தொழிற்கல்விக்கு வழிகாட்டும் பெண் எலெக்ட்ரீஷியன் ரோஷ்னி


தொழிற்கல்விக்கு வழிகாட்டும் பெண் எலெக்ட்ரீஷியன் ரோஷ்னி
x

பெண்கள் அனைத்து துறையிலும் காலடி எடுத்து வைத்து விட்டாலும் ஒரு சில தொழில் துறைகள் மீது அதிக ஆர்வம் காட்டாத நிலையே நீடிக்கிறது. அப்படிப்பட்ட துறைகளுள் ஒன்று மின்சாரத்துறை. ஆண் ஆதிக்கம் மிகுந்த தொழிலாக விளங்கும் எலெக்ட்ரிக்கல் டெக்னீஷியன் பணியில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார், ரோஷ்னி.

குடும்ப சூழல்தான் அவரை இந்த தொழிலுக்கு அழைத்து வந்திருக்கிறது. 24 வயதாகும் ரோஷ்னி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். சிறு வயதில் ரோஷ்னியின் தாயார் இறந்துவிட்டார். ''தாய் இறந்த பிறகு என் தந்தை குடும்பம் என்னை விரும்பவில்லை'' என்று வேதனையோடு சொல்கிறார்.

டெல்லி பகுதியில் வசிக்கும் தாய்வழி பாட்டி மற்றும் அத்தைகளின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார். அவர்கள் குடும்பத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டங்கள் நிலவியபோதிலும் ரோஷ்னியை 12-ம் வகுப்பு வரை படிக்கவைத் திருக்கிறார்கள்.

''பள்ளிப்படிப்பை முடித்த பிறகு என்னை தொடர்ந்து படிக்க வைக்க பணம் இல்லை. அதனால் 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தேன். அந்த காலகட்டத்தை நினைத்து பார்ப்பதற்கே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது'' என்கிறார்.

உயர் கல்வி படிப்பை தொடர முடியாமல் தவித்தவருக்கு டெல்லி அரசின் தொழில் துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ.) சேரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை வீணடிக்க விரும்பாமல் முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்.

''எனது உறவினர்கள் இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு பற்றி கூறினார்கள். அதில் சேர்ந்து படிக்குமாறு ஊக்கப்படுத்தினார்கள். நானும் கஷ்டப்பட்டு படித்தேன். நல்ல மதிப்பெண் பெற்று வந்தேன். படிப்பை முடிப்பதற்குள்ளாகவே டாடா பவர் நிறுவனத்தில் டெக்னீஷியனாக சேர்த்துக்கொள்ளப்பட்டேன். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பட்டம் பெற்றேன். அக்டோபரில் வேலையில் சேர்ந்து விட்டேன். மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.

பணிக்கு இடையே டெல்லியில் உள்ள ஆர்யபட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் பகுதி நேர டிப்ளமோ படிப்பில் சேர்ந்திருக்கிறேன். டிப்ளமோ படிப்பை முடித்து உதவி அதிகாரி அல்லது ஜூனியர் என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதே என் அடுத்த கனவு'' என்கிறார்.

தற்போது டிரான்ஸ்பர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறுகிய காலகட்டத்துக்குள்ளாகவே சிறந்த பணியாளருக்கான விருதை பெற்றுள்ளார். பெண்கள் ஐ.டி.ஐ. படிப்புகளில் சேர்ந்து தொழில்நுட்ப வேலைகளிலும் ஈடுபட வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கிறார்.

''நான் ஐ.டி.ஐ.யில் சேர்ந்தபோது அங்கு மொத்தமே 6 பெண்கள்தான் படித்தார்கள். சில வேலைகளை ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்று முடிவு செய்துவிடக்கூடாது. அந்த வேலைகளை பெண்களால் செய்ய முடியாது என்று கூறவும் கூடாது.

எங்களால் மின் கம்பங்களில் ஏறி பராமரிப்பு பணிகளை செய்ய முடியாது என்று கூறுவது தவறு. எந்த துறையிலும் பெண்களாலும் 100 சதவீத பங்களிப்பை அளிக்க முடியும். நாம் மனது வைத்தால் ஆண்களை விடவும் சிறப்பாக பிரகாசிக்க முடியும். நான் ஜூனியர் அதிகாரி ஆக விரும்புகிறேன்.

அதன் பிறகு எனது அடுத்த இலக்கை முடிவு செய்வேன். வாழ்வில் முன்னேறுவதற்கு குறுகிய கால இலக்கை நிர்ணயித்து அதில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று நான் நினைக்கிறேன். அதில் வெற்றி அடைந்ததும் அடுத்த இலக்கை நோக்கி எளிதாக பயணிக்க முடியும்" என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.


Next Story