நொய்டா இரட்டைக் கோபுரங்களை தகர்க்க 2 ஆண்டுகள் வரை தேவைப்படும் போது 15 வினாடிகளில் தகர்ப்பது எவ்வாறு சாத்தியம்?


நொய்டா இரட்டைக் கோபுரங்களை தகர்க்க 2 ஆண்டுகள் வரை தேவைப்படும் போது 15 வினாடிகளில் தகர்ப்பது எவ்வாறு சாத்தியம்?
x

இந்த கட்டிடத்தை தகர்க்க வாட்டர்பால் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

நொய்டா,

நொய்டாவின் செக்டார் 93ஏ-இல் உள்ள "சூப்பர்டெக்" நிறுவனத்தின் 40 மாடி இரட்டைக் கோபுரங்களான "அபெக்ஸ்" மற்றும் "செயேன்" கட்டிடத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க (நாளை) ஆகஸ்ட் 28 அன்று இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இடிப்புக்காக மும்பையைச் சேர்ந்த எடிபைஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் சூப்பர்டெக் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் இடிக்கப்படும் மிக உயரமான கட்டிடம் இதுதான்.

இந்த கட்டிடத்தை தகர்க்க "நீர்வீழ்ச்சி வெடிப்பு தொழில்நுட்பம் (வாட்டர்பால் தொழில்நுட்பம்)" பயன்படுத்தப்படுகிறது.

வேறு முறைகளை பயன்படுத்தி இந்த கட்டிடத்தை தகர்க்க வேண்டுமானால் சுமார் 1.௫ - 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தால் அருகிலிருக்கும் கட்டிடங்களுக்கு எவ்வித சேதாரமும் இன்றி முழு கட்டிடமும் 15 நொடிகளுக்குள் தரைமட்டமாகும். இந்த தொழில்நுட்பத்தால் பணம் மிச்சமாகும், நேரம் விரயமாகாது மற்றும் மிகவும் பாதுகாப்பானது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொச்சியில் உள்ள "மரடு வளாகம்" இதே போல இடிக்கப்பட்டது. அதில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜெட் டெமாலிசன் நிறுவனமும் இந்த கட்டிட தகர்ப்பில் கைகோர்த்துள்ளது கூடுதல் பலம்.

மும்பையைச் சேர்ந்த எடிபைஸ் இன்ஜினியரிங் நிறுவனம் மூலம், இந்த இரட்டைக் கோபுரங்களில் துளையிடப்பட்ட துளைகளில் சுமார் 3,700 கிலோகிராம் அளவிலான வெடிபொருட்கள் அடைக்கப்படும்.

இந்த பணிகளில் சுமார் 100 பேர் தினமும் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு நாளும், சுமார் 200 முதல் 300 கிலோ வெடிபொருட்கள் கட்டமைப்பில் நிரம்பியுள்ளன.

இதில் 90 பணியாளர்கள் - 'இந்தியாவை சேர்ந்த 10 வெடிமருந்து நிபுணர்கள், வெளிநாடுகளை சேர்ந்த 7 நிபுணர்கள்' பணிபுரிந்திருக்கின்றனர். இதற்காக 9,640 துளைகள் இடப்பட்டு 3700 கிலோ வெடிமருந்துகள் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் உள்ள அறைகளுக்கிடையே இணைப்பு வழங்கப்பட இருக்கிறது.

"அபெக்ஸ்" கட்டிடத்தில் 32 தளங்களும், அடுத்த கட்டிடத்தில் 29 தளங்களும் அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடிகள். ஆகஸ்டு 28 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட இருக்கிறது. நாளை காலை 7 மணியளவில் அப்பகுதியில் வசிப்போர் அங்கிருந்து வெளியேற்றப்படுவாரகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கட்டிட தகர்ப்பு பணியினை மேற்கொள்ளும் எடிபைஸ் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் மயூர் மேத்தா, "வெடிபொருட்களை நிரப்பும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. 100 மீட்டர் தொலைவில் இருந்து இந்த கட்டிடங்கள் வெடிக்கச் செய்யப்படும். வெடிபொருட்கள் வெடித்து சிதற 10 வினாடிகள் ஆகும். அடுத்த 5 வினாடிகளில் மொத்த கட்டிடங்களும் பாகங்களாக கீழே உதிர்ந்துவிடும்" என்றார்.

கட்டிடம் தரைமட்டமானதும் 55,000 டன் முதல் 80,000 டன் குப்பைகள் உருவாகும். அவற்றை அங்கிருந்து முறையாக அப்புறப்படுத்த 3 மாதங்கள் வரை ஆகலாம்.


Next Story