வருட இடைவேளைக்கு பிறகு இன்றும் இடைநின்ற படிப்பை தொடர ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், அதற்கான நிதி ஆதாரங்களும், முறையான வழிகாட்டுதலும் அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கும். அப்படிப்பட்ட கல்வி ஆர்வம் நிறைந்த இளம் பெண்களுக்கு, என்னால் முடிந்த வழிகாட்டுதலையும், கல்வி பயிற்சிகளையும் வழங்குகிறேன்'' என்று பொறுப்பாக பேச தொடங்குகிறார், அன்ன ஸ்டெபி.

சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்தவரான இவர், கணிதவியல் படிப்பில் இளங்கலை பட்டம் பயின்றவர். கூடவே மான்டெஸரி கல்வி முறையில் ஆசிரியர் பயிற்சியும் முடித்திருக்கிறார். அதையே மற்ற பெண்களுக்கான முன்னேற்றப்படியாக மாற்றியிருக்கிறார்.

ஆம்..! கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் மிகவும் சுலபமான மான்டெஸரி கல்வி முறையை, வறுமை நிலையில் இருக்கும் பெண்களுக்கு முறையாக கற்பிப்பதுடன் பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றிய பெண்களை நர்சரி பள்ளி ஆசிரியராகவும், பிளே ஸ்கூல் ஆசிரியராகவும் மாற்றி, அவர்களின் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கொடுக்கிறார்.

''கல்வி வாழ்க்கையில் இருந்து பல வருடங்கள் விலகி இருந்தவர்கள், நீங்கள் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பயிற்சிகளை சுலபமாக புரிந்து கொள்கிறார்களா?'' என்ற கேள்வியை அவரிடம் முன்வைக்க, அவர் பதிலளித்தார்.

''இந்த கேள்விக்காகவே, நான் மான்டெஸரி கல்வி பயிற்சியை தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் மான்டெஸரி என்பது மிகவும் சுலபமான கல்வி முறை. அன்றாட வாழ்வின் நடவடிக்கை மூலமாகவும், நடைமுறை, கலை மற்றும் கை வினை மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படும். இதை யாராலும், எந்த வயதிலும் கற்றுக்கொள்ள முடியும். இந்த கல்வி முறையை பொறுத்தமட்டில் ஆர்வம் இருந்தால் போதும், சுலபமாக கல்வி பயிலலாம். அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் பெறலாம்'' என்றவர், தன்னை அணுகும் பெண்களுக்கு வழிகாட்ட, 'டீம் எஜிகேஷன்' என்ற பிரத்யேக கல்வி அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் ஒன்றல்ல... இரண்டல்ல.... இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை-எளிய பெண்கள் பயிற்சி பெற்ற நர்சரி ஆசிரியராக மாறியிருக்கிறார்கள்.

''பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் சுத்தம் செய்பவர்கள், கடைகளில் பணியாற்றுபவர்கள்... இப்படி நிறைய பெண்களின் அடையாளங்களை, ஆசிரியராக மாற்றியிருக்கிறேன். கடந்த 10 வருடங்களாக இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அத்தகைய பெண்களுக்கு முதலில் தேவைப்படுவது தன்னம்பிக்கை மட்டுமே. அதை சிறப்பாக வழங்கி, அவர்களால் படிக்க முடியும், ஆசிரியராக தரம் உயர முடியும்... என்பதை உணர வைக்கிறேன்.

பெரும்பாலும், அரசுப்பள்ளியில் படித்தவர்கள் ஆங்கிலம் பேச கூச்சப்படுவார்கள். பொதுவெளியில், பெரும் கூட்டத்திற்கு முன்பு பேசவும் தயங்குவார்கள். இதை உடைத்தெறிய, அவர்களை 30 பேர் கொண்ட குழுவாக பிரித்து, அவர்களை குழுவாக பயிற்றுவிக்கிறேன். இதன் மூலம், மேடை பயமின்றி ஆங்கிலத்தில் பேசுவதில் தேர்ச்சி பெறுகிறார்கள்'' என்றவர், சென்னை முடிச்சூர் பகுதியில் பெண்களை ஒருங்கிணைத்து கல்வி கற்பிப்பதுடன், தமிழகத்தின் பிற பகுதி பெண்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி கொடுக்கிறார்.

''ஏதோ ஒரு சூழலில், படிப்பை பாதியில் நிறுத்தி சொற்ப சம்பளத்தில் பணியாற்றுபவர்களுக்குதான், கல்வியின் சுவை, மதிப்பு நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால் அவர்களுக்கு நாம் வழிகாட்டி, பயிற்சி கொடுத்தால் போதும். அவர்கள் கல்வி கற்று தங்களுக்கான அடையாளத்தை தாங்களாகவே மாற்றிக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்'' என்றவருக்கு, பல அமைப்புகளின் மூலம் நிறைய விருதுகளும், அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. இருப்பினும், தன்னுடைய வழிகாட்டுதலில் முன்னேறிய பலரது புன்னகையின் மூலம் அகம் மகிழ்வதாக கூறுகிறார், அன்ன ஸ்டெபி.

''நீங்களும், பலதரப்பட்ட மக்களை சந்தித்திருப்பீர்கள். இனியும் சந்திப்பீர்கள். அவர்களுக்கு உங்களால் ஏதாவது ஒரு வழியில் உதவ முடியும் என்றால், தயங்காமல் உதவி செய்யுங்கள். ஏனெனில், நம்முடைய சமூகத்தில் பலரும் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்றவர், பயிற்சியுடன் வேலைவாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறந்துவிடுகிறார்.

''என்னுடைய சமூக முயற்சிகள் அனைத்திற்கும், கணவர் உட்பட எல்லா உறவினர்களும் உறுதுணையாக இருப்பதுடன், என்னை கூடுதலாக உற்சாகப்படுத்தி, சிறப்பாக வழிகாட்ட உதவுகிறார்கள். என்னை பொறுத்தமட்டில், நன்றாக படித்த, படிக்கக்கூடிய பெண்கள் படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலைகளை செய்யக்கூடாது. அதற்கு மாற்றாக, அவர்களை நல்வழிப்படுத்தி, என்னால் முடிந்த உதவிகளையும், பயிற்சிகளையும், வழிகாட்டுதலையும் வழங்கிக்கொண்டே இருப்பேன். அதுவே என் லட்சியம்'' என்ற நம்பிக்கை வரிகளுடன் விடைபெற்றார்.

''ஏதோ ஒரு சூழலில், படிப்பை பாதியில் நிறுத்தி சொற்ப சம்பளத்தில் பணியாற்றுபவர்களுக்குதான், கல்வியின் சுவை, மதிப்பு நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால் அவர்களுக்கு நாம் வழிகாட்டி, பயிற்சி கொடுத்தால் போதும். அவர்கள் கல்வி கற்று தங்களுக்கான அடையாளத்தை தாங்களாகவே மாற்றிக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்''


Next Story