நாடி துடிப்பை கணிக்கும் நவீன இயந்திரம்..!


நாடி துடிப்பை கணிக்கும் நவீன இயந்திரம்..!
x

சித்த மருத்துவத்தின் உயிர் நாடியாக திகழும், நாடி கணிப்பை இனி நவீன கருவியின் வாயிலாகவும் கணிக்கலாம்.

ஆம்...! பாளையங்கோட்ைட சித்த மருத்துவ கல்லூரியும், திருநெல்வேலியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக மண்டல மையமும் இணைந்து, நாடி துடிப்பை கம்ப்யூட்டர் மூலம் துல்லியமாக கணிக்கும் கருவியை உருவாக்கி உள்ளது.

இந்த கருவி உருவாக்கத்தில், சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் சுபாஷ் சந்திரனின் பங்கும் மிக முக்கியமானது. இவரது வழிகாட்டுதலில்தான், ஒரு குழுவாக இயங்கி, இந்த நாடி துடிப்பு கணிப்பு கருவியை உருவாக்கி உள்ளனர்.

இவர், நாடி கருவி உருவாக்கம் பற்றி பேசுகிறார்:

* சித்த மருத்துவத்தில், நாடித்துடிப்பு கணிப்பு என்பது எவ்வளவு முக்கியமானது?

ஒருவருக்கு நோய் அறிகுறிகளை துல்லியமாக கண்டறிந்த பிறகே அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியும். அதுவே சிறந்ததுகூட.

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, அது தோன்றிய காலத்தில் இருந்தே நாடி பிடித்துப் பார்த்து நோய்களை கண்டு பிடிக்கும் முறை உள்ளது.

சித்த மருத்துவத்தில் மட்டுமல்ல, நவீன மருத்துவத்திலும் ஒருவர் நோய் என்று வரும் போது, நாடி பார்ப்பது, கண்களைப் பார்ப்பது, நாக்குகளை நீட்டச் சொல்லிப் பார்ப்பது, விரல் நகங்களை பார்ப்பது உண்டு. இதன் மூலம் நோயாளிகள் மறைக்கும் சில உண்மைகளையும் மருத்துவரால் அறிந்து கொள்ள முடியும்.

* நாடித்துடிப்பை அளவிடும் கருவியை கண்டறியும் யோசனை எப்படி வந்தது?

சித்த மருத்துவத்தில் மருந்துகளும், மருந்துத் தயாரிப்பு முறைகளும் நிறைய உள்ளன. அதேபோல நோய்கணிப்பு முறைகள் நிறைய இருந்தும், அவை விரிவான அளவில் மக்களைச் சென்றடையவில்லை.

இந்நிலையில் சித்தர்களின் மூல நூல்களில் இருக்கும் நாடி குறித்தான தகவல்கள் அனுபவ அறிவாகவே இருக்கிறது. இந்த குறிப்புகளை போதிய தரவுகளின் அடிப்படையில் ஒரு நிலைத்தன்மையுடன் பெறும் வகையிலும், இந்த அறிவியலை வரும் தலைமுறைக்கு கடத்தும் விதமாகவும் தனிமனிதத் தவறுகள், தனிமனித வேறுபாடுகள் இன்றி ஒரு கருவி உருவாக்குவதில் ஏன் முயலக்கூடாது எனும் கேள்வியின் பதிலாகவே இந்த கருவியை கண்டறியும் யோசனை தோன்றியது.

* சித்தமருத்துவர்கள் நாடி பிடித்துப் பார்ப்பதுபோல் இந்த கருவியும் துல்லியமாக நாடித்துடிப்பைக் கணிக்குமா?

நிச்சயமாக கணிக்கும். துல்லியமாக கணிக்கும். அனுபவ அறிவைக்கொண்டு பெறப்படும் கூறுகளுடன், அறிவியல் ஆய்வில் ஒப்பிட்டு பார்த்து கணிப்பை துல்லியமாக அறியலாம்.

* சோதனை முயற்சியில் எத்தகைய முடிவுகள் கிடைத்தன?

சித்தர்களின் நூலில் குறிப்பிட்டபடி அனுபவமிக்க சித்தமருத்துவர்களின் நாடித்துடிப்பு கணிப்போடு இப்புதிய கருவியின் நாடிக்கணிப்பை ஒப்பிட்டு பார்த்தோம். அதில் பெரும்பாலான கணிப்புகள் துல்லியமாக இருந்தன.

* இந்த நாடித்துடிப்பு கணிப்புக் கருவி எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும்?

இந்திய அரசின் ஆயுஷ் துறையின் ஒப்புதலுக்குப்பிறகு பயன்பாட்டிற்கு வரும். முற்றிலும் மருத்துவர்கள் மட்டுமே இக்கருவியை பயன்படுத்தி நாடித்துடிப்பை கணித்து அறியமுடியும்.

பொதுமக்கள் இதைப் பயன்படுத்துவது பற்றி ஆரம்ப நிலையிலேயே பேசுவதும், சிந்திப்பதும் அவ்வளவு பொருத்தமாக இருக்காது.

* இந்த கருவி உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் ?

நெல்லை மண்டல அண்ணா பல்கலைகழக கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் டீஜே, எலக்ட்ரானிக் மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் சுஜா பிரியதர்ஷினி மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் காவ்யா இலக்கியா ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த கருவி உயிர் பெற்றுள்ளது.


Next Story