சகிப்பும், அன்பும்... வாழ்வின் வெற்றி ரகசியங்கள்..!


சகிப்பும், அன்பும்... வாழ்வின் வெற்றி ரகசியங்கள்..!
x

உலகில் உள்ள அனைத்து மதங்களும் போதிக்கும் ஒற்றை வார்த்தை அன்பு. அன்பு நிறைந்த மனதில் சகிப்புத் தன்மை அதிகம் இருக்கும். பிறரிடம் இருக்கும் கெட்ட குணங்களையும், சகித்துக் கொள்ளும் பக்குவத்தை கொடுப்பது அன்பு மட்டுமே.

நவீன காலத்தில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தால், முகம் தெரியாத நபர்களைக் கூட நண்பர்களாக்கி கொள்ள முடியும். ஆனால் தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து வந்த உண்மையான அன்பும், நட்பும், இப்போதுள்ள முகநூலிலும், வலைத்தளங்களிலும் உள்ளதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். காரணம், தகவல் தொடர்பு அதிகம் இல்லாத காலத்திற்கும், இப்போதுள்ள காலத்திற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே சகிப்புத் தன்மைதான். சக மனிதர்களிடம் உள்ள விட்டுக் கொடுத்தலும், சகிப்புத் தன்மையும் இப்போது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.

எந்திரத்தனமான வாழ்வில் அனைவரும் பணத்தை நோக்கி ஓடும் சூழலில், அடுத்தவரிடம் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ளவர்களிடத்தில் கூட அன்பு பாராட்டுவதற்கும், தவறுகளை சகித்துக் கொள்வதற்குமான மனப்பக்குவத்தை படிப்படியாக இழந்து கொண்டே வருகிறோம்.

எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் அறிவும், புத்திசாலித்தனமும் உள்ள இந்த தலைமுறை குழந்தைகளிடம் சகிப்புத் தன்மை என்பது துளியளவு கூட இல்லை என்பதே கசப்பான உண்மையாகும். இதனால் தான் இன்று பெற்றோரின் கண்டிப்பை கூட தவறாக எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் உள்ளனர்.

பெற்றோரால் திருத்தப்படாத குழந்தைகள் கூட பள்ளிக்கு சென்றால் நல்ல ஆசிரியர்களால் திருத்தப்படுவார்கள். ஆனால், இன்று ஆசிரியர்களின் அறிவுரையையும், கண்டிப்பையும் கூட அவர்கள் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம், சகிப்புத் தன்மை குறைந்ததன்றி வேறொன்றுமில்லை.

பெற்றோர், குழந்தைகள் உறவு மட்டுமல்ல, கணவன்-மனைவி உறவும் சீர்கெட்டு கிடப்பதற்கு காரணம் இருவருக்கும் உள்ள விட்டுக் கொடுத்தலும், சகிப்புத் தன்மையும் இல்லாததுதான். அதனால் தான் இன்று குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் நடக்கும் அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லை எனும் அளவிற்கு இன்று வார்த்தைப் போர் நடந்து வருகிறது. தனக்குப் பிடித்த அரசியல்வாதி, தனக்குப் பிடித்த விளையாட்டு வீரர், தன்னை கவர்ந்த சினிமா ஹீரோ, ஹீரோயின்... இவர்கள் பற்றிய கருத்துகளை முன்வைக்கும்போது, அதே அளவிற்கு மற்றவருக்கும் தங்களது கருத்தை முன்வைக்க பூரண சுதந்திரம் உண்டு என்ற புரிதல் இன்றைய தலைமுறைக்கு சுத்தமாக இல்லை. அடுத்தவர் கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூட தேவையில்லை. சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் கூட இவர்களுக்கு கிடையாது. தன்னலமாக யோசிக்கும் தலைமுறைதான் உருவாகி உள்ளதே தவிர, அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் தலைமுறை உருவாகாமல் போனதற்கு மனிதர்களிடம் குறைந்து வரும் சகிப்புத் தன்மைதான் முக்கிய காரணம்.

கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் போட்டிகள் நிறைந்த உலகில் அனைத்தும் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற பிடிவாதம் தான் இளையதலைமுறை குழந்தைகளிடம் அதிகம். இந்த நிலை மாறி சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் குழந்தைகளிடம் வளரும் போதுதான் குற்றங்களை தடுக்க முடியும்.

இந்தியாவில் தற்கொலை நடைபெறும் மாநிலங்களில் மராட்டியம் முதலிடமும், தமிழகம் 2-வது இடமும் வகிக்கிறது. இதில் 33 சதவீதம் குடும்ப பிரச்சினைகளால் நடப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், உறவுகளுக்குள் கூட சகிப்புத் தன்மை குறைந்ததுதான். சகிப்புத் தன்மை அதிகமாகும் போது தானாகவே விவாகரத்துகளும், தற்கொலைகளும் குறையத் தொடங்கும்.

கடந்த காலங்களில் பெரும்பாலும் கூட்டுக் குடும்ப முறை வாழ்க்கை இருந்து வந்ததால், உறவுகளிடம் பழகுதல், அன்பு செலுத்துதல், விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை போன்றவை கற்றுக் கொடுக்காமலே குழந்தைகளிடம் வளர்ந்து வந்தது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் கூட்டுக் குடும்ப முறை சுத்தமாக ஒழிந்து விட்டது.

பெரும்பாலான பெற்றோர்களும் ஒரு குழந்தை போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டதால், குழந்தைகள் தனியாக வளரும் சூழலே அதிகம். இதனால் இயல்பாகவே விட்டுக் கொடுத்தலும், சகிப்புத் தன்மையும் அவர்களிடம் குறைவாகவே உள்ளது.

குழந்தை வளர்ப்பு முறையிலும் நிறைய மாற்றம். தங்களது குழந்தை கஷ்டம் தெரியாமல் வளர வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்களே தவிர, எதையும் அனுபவத்தில் கற்றுக் கொண்டு வளர வேண்டும் என நினைப்பதில்லை.

குழந்தைகள் விருப்பம் எதுவானாலும் அதை உடனே நிறைவேற்றி வைப்பதாலும், எது கேட்டாலும் மறுப்பின்றி கிடைத்து விடுவதாலும், ஆசைப்படும் எதையும் அடைந்தே தீர்வது என்ற மனப்பாங்கில் குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். அதனால் சிறுவயதிலேயே சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல் என்றால் என்ன என்பதே தெரியாமல் போய் விடுகிறது. இதுவே எதிர்காலத்தில் விரும்பும் எதுவும் கிடைக்காத பட்சத்தில், அதற்காக எதையும் அவர்கள் செய்யத் துணிகிறார்கள். இன்று இளைஞர்கள், மாணவர்கள் செய்யும் பல்வேறு குற்றங்களுக்கு அடிப்படை காரணமே இதுதான்.

இதனால் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கிய பாடமே, சக மனிதர்களிடத்தில் அன்பும், சகிப்புத் தன்மையும் கொள்வதுதான். இன்று உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண்ணை கூட கொலை செய்யும் அளவிற்கு சுயநலமாக வாழ்வதற்கு காரணம் பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தாமையும், சகிப்புத் தன்மை இல்லாததுமே காரணமாகும். எனவே வாழ்வின் நிலையான வெற்றிக்கு ''சகிப்புத் தன்மையே சக்சஸ்'' மந்திரமாகும் என்பதை நமது குழந்தைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்ப்போம்.


Next Story