பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 7 அறிமுகம்

பிரீமியம் மற்றும் சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எக்ஸ் 7 மாடல் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
இது பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் மாடலாக வந்துள்ளது. பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 7 டிரைவ் 40 ஐ எம் ஸ்போர்ட் என்ற மாடலின் விலை சுமார் ரூ.1,22,00,000. பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 7 டிரைவ் 40 டி எம் ஸ்போர்ட் மாடலின் விலை சுமார் ரூ.1,24,50,000. வெள்ளை, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். இது தவிர பிரத்யேக பெயிண்ட்டாக கிரே மற்றும் நீல வண்ணங்களிலும் இது கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரோமியம் வேலைப்பாடு நிறைந்ததாக மிகுந்த எடுப்பான தோற்றத்துடன் இதன் முன்புறம் கிட்னி வடிவிலான கிரில் உள்ளது. புதிய வடிவிலான எல்.இ.டி. முகப்பு விளக்கு இதற்கு மிக அழகிய தோற்றத்தை அளிக்கிறது. உள்புறம் மிக மென்மையான தோலினால் ஆன இருக்கைகள், 14 கண்கவர் வண்ண விளக்குகள் சொகுசான பயணத்தை உறுதி செய்வதாக உள்ளன. இனிய இசையை வழங்க ஹார்மன் கார்டோன் ஸ்பீக்கர்கள் 16 உள்ளன. மிகச் சிறந்த செயல்பாட்டுக்கென இதில் டுவின் டர்போ என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது 381 ஹெச்.பி. திறனையும் 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதை ஸ்டார்ட் செய்து 5.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் 3 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. இத்துடன் 48 வோல்ட் மின்சார மோட்டாரும் உள்ளதால் அது 12 ஹெச்.பி. திறனையும், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதில் 8 கியர்கள் உள்ளன.
இதில் நான்கு விதமான (கம்பர்ட், எபீசியன்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ்) ஓட்டும் நிலைகள் உள்ளன. இது அனைத்து சக்கர சுழற்சி கொண்டதாகும். இ.சி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சொகுசான பயணத்தை இதில் உள்ள அடாப்டிவ் 2 ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன் உறுதி செய்கிறது. இதன் மூலம் காரின் உயரத்தை அதிகரிக்கவோ, குறைக் கவோ முடியும். இதனை சாலையின் தன்மைக்கேற்ப தீர்மானித்துக் கொள்ளலாம்.
பி.எம்.டபிள்யூ. கனெக்டர் டிரைவ் செயலி காரில் மேம்பட்ட செயல்பாடுகளுக்கு உதவுகிறது. நிகழ்நேர வாகன நெரிசல் பற்றிய தகவல், தொலை தூரத்திலிருந்து காரை இயக்கும் வசதி, ஸ்மார்ட்போன் மூலம் காரை பார்க் செய்வது உள்ளிட்ட வசதிகளை சாத்திய மாக்கியுள்ளது.






