பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண் சிற்பி


பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண் சிற்பி
x

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் புகழ்பெற்ற குமார்துலி பகுதியை சேர்ந்த கைவினைஞர் மாலா பால். பாரம்பரியமான கலை வடிவத்தை அழியாமல் காப்பதற்காக, வளரும் தலைமுறை இளைஞர்களுக்கு சிலை தயாரிப்பு பயிற்சி அளித்து வருகிறார்.

பிரபல கைவினைக் கலைஞரான மாலா பால், சிலை வடிவமைப்புக்காக தனித்துவமான பள்ளியையும் தொடங்கியுள்ளார். இங்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக சிலைகள் செய்வதற்குத் தேவையான திறன்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பிரபலமில்லாத இடத்தில், தெருவிற்குள் இருக்கும் இவரது பட்டறையில் இருந்துதான் மேற்கு வங்காளத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜைக்கான துர்கை சிலைகள் தயாராகிறது. இங்கிருந்துதான் கைவினை கலைஞர்கள் துர்கை சிலைகளை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புகிறார்கள்.

குமார்துலியில் வசிக்கும் பல பாரம்பரிய கலைஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்து சிலை வடிவமைப்பு பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு வரை குமார்துலியில் நான்கு பெண்கள் மட்டுமே சிலை செய்பவர்களாக இருந்தனர். அதில் மாலாவும் அடங்குவார். ஆனால் இன்று அவர் மட்டுமின்றி மற்ற பெண்களும் சிலை வடிவமைப்பு தொழிலில் முன்னேற வழிகாட்டியாக விளங்குகிறார். போதிய வருமானமின்மை, லாபமின்மை போன்ற காரணங்களால், இளம் தலைமுறை கலைஞர்கள் சிலை செய்யும் தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லை என்று வேதனையோடு சொல்கிறார்.

"இன்றைய இளைஞர்களில் பலர், இந்தக் கலை வடிவமைப்பு பணியில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதைத் தொடர விரும்பவில்லை. இந்த அழகான பாரம்பரிய மரபையும் கலை வடிவத்தையும் அழிவில் இருந்து மீட்க வேண்டும். அதனால்தான் இந்தப் பள்ளியை தொடங்கினேன்" என்கிறார் மாலா பால்.

தன்னுடைய சிற்ப பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிற்பக் கலையை மூன்று பிரிவாக கற்றுத்தருகிறார் மாலா. சிற்பியான தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு 14 வயதிலிருந்தே சிற்பம் செய்து வருகிறார், மாலா பால். ஆனால், தந்தை உயிருடன் இருந்தபோது, மாலா பட்டறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

தொடக்கக் காலத்தில் சிறிய சிலைகளை உருவாக்கி, தன்னுடைய சகோதரர் கோபிந்தோ பாலுக்கு உதவினார். இப்போது அதே வாழ்க்கையாக மாறி, எண்ணிலடங்கா சிலைகளை உருவாக்கி இருக்கிறார். அதற்காக மாவட்ட,மாநில அளவிலான அங்கீகாரங்கள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

டெல்லியில் பிரபலமாக அறியப்படும் தேசிய கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி அருங்காட்சியகத்துடன் பணிபுரியவும் அழைக்கப்பட்டிருக்கிறார். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மினியேச்சர் பொருட்கள், மடிக்கக்கூடிய துர்கா சிலை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றவராகவும் விளங்குகிறார்.


Next Story