வீடுகளில் மின் உற்பத்தி


வீடுகளில் மின் உற்பத்தி
x

மாற்று எரிசக்திகள் மற்றும் மரபுசாரா எரிசக்திகள் குறித்து உலகமே பேசிவருகிறது. குறிப்பாக மின் உற்பத்தியில் இந்த மரபுசாரா முறை வேகமாக பரவி வருகிறது.

சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்வதுதான் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்பதால் உலகம் முழுவதிலும் இப்புதிய தொழில்நுட்பம் பரவலாக பின்பற்றப்படுகிறது. நமது தேவைக்கு ஏற்ப இயற்கையிடமிருந்தே எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அது. கொஞ்சம் கவனம் செலுத்தினால் நமது தேவையும் தீரும். தேவையில்லாத சர்ச்சைகளும் ஓயும். மின்சாரம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்கவில்லை என்று அலுத்துக் கொள்பவர்கள் இந்த மாற்று வழியை யோசித்து செயல்படுத்தலாம்.

வீடு கட்டும் செலவோடு இந்த செலவையும் சேர்த்து கணக்கிட்டால் எதிர்கால மின் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம். சோலார் (சூரியஒளி) மின் உற்பத்தி என்பது எப்போதும் எந்த நேரமும் நமக்கு மின்சாரத்தைக் கொடுக்கக்கூடியது.

வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்ல. விவசாயம் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கும் இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சோலார் மின்சாரம் எடுப்பதற்கான தகடுகள் மற்றும் கருவிகளை அமைப்பதற்கான முதல்கட்ட செலவுகள் என்னவோ கொஞ்சம் அதிகம்தான். ஆனால் ஒரு முறை செலவு செய்துவிட்டால் அடுத்த இருபது வருடங்களுக்கு அதற்கு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் பெறுவது ஒரு வகை என்றால், காற்றாலை மின் உற்பத்தியும் மக்களுக்கு கை கொடுக்கிறது. காற்றாலை என்றதும் ராட்சத இறக்கை கொண்ட காற்றாடிகளை கற்பனை செய்ய வேண்டாம். வீட்டின் மொட்டை மாடியிலேயே சிறிய அளவில் அமைத்துக் கொள்ள முடியும். இந்த சிறிய காற்று மின் இயற்றியுடன் சோலார் தகடுகள் மூலமாகவும் மின் உற்பத்தி செய்வதுதான் 'ஹைபிரிட்' மின் உற்பத்தி முறை.

பகலில் சூரிய ஒளி மூலமும், இரவு மற்றும் மாலை வேளைகளில் காற்று மின் இயற்றி மூலமும் மின்சாரம் பெறலாம். காற்றுவாகு உள்ள பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் இந்த முறையை செயல்படுத்தலாம். இந்த முறையின் மூலம் 30 முதல் 40 சதவீதம் வரையும், சோலார் தகடுகளிலிருந்து 60 அல்லது 70 சதவீதம் அளவிலும் மின்சாரம் பெறலாம். தினசரி வீட்டில் எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்பதை பொறுத்து, அதற்கு ஏற்ப இந்த மின் உற்பத்தி உபகரணங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.


Next Story