காவல்துறையில் போட்டி போடும் தாய்-மகள்


காவல்துறையில் போட்டி போடும் தாய்-மகள்
x

பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒரே பதவிக்கு போட்டியிடுவதை பார்ப்பது அரிது. இதேபோன்ற சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தாயும், மகளும் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

முதல்கட்டமாக நடந்த உடல் தகுதி தேர்வில் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாயார் பெயர், டேரெல்லி. மகள்: திரிலோகினி. இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு பங்கேற்று தேர்வாகி இருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

இவர்கள் இருவரும் கம்மம் மாவட்டம் நெலகொண்டப்பள்ளி அடுத்துள்ள சென்னாரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தாயார் டேரெல்லிக்கு 37 வயதாகிறது. இவருக்கும் தொல்ல வெங்கண்ணா என்பவருக்கும் 1999-ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. வெங்கண்ணா விவசாய தொழிலாளி. இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு திரிலோகினி என்று பெயரிட்டனர்.

குடும்பச் செலவுகளை சமாளிப்பதற்காக டேரெல்லி 2005-ம் ஆண்டு அங்கன்வாடி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்திருக் கிறார். குடும்ப சூழ்நிலை அந்த பணியை தொடர்வதற்கு தடையாக இருக்கவே, வேறு சில இடங்களிலும் வேலை பார்த்திருக்கிறார். அப்போது உடல் நலத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொண்ட பயற்சிகள், விளையாட்டு மீது ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறது.

கணவரும் ஊக்குவிக்கவே, கைப்பந்து, கபடி, கோ-கோ போன்ற விளையாட்டுகளை விளையாட தொடங்கி இருக்கிறார். மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று 10 பதக்கங்கள், 5 கோப்பைகள் உள்பட ஏராளமான சான்றிதழ்களை பெற்றிருக்கிறார். விளையாட்டு போட்டிகளில் பெற்ற பரிசும், கிடைத்த பாராட்டும் அவரது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு முன்னேறவைத்திருக்கிறது.

தெலுங்கானா மாநில காவல் துறையில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்திருக்கிறது. 2020-ம் ஆண்டு கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்திருக்கிறார். தற்போது முலுகு என்ற இடத்தில் பணி புரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவே, அதில் பங்கேற்க முடிவு செய்தார். அதற்கான உடல் தகுதி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தார்.

தாயாரை பார்த்து 21 வயதாகும் மகள் திரிலோகினிக்கும் காவல் துறையில் சேர்ந்து பணிபுரியும் ஆவல் உண்டானது. தாயாரின் வழிகாட்டுதலோடு அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். கம்மம் போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்புக்கான உடல் தகுதி தேர்வில் இருவரும் பங்கேற்று, வெற்றியும் பெற்றுவிட்டனர்.

''சப்-இன்ஸ்பெக்டர் போன்ற அரசு துறை தேர்வில் எனது மகளுடன் போட்டியிடுவது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் பாக்கியம்'' என்று டேரெல்லி நெகிழ்ச்சியோடு சொல் கிறார். இருவரும் எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

1 More update

Next Story