நீர் பாரம்பரியத்தை மீட்டெடுப்பவர்

நம் முன்னோர்கள், தண்ணீரை வெறும் தண்ணீராக பருகவில்லை. அதை ‘நீர் சமையல்’ முறையில்தான் பருகி இருக்கிறார்கள். மாற்று மருத்துவத்தில் பட்டய படிப்பை (செல்தெரபி) முடித்திருக்கிறார் நீர் ஆராய்ச்சியாளர் ரஜினி.
நாம் சாதாரணமாக நினைக்கும் நீருக்கு நிறையவே சக்தி இருக்கிறது. ஆம்..! உணவின்றி கூட பல நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால் தண்ணீர் இன்றி சில நாட்கள் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். இப்படி மனித உடலோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் நீரை பற்றி, கடந்த 20 வருடங்களாக ஆராய்ந்து வருகிறார், ரஜினி. திருச்சியை சேர்ந்தவரான இவர், மாற்று மருத்துவத்தில் பட்டய படிப்பை (செல்தெரபி) முடித்திருக்கிறார்.
உணவே மருந்து என்ற கருத்தை வெகுவாக நம்புவதுடன், நீரை பற்றி கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்கிறார். அதில் பல சுவாரசியமான விஷயங்களை கண்டறிந்திருக்கிறார்.
நீர் மீதான ஆர்வம் எப்படி வந்தது?
சித்தர்கள், முனிவர்கள் காலத்தில் இருந்தே தண்ணீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னோர்கள் காலத்தில், தண்ணீரை மருந்தாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். கோவில்களில் தீர்த்த குளங்கள் இருந்திருக்கிறது. அது பல இன்னல்களுக்கு மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது. இவ்வளவு மகத்துவம் நிறைந்த தண்ணீரை ஆராய்ச்சியின் மூலம் மேலும் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
வெகு காலமாக, நீரை ஆராய்ச்சி செய்து வருகிறீர்கள். அதில் கிடைத்த புதுமையான தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?
எல்லாவற்றுக்கும் ஒரு வடிவம் இருக்கும். அந்தவகையில், ஆரோக்கியமான நீர் அறுங்கோண வடிவத்தை பெற்றிருக்கிறது. இந்த அறுங்கோண வடிவிலான நீர்தான் உடலுக்கு ஏற்றது. உடல் செல்கள் உள்வாங்கக்கூடியது. அப்படி இன்றி, நாம் குடிக்கும் நீரில் அறுங்கோண வடிவம் இல்லை என்றாலும் நம் உடல், அந்த நீரை உள்வாங்கிக்கொள்ளும். ஆனால், உடலுக்குள் வந்த முறையான வடிவம் இல்லாத நீரை, அறுங்கோண வடிவமாக மாற்ற போராடும். இது இயல்பானதுதான். ஆனால் இதுவே உடலுக்குள் தொடர் வேலையாக மாறும்போது, உடல் பலவிதமான பிரச்சினைகளுக்கு உள்ளாகிறது. இதன் காரணமாகவும், நாள்பட்ட நோய்கள் அதிகமாக ஏற்படலாம் என்பதை, இந்த நீர் ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்திருக்கிறேன். இதை நிரூபிக்கும், ஆராய்ச்சிகள் மும்முரமாக நடக்கிறது.
இதை எப்படி சரிசெய்வது?
உடலுக்கு அதிகம் தொந்தரவு தராத வகையில், இயல்பாகவே அறுங்கோண வடிவம் பெற்ற, (ஸ்ட்ரக்செர்ட் வாட்டர்) தண்ணீரை பருகும்போது, இதை சரி செய்யலாம்.
நம்முடைய முன்னோர்கள், வெகு இயல்பான தண்ணீரையே பருகி இருக்கிறார்கள். கீழடி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட காட்சி இது. அங்கு ஆற்றிலிருந்து தண்ணீர் சுடுமண் குழாய்கள் வழியாக தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. அந்த தண்ணீரை ஆரோக்கியமானதாக மாற்ற, நல்ல வடிவத்திற்கு மாற்ற அதில் சில பவள கற்களை நிரப்பி, பிறகுதான் குடித்திருக்கிறார்கள். நம் முன்னோர்கள், அந்தக் காலத்திலேயே சிறப்பாக சிந்தித்திருக்கிறார்கள். அதனால்தான் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
தண்ணீர் ஆராய்ச்சியின் மூலமாக, நீங்கள் அறிந்துகொண்ட சுவாரசிய செய்தி என்ன?
நம் முன்னோர்கள், தண்ணீரை வெறும் தண்ணீராக பருகவில்லை. அதை 'நீர் சமையல்' முறையில்தான் பருகி இருக்கிறார்கள். ஆம்...! இந்த வழக்கத்தை இப்போது கேரள பகுதிகளில் பார்க்கலாம். அவர்கள், வெறும் தண்ணீரை குடிப்பதில்லை. தண்ணீரில் சீரகம், பட்டை, கிராம்பு, சில மூலிகை வேர்கள்... இப்படி ஏதாவது ஒரு மூலிகை பொருட்களை போட்டு, அதை நன்கு கொதிக்க வைத்து பிறகுதான் குடிப்பார்கள். இதை அந்த காலத்தில் நீர் சமையல் என்று அழைக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. ஆனால் நாம் இன்று, தண்ணீரை கொதிக்க வைப்பதும் இல்லை. அதை நல்ல வடிவத்திற்கு மாற்றுவதும் இல்லை.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு எத்தகைய தண்ணீரை பயன்படுத்த வேண்டும்?
தண்ணீர் எப்படி நல்ல வடிவமாக இருக்க வேண்டுமோ, அதேபோல தண்ணீரில் குறிப்பிட்ட அளவிலான தாது உப்புகளும் நிறைந்திருக்க வேண்டும். உலகம் முழுக்க இருக்கும் ஸ்பிரிங் தண்ணீரில், தாது உப்புகள் 50 முதல் 150 அளவுகளில் கரைந்திருக்கும். அதுவே உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இந்த அளவுகள் குறையும்பட்சத்தில், குறையும் சத்துக்களை நிரப்ப உடல் போராடும். அந்த போராட்டம் தொடர்கதையாகும் பட்சத்தில், தேவையில்லாத நோய் பாதிப்புகளுக்கு உள்ளாவோம்.
விளையாட்டு வீரர்கள், அதிக பணம் செலவழித்து தண்ணீர் குடிப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி அதில் என்ன ஸ்பெஷல்? போன்ற கேள்விகளும் நம் மனதில் எழுந்திருக்கும். அதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா..? தாது உப்புகள் சரியான அளவில் கலந்திருப்பார்கள்.
2020-ம் ஆண்டிற்கு முன்பு வரை, பேக்கிங் தண்ணீர் பாட்டில்களில், தாது உப்புகளின் அளவு குறைவாகவே இருந்தது. ஆனால் பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலின்படி, 2020-ம் ஆண்டிற்கு பிறகு, இந்தியாவில் விற்பனையாகும் குடிநீர் பாட்டில்களில், தாது உப்புகளின் அளவை பல நிறுவனங்கள் சரியாக பராமரிக்கிறார்கள். சில நிறுவனங்கள் இன்னும் இதை கடைப்பிடிப்பதில்லை. தற்போது வளைகுடா நாடுகளில் பாட்டில் குடிநீர் கண்காணிப்பு சீராக உள்ளது.
இந்த நடைமுறை சிக்கலை எப்படி சமாளிப்பது?
வழக்கமாக கிடைக்கும் குடிநீரை அறுங்கோண வடிவிற்கு மாற்றவும், தாது உப்புகளின் அளவை சமநிலைப்படுத்தவும் ஏதுவாக சில உபரத்தின கற்களை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அந்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. இது தண்ணீரின் மூலமாக, உடலின் பிராண வாயுவை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த இயற்கை சத்துக்கள் நிறைந்த செம்பவழ பானம், ஹைட்ரஜன் அணுக்களால் நிறைக்கப்பட்டிருக்கும். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று, அறிவியல் ஆய்வு இதழிலில் இது வெளியிடப்பட்டிருக்கிறது.
தண்ணீரை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும்?
முடிந்தவரை, குளம், கிணறு ஆகியவற்றில் இருந்து பெறப்படும் இயற்கை நீரை பருகுங்கள். அதற்கு வழியில்லை என்றால், கேன் தண்ணீரை மண் பானையில் ஊற்றி பருகலாம். மண் பானை இயற்கை வடிகட்டியாக செயல்பட்டு, நீரை சுத்தமாக்கிக் கொடுக்கும். அதேபோல, 3 மாதத்திற்கு மேல் ஒரு மண் பானையை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் நுண் துளைகளில் சேமிக்கப்பட்ட நுண் கிருமி களால் பாதிப்பு உண்டாகலாம். மேலும் தண்ணீரை காப்பர் பாட்டிலில் ஊற்றி குடிக்கலாம். அது இயற்கை முறையில் நுண்ணுயிரிகளை அழித்துவிடும். குறிப்பாக, காப்பர் பாத்திரங்களை சுத்தமாக பராமரியுங்கள். இறுதியாக, பிரிட்ஜ்ஜில் குளிரூட்டப்பட்ட தண்ணீரை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.
அடுத்தகட்ட திட்டம்?
ஹைட்ரஜன் எனப்படும் நீர் உணவு பற்றிய தேடலும், கிரீன் ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த ஆர்வமும் எனக்கு இருக்கிறது. குடிநீர் ஆராய்ச்சிக்கு பிறகு, இவற்றில் கவனம் செலுத்துவேன்.
முடிந்தவரை, குளம், கிணறு ஆகியவற்றில் இருந்து பெறப்படும் இயற்கை நீரை பருகுங்கள். அதற்கு வழியில்லை என்றால், கேன் தண்ணீரை மண் பானையில் ஊற்றி பருகலாம். மண் பானை இயற்கை வடிகட்டியாக செயல்பட்டு, நீரை சுத்தமாக்கி கொடுக்கும்.






