விந்தையான 'சருகுமான்'


விந்தையான சருகுமான்
x

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் அரிய வகை உயிரினத்தில் ஒன்று, சருகுமான். இதனை ஆங்கிலத்தில் ‘மவுஸ் டீர்’ என்கிறார்கள்.

வியட்நாம் பகுதியில் வாழக்கூடிய ட்ராகுலிடே என்ற குடும்பத்தை சேர்ந்த உயிரினமாக இவை அறியப்படுகின்றன. இந்த உயிரினம், அடையாளப்படுத்த முடியாத வகையில் இருக்கிறது. இதன் வாய்ப்பகுதி எலியின் வாயை போன்றும், உடல் பகுதி முயலை போன்றும், கால் குளம்புகள் மான்களை போன்றும் இருக்கின்றன. சருகமான்கள், நிலச்சருகுமான், நீர்ச்சருகுமான், வெண்புள்ளி சருகுமான் என்று இவற்றில் 10 இனங்கள் இருப்பதாக இதுவரை கண்டறியப்பட்டிருக்கிறது. இவற்றின் ஒரு கிளை இனம் மத்திய, மேற்கு ஆப்பிரிக்காவின் மலைக்காடுகளில் காணப் படுகின்றன. இந்த சருகுமான் உயிரினம், தனித்தோ அல்லது தன்னுடைய இணையுடனோ வாழும் தன்மை கொண்டது. இவை தாவர வகையான புற்களையும், இலைகளையும் மட்டுமே உணவாக சாப்பிடுகின்றன.

உலகிலேயே குளம்பு கொண்ட மிகவும் சிறிய வகை உயிரினமாக சருகுமான் கருதப்படுகிறது. இதன் எடை 700 கிராம் முதல் 8 கிலோ இடைப்பட்ட அளவில் இருக்கும். மான் இனம் என்றாலும் இதற்கு கொம்புகள் கிடையாது. ஆனால் சிறிய வால் உண்டு. ஆண் சருகுமானுக்கு மட்டும் கோரைப்பற்கள், ஒரு ஜோடி தந்தம் போல நீண்டு காணப்படும். இதன் நிறம் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். இந்த உயிரினம் முதன் முதலில் 1910-ம் ஆண்டு, பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் ஒல்ட்பீல்ட் தாமஸ் என்பவரால் கண்டு விவரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.


Next Story