இசையும்.. இதயமும்..


இசையும்.. இதயமும்..
x

இசைக்கு மனதை அமைதிப்படுத்தும் அசாத்திய ஆற்றல் இருப்பதால் அதனை தினமும் கேட்க வேண்டும் என்ற கருத்தை மன நல நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். ஒரு சில நோய் பாதிப்புகளுக்கும் நிவாரணம் தருவதால் இசையை கேட்பதும் ஒருவித சிகிச்சை முறையாக பின்பற்றப்படுகிறது.

நெஞ்சுவலி, பதற்றம் போன்றவற்றில் இருந்து மீள வைக்கும் தன்மை இசைக்கு உண்டு என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் 30 நிமிடங்கள் இசை கேட்பது இதயத்திற்கும் நல்லது என்கிறது, அந்த ஆய்வு.

செர்பியாவில் உள்ள பெல்கிரேட் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வுக்கு முதல் முறை மாரடைப்பு பாதிப்புக்குள்ளான 350 நோயாளிகள் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் இசையை கேட்பதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இசையை கேட்க வைத்து ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். அதில், 'முதல்முறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மீண்டும் அத்தகைய பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு சிறந்த வழி இசையை கேட்பதுதான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் வீட்டிலேயே இசை தெரபி சிகிச்சை மேற்கொண்டால் இதய பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

''ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முதலில் சாதாரணமாகத்தான் இசையை கேட்க தொடங்கினார்கள். அதன் பின்பு இசையில் மூழ்கி அதனை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் ஆச்சரியப்படவைக்கும் விஷயம் என்னவென்றால் இசையுடன் மனம் மட்டுமல்ல உடலும் ஒன்றிணைந்து விடுகிறது'' என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

7 ஆண்டுகளுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் பதற்றம், நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் எதுவும் அவர்களுக்கு ஏற்படவில்லை. எனவே இசை தெரபி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

1 More update

Next Story