முத்து வளர்ப்பில் லாபம் கொழிக்கும் பெண்மணி

வீட்டில் முத்து வளர்த்து அதில் லாபம் கொழிக்கும் பெண்மணியாக வலம் வருகிறார் கேரள மாநிலத்தை சேர்ந்த நீனா ரஞ்சனா.
தங்க ஆபரணங்களுக்கு அடுத்தபடியாக பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்களுள் ஒன்று, முத்து மாலைகள். இருப்பினும் நம் நாட்டை விட வெளிநாடுகளில்தான் முத்து நகைகளுக்கு கூடுதல் மவுசு இருக்கிறது. அதனால்தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முத்துக்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சங்க காலம் தொட்டே முத்துக்குளிப்பு தொழில் கோலோச்சிக்கொண்டிருக்கிறது. தற்போது கடலில் முத்து குளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கடல் அல்லாத ஏரி, குளங்களில் முத்துக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவிலும் கடல் நீர் அல்லாமல் நன்னீரில் முத்துக்கள் வளர்க்கும் முறை புழக்கத்தில் உள்ளது. ஆரம்பத்தில் சிக்கலாக இருந்த இந்த தொழில் நுட்பம் இன்று எளிமையாகிவிட்டது. ஏரி, குளங்களை தேடி சென்று அதில் தான் முத்து வளர்க்க வேண்டியதில்லை.
வீட்டிலேயே தொட்டியில், செயற்கை குளத்தில், ஏன் வாளிகளில் கூட முத்து உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு முத்து வளர்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது. நல்ல வருமானம் ஈட்டும் தொழிலாகவும் உள்ளது. அப்படி வீட்டில் முத்து வளர்த்து அதில் லாபம் கொழிக்கும் பெண்மணியாக வலம் வருகிறார் கேரள மாநிலத்தை சேர்ந்த நீனா ரஞ்சனா.
''நான் முத்து வளர்க்க தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முத்து சிப்பிக்குள் மணல் துகள் அல்லது வேறு ஏதாவது துகள் தற்செயலாக உள்ளே நுழைந்துவிடும். அப்படி நுழைந்த துகளால் சிப்பிக்குள் இருக்கும் மென்மையான சதை திசுக்களுக்கு தாங்கமுடியாத அசவுகரியம் ஏற்படும். அந்த அசவுகரியத்தை போக்குவதற்காக துகள் தசையை தொடாமல் இருக்க ஒரு திரவத்தை சுரந்து அந்த துகளை மூடும். அந்த திரவம்தான் நாளடைவில் திட நிலை அடைந்து முத்தாக மாறுகிறது.
முத்து வளர்ந்ததும் சிப்பி முத்தை வெளியே உமிழாது. நாம்தான் சிப்பியைத் திறந்து முத்தை வெளியே எடுக்க வேண்டும். துகள் சிப்பிக்குள் நுழைவது அரிதாக நடக்கும் செயல். அதனால் எல்லா சிப்பிக்குள்ளும் முத்து உருவாகும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால், துகளை பலவந்தமாக சிப்பிக்குள் நுழைப்பதுதான் நவீன முத்து வளர்ப்பு. இதற்காக முத்து சிப்பியை எச்சரிக்கையாக அதே சமயம் மென்மையாக திறந்து பிளாஸ்டிக் துகளை உள்ளே வைப்பார்கள்.
கிட்டத்தட்ட இதனை அறுவை சிகிச்சை என்றே சொல்லலாம். இப்படி செய்வதால் 80 சதவீத முத்து சிப்பிகளில் முத்து வளர்த்து அறுவடை செய்ய முடியும்'' என்கிறார்.
''இயற்கையாக அரிதாக வளரும் முத்திற்கும், வளர்ப்பு முத்திற்கும் எந்த வேறுபாடும் இருக்காது'' என்பவர் ஆரம்பத்தில் பலரும் 'வீட்டில் முத்து வளர்க்க முடியுமா' என்று என்னை சந்தேகத்துடன் பார்த்தார்கள் என்கிறார். ''வித்தியாசமாக அதே சமயம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் தொழிலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தேன். அதற்காக ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருக்கும் மத்திய அரசின் நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். பின்பு வீட்டில் கிடந்த பிளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து அதில் தண்ணீரை நிரப்பி முத்து சிப்பிகளை வளர்க்க ஆரம்பித்தேன். பத்து மாதத்தில் கிட்டத்தட்ட எல்லா சிப்பிகளிலும் இரண்டு முத்துக்கள் வீதம் வளர்ந்தன. இதை பார்த்ததும் வீட்டில் எனது முயற்சிகளுக்கு வரவேற்பு கிடைத்தது. நான் வளர்த்த முத்துக்களை ஐதராபாத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்தேன். அதில் எனக்கு லாபம் மட்டும் 80 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. நான் முத்து சிப்பிகளை அகமதாபாத்தில் இருந்து வாங்குகிறேன். பாசி தான் சிப்பிகளுக்கு உணவு. தினமும் இரண்டு மணி நேரம் சிப்பிகளை பராமரிக்க செலவிட்டால் போதும். எந்த வடிவத்திலும் முத்து வளர்க்க முடியும். துகள் எந்த வடிவில் உள்ளதோ அந்த வடிவத்தில் முத்து வளரும். ஒரு சிப்பியில் இரண்டு முதல் ஆறு முத்துக்களை வளர்க்கலாம். ஒரு சிப்பியில் ஒரு முறை மட்டுமே முத்து வளர்க்க முடியும். அறுவடை முடிந்ததும், வேறு புதிய சிப்பிகளில் துகள்களை செலுத்தி முத்து வளர்க்க வேண்டும். முத்து வளர்ப்பு தொழிலில் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது'' என்கிறார்.






