தேசிய நூலக தினம்


தேசிய நூலக தினம்
x

நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, சீர்காழி ஆர்.ரங்கநாதனுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் ‘தேசிய நூலக தின’மாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒரு சிறிய அறையில் வீட்டு நூலகமாக வைத்திருக்கும் இடத்திலேயே ஒரு புத்தகத்தை எடுக்க தேடும் நிலை சில நேரங்களில் ஏற்படும். அப்படி இருக்கையில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கும் பெரிய பெரிய நூலகங்களில் இருந்து ஒரு புத்தகத்தை எடுக்க வேண்டுமானால் எப்படி ஒரு மெனக்கடல் வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று பல நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எடுப்பதற்கு எளிமை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அப்படி ஒரு சூழ்நிலையில் 'கோலன் பகுப்புமுறை' என்ற அறிவியல்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டுவந்தவர், சீர்காழி ஆர்.ரங்கநாதன். இவர் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தின் முதல் நூலகர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள வேதாந்தபுரம் என்ற ஊரில் 1892-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் நாள் பிறந்தவர் ஆர்.ரங்கநாதன். பள்ளிக்கல்வியை சீர்காழியிலும், இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் முடித்தார். ஆசிரியர் பயிற்சியையும் முடித்த இவர், சில அரசு பள்ளிகளிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கணிதம், இயற்பியல் பாடம் கற்பித்து வந்தார்.

பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில், நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 1924-ல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார். அங்கிருந்து நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை சீரமைத்தார். சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். 1928 முதல் 1945-ம் ஆண்டு வரை அதன் அமைப்புச் செயலாளராக இருந்தார். 1948-ம் ஆண்டு, இவரது முயற்சியால்தான் சென்னை பொதுநூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்துவரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது.

இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான், 'கோலன் பகுப்புமுறை.' நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே 'கோலன் பகுப்புமுறை' எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன.

நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் 'தேசிய நூலக தின'மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. 'இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்.


Next Story