கூட்டுப்பண்ணை நடத்தும் பேராசிரியர்


கூட்டுப்பண்ணை நடத்தும் பேராசிரியர்
x

மகாராஷ்டிராவை சேர்ந்த மானஷி, கல்லூரி பேராசிரியர். ஆனால் 2015-ம் ஆண்டில் இருந்து இயற்கை விவசாயியாக புது அவதாரம் எடுத்திருக்கிறார். தன்னுடைய 10 ஏக்கர் நிலத்தில், கூட்டுப்பண்ணை முறையில், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் இயற்கை உர தயாரிப்பை முன்னெடுத்திருக்கிறார்.

'மானஷியின் முயற்சியினால், அக்கம் பக்கத்து கிராமத்தினரும் கூட்டுப்பண்ணை முறையில் பயிர் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். பேராசிரியராகவும், இயற்கை விவசாயியுமாக அசத்தி வரும் மானஷி, நம்முடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

ஓய்வு நேரங்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த எண்ணினேன். அப்போதுதான், பயன்பாடற்ற 10 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யும் ஆசை வந்தது.

'கூட்டுப்பண்ணை' திட்டத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?

சாதாரண விவசாயி, எளிமையான முறையில் விவசாயம் மேற்கொள்வதற்கும், ஒரு பேராசிரியர் வித்தியாசமான முறையில் விவசாயம் மேற்கொள்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அதனால்தான், கூட்டுப்பண்ணையை தேர்ந்தெடுத்தேன்.

கூட்டுப்பண்ணை என்றால் என்ன?, உங்களது கூட்டுப்பண்ணையில் என்னென்ன வளர்க்கிறீர்கள்?

குறுகிய நிலப்பரப்பில், அதிகப்படியான பயிர் வகைகளை விவசாயம் செய்வதையே கூட்டுப்பண்ணை என்பார்கள். அதேசமயம் அதே விவசாய நிலத்தில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து, அதன் மூலமும் லாபம் சம்பாதிக்க முடியும்.

எங்களுடைய 10 ஏக்கர் நிலத்தில் நெல், கரும்பு, மாங்காய், உளுந்து, துவரை, பாசி பருப்பு, கடலை, கொய்யா, தென்னை, எலுமிச்சை, சோளம், கத்திரி, வெண்டைக்காய், மிளகாய்... என குறுகிய கால பயிர் தொடங்கி, நீண்ட கால பயிர்களையும் வளர்க்கிறோம். இவற்றோடு குளம் அமைத்து விரால், கெண்டை போன்ற மீன்களையும் வளர்க்கிறோம். அதுமட்டுமா...? ஆடு, நாட்டு மாடு, கோழி போன்றவற்றையும் ஒருசேர வளர்த்து வருகிறோம். நெல் நடவுக்கு 2 ஏக்கர் போக, மற்ற பயிர்களை சீசனிற்கு ஏற்ப ஒரு ஏக்கர் கணக்கில் வளர்க்கிறோம்.

* உங்களது கூட்டுப்பண்ணையின் சிறப்பு என்ன?

'சுயசார்பு' என்ற பார்முலாவில் இயங்கும் கூட்டுப்பண்ணை இது. அதாவது பயிர்களுக்கு தேவையான உரம், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் போன்றவற்றை கூட்டுப்பண்ணையில் இருந்தே தயாரித்து கொள்கிறோம்.

நாட்டு மாடு சாணம் செடிகளுக்கும், பயிர்களுக்கும் உரமாகிறது. மாட்டு கோமியம் உர கரைசல், பூச்சிக்கொல்லி கரைசல் தயாரிக்க பயன்படுகிறது. மீன் வளர்ப்பு குளத்திற்கு மேலாக கூண்டு அமைத்து ஆடு-கோழிகளை வளர்ப்பதால், அதன் கழிவுகள் மீனுக்கு இரையாகின்றன. மேலும், செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறோம். கூட்டுப்பண்ணையில் கிடைக்கும் பொருட்களை வீணாக்காமல் அதை கொண்டே உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து, இயற்கை முறையில் விவசாயம் செய்கிறோம்.

* நல்ல விளைச்சல் கிடைக்கிறதா?

ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் கொய்யா மரத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 150 கிலோ கொய்யா பழங்கள் கிடைக்கின்றன. மீன் குளத்தில் 700-க்கும் அதிகமான விரால் மீன்கள் நீந்துகின்றன. 600-க்கும் அதிகமான தென்னை கன்றுகள் நன்கு வளர்கின்றன. அவை வெகுவிரைவிலேயே பலன் அளிக்க உள்ளன. 2 ஏக்கரில் 36 நெல் மூட்டைகள் கிடைத்தன. ஒரு ஏக்கரில் வளர்ந்து நிற்கும் முருங்கை மரங்களில் இருந்து கீரை, பூ, காய் போன்றவை கிடைக்கின்றன. மாமரங்களும் சீசன்களில் நல்ல பலன் அளிக்கின்றன.

கூட்டுப்பண்ணையில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

நன்றாக திட்டமிட்டால் மட்டுமே கூட்டுப்பண்ணையில் வெற்றியடைய முடியும். ஏனெனில் குறுகிய நிலத்திற்குள், அதிக லாபம் ஈட்டுவது கடினமான ஒன்றுதான். இருப்பினும் சிறப்பாக திட்டமிட்டால், அதிக லாபம் ஈட்டலாம்.

பேராசிரியர், கூட்டுப்பண்ணை விவசாயி இவ்விரு பணிகளில் உங்களுக்கு பிடித்தமானது எது?

பேராசிரியர் என்பதைவிட, விவசாயி என்பதில்தான் பெருமையாக இருக்கிறது. இயற்கை உர தயாரிப்பையும், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பையும் என்னிடம் பலர் கற்றுக்கொண்டுள்ளனர். கூட்டுப்பண்ணை விவசாயி என்றபோதும், அதிலும் நான் ஆசிரியர் பணியையே மேற்கொண்டு வருகிறேன்.

கூட்டுப்பண்ணையில் பல புதுமைகளை செய்கிறீர்கள். இயற்கை முறையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிக்கிறீர்கள். எப்படி சாத்தியமாகிறது?

தோட்டக்கலை நண்பர்கள், விவசாய தோழர்கள், இயற்கை விவசாய புத்தகங்கள், கூகுள் தேடல்கள் என விவசாயம் சம்பந்தமான அறிவை வளர்த்துக் கொள்கிறேன். அதை என் குடும்ப பண்ணையில் முயன்று பார்க்கிறேன். மத்திய அரசிடமிருந்தும் பல உதவிகள் கிடைப்பதால், எல்லாமும் சாத்தியமாகிறது.

செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறோம். கூட்டுப்பண்ணையில் கிடைக்கும் பொருட்களை வீணாக்காமல் அதை கொண்டே உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து, இயற்கை முறையில் விவசாயம் பார்க்கிறோம்.

1 More update

Next Story