செல்பி சிரிப்பு...

உலக மக்களிடையே ஆயிரம் மொழிகள் பேசப்பட்டாலும், அனைத்து மக்களுக்கும் பொதுவான மொழி புன்னகை. பல கோடி உயிரினங்கள் இருந்தாலும் யாருக்கும் கிடைக்காத தனிப்பட்ட குணம் இந்த சிரிப்பு. இது மனிதனுக்கு மட்டுமே இயற்கை அளித்த வரம்.
போர்க்களத்தின் தீவிரத்தைக் கூட மாற்றும் சக்தி புன்னகைக்கு உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க சிரிப்பை நாம் தொலைத்து விட்டு செயற்கையாய் வாழும் வாழ்க்கையால் இழப்பது ஏராளம்.
முகம் தெரியாத மனிதர்களை கூட நாம் எளிதில் புன்னகையால் கவர்ந்து விட முடியும். கருப்பு வெள்ளை திரைப்பட காலத்தில் பெண்கள் தரையை பார்த்து நடப்பதே அவர்களுக்கு சிறப்பு என்பது போல் காட்சிப்படுத்துவார்கள். இன்றைய செல்போன் உலகில் பெண்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே தலைகுனிந்து தரை பார்க்கும் பிறவிகளாக மாறி விட்டோம்.
மனிதனை கட்டிப்போட்ட செல்போன்
நவீன கண்டுபிடிப்புகள் எப்போதும் மனிதனை மேம்படுத்துவதற்கே உதவும். நாகரிக வாழ்க்கைக்கு மாற நினைத்த மனித இனம் சக்கரத்தை கண்டு பிடித்த காலம் தொட்டே அவனின் வாழ்க்கை முறை விரைவாக மாறத் தொடங்கியது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து செல்லவும், பொருட்களை இடம் மாற்றவும் சக்கரம் அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மனிதனின் வாழ்க்கைச் சக்கரமும் வேகமாக சுழலத் தொடங்கியது. நவீன கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் உடல் உழைப்பு குறைந்து வேலைகளும் சுலபமாகத் தொடங்கியது. இதில் செல்போனின் வரவு மனிதனின் தகவல் தொடர்பு செயல்பாடுகளை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட்டது என்றால் அது மிகையல்ல.
இந்திய பண்பாட்டில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை அமைப்பு சிறந்த வாழ்க்கை முறையாக இருந்தது. ஆனால் இன்றைய வேகமான உலகில் கணவன்-மனைவி இணைந்து வாழ்வதே கூட்டுக்குடும்பம் என்றாகி விட்டது. வீட்டில் எத்தனை பேர் இருக்கிறோமோ, அத்தனை பேர் கையிலும் இன்று செல்போன்கள். அனைவர் கையிலும் இன்று ஆறாவது விரலாகிப் போன செல்போனை விட்டுப் பிரிய முடியாத நிலை. செல்போனால் நாம் பெற்றது ஆயிரம் என்றால் இழந்தது ஏராளம் என்ற அளவிற்கு நிலைமை மாறி வருகிறது. காரணம், செல்போன் வந்தது முதல் நாம் இழந்தது சிரிப்பைத் தான் என்கிறார்கள், ஆய்வாளர்கள்.
குறைந்து வரும் சிரிப்பு
ஆம், நாம் குழந்தையாய் இருக்கும் போது நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 முறை சிரிக்கிறோம். ஆனால் வயது ஆக ஆக சிரிப்பின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது ஒருவர் ஒரு நாளில் 10 முறை சிரித்தாலே அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த அளவுக்கு மனிதர்கள் 'உம்மணாமூஞ்சி' ஆகிவிட்டார்கள்.
அதிலும் அருகில் உள்ள மனிதனைப் பார்த்து சிரிப்பதை விட செல்போனை பார்த்து சிரிப்பதே அதிகம். அலுவலகம், பயணம், பொது இடம் மட்டுமல்ல, வீட்டிற்கு வந்தாலும் மனிதர்களை ஆக்கிரமிப்பது செல்போன்கள் தான். குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு படிப்பு, வேலை அனைத்தும் வீட்டில் இருந்தே செய்ய வேண்டிய நிலை அனைவருக்கும் ஏற்பட்டது. அப்போது முதல் செல்போன் நம்மில் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது.
நோட்டுப் புத்தகங்களில் வீட்டுப் பாடம் கொடுத்த நிலை மாறி இன்று அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆன்லைன் கல்வி முறை மாறி வீட்டுப் பாடங்கள் மட்டுமல்ல, அனைத்துப் பாடங்களும் செல்போனில் தான் வருகின்றன. இதனால் வீட்டிற்கு வந்தாலும் குழந்தைகள் செல்போன் அல்லது லேப்டாப்பில் மூழ்கி விடுகின்றன.
மலையேறிப் போன காலம்
கணவன்-மனைவியை சொல்லவே வேண் டாம். வேலைக்குச் செல்லும் கணவனோ பேஸ்-புக், டிவிட்டர் என அரட்டை அடிக்க, மனைவியோ சமையல் யூ-டியூப்பில் மூழ்கி விடுகிறார்கள்.
கணவன் மனைவியிடமோ, மனைவி கணவனிடமோ மனம் விட்டுப் பேசக் கூட நேரமில்லை. அவர்களின் அன்னியோன்யத்தை செல்போன்கள் ஆக்கிரமித்து பல நாட்களாகி விட்டது. குழந்தைகள் பெற்றோரிடம் பேசும் நேரத்தை விட தங்களது லேப் டாப்பில் செலவிடும் நேரமே அதிகம். சமூக வலைத்தளங்கள் மட்டுமல்ல, நமது கல்வி முறை கூட அவர்களை பெற்றோரிடம் இருந்து அன்னியமாக்கி உள்ளது.
சாப்பிடும் நேரத்தில் கூட செல்போன் பார்க்கும் கணவனால் சாப்பாட்டின் ருசியை மட்டுமல்ல, மனைவியின் கைப்பக்குவத்தை கூட ரசிக்க முடியாமல் போய் விடுகிறது.
குழந்தைகளுக்கு நிலாவை காண்பித்து சோறு ஊட்டிய காலம் எல்லாம் மலையேறி போய் விட்டது. இன்று அனைத்து குழந்தைகள் கையிலும் செல்போனும், அதில் உள்ள விளையாட்டுகளுமே அவர்கள் உண்பதற்கு உற்ற தோழனாய் மாறி விட்டது. 2 வயது குழந்தைகள் கூட ஆண்ட்ராய்டு செல்போனை அனாயசமாக கையாள்கிறார்கள் என் றால், அது வளர்ச்சியா? அல்லது கலாசார வீழ்ச்சியா? என நாம் பட்டிமன்றம் தான் நடத்த வேண்டும்.
மாறிய வாழ்க்கை முறை
முன்பெல்லாம் பஸ், ரெயில் பயணம் என்றால் ஜன்னலோர இருக்கை தேடி, இயற்கை காற்றையும், காட்சிகளையும் ரசிப்பது தனி சுகம். ஆனால் இந்த செல்போன் யுகத்தில் அருகில் அமர்ந்திருப்பவரைக் கூட நம்மால் அடையாளம் காண முடியாத அளவிற்கு நாம் அடிமையாகிக் கிடக்கிறோம்.
இரவு விளக்கை அணைத்து விட்டு தூங்கப் போகும் நேரத்திலும் செல்போன் வெளிச்சமே ஏராளமான வீடுகளில் இரவு விளக்காக ஒளிர்வதை யாராலும் மறுக்க முடியாது.
இத்தனை தூரம் நமது வாழ்க்கையை ஆக்கிரமித்த செல்போனால் நாம் இழந்தது புன்னகை எனும் போற்றக்கூடிய குணத்தைத் தான். சக மனிதரிடம் அன்பு பாராட்டக் கூட நமக்கு நேரமில்லாத வாழ்க்கை முறையைத்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
செல்போனில் வரும் மீம்ஸ் தவிர்த்து நாம் இயல்பாய் சிரித்து எத்தனை நாளாகிறது. பேஸ்புக், வாட்ஸ்-ஆப் என சமூக வலைத்தளங்கள் தவிர்த்து நாம் உறவுகளிடம் நேரில் மனம் விட்டுப் பேசி எத்தனை வருடங்களாகிறது. பிறப்பு, இறப்பு, திருமணம் என அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இன்று சம்பிரதாய நிகழ்வாக மாறிப் போனதற்கு நமது வாழ்க்கை முறை மட்டும் காரணம் அல்ல, நாம் வாழும் முறையும் தான்.
எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் நமது கவனம் செல்போனில் தானே இருக்கிறது. உறவுகளிடம் பேசிச் சிரித்துப் பழகிய காலம் போய், பார்த்தவுடன் செல்பி எடுக்கும் நிகழ்வுதானே நம்மோடு ஊறிப் போயுள்ளது. முகம் பார்த்து உறவுகளிடம் சிரிக்கும் காலம் மாறி, செல்பிக்காக உதடு சுளித்து சிரிக்கும் செயற்கைப் புன்னகைக்குத் தானே நாம் அடிமையாகி உள்ளோம்.
மாரடைப்பு மரணங்கள்
இன்று எங்கு பார்த்தாலும் இளம் வயது மாரடைப்பு மரணங்கள் நமக்கு அதிர்ச்சி தருகின்றன. மாறி வரும் உணவுப் பழக்க வழக்கம் ஒரு காரணம் என்றாலும், உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பை விட மனிதர்களுக்கு மகிழ்ச்சி குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வரும் மாரடைப்பே அதிகம் என்கிறார்கள், மருத்துவர்கள்.
மாரடைப்பைத் தள்ளிப் போடும் விலையில்லா மருந்து சிரிப்பு மட்டுமே. அதனால் தான் சிரிப்பை ஒரு உடற்பயிற்சியாக்கி அதையாவது செய்யுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். 3 மணி நேர சினிமாவில் கூட குறைந்தது 30 நிமிடம் சிரிப்புக் காட்சிகளைச் சேர்க்கிறார்கள். காரணம், வாழ்வில் சிரிப்புத் தான் மனச்சோர்வை போக்கும் மாமருந்து.
நாம் மற்றவரைப் பார்த்து முகம் சுளிக்க வேண்டுமானால் முகத்தில் உள்ள 43 தசை நார்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால் மற்றவர்களைப் பார்த்து புன்னகைக்க 17 தசை நார்கள் வேலை செய்தால் போதுமாம். இதில் இருந்தே நாம் புன்னகை செய்வது எவ்வளவு எளிதென்று புரிந்து கொள்ள முடியும்.
அடுத்தவர் நம்மைப் பார்த்து சிரிக்கத்தான் வாழக்கூடாது, அடுத்தவர்களை சிரிக்க வைத்து வாழலாம். அதனால் என்றென்றும் புன்னகை பூக்களை இந்த புவியெங்கும் மலரச் செய்வோம்.
மன அழுத்தம்
'ஸ்ட்ரெஸ்' (மனஅழுத்தம்) என்ற வார்த்தையை இன்று நாம் பரவலாக கேட்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட வார்த்தையை நாம் கேள்விப்பட்டதும் இல்லை, அதற்காக ஆலோசனை பெற்றதும் இல்லை. பள்ளி மாணவன் முதல் பல் போன முதியவர் வரை மனஅழுத்தத்தால் தவிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அடுத்தவரிடம் மனம் விட்டு பேசுவது, குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாய் உரையாடுவது, விருந்து, கேளிக்கை என உறவுகளிடம் ஒன்றாய் இணைந்திருப்பது, பள்ளி, கல்லூரிகளில் இலக்கிய மன்றம், நகைச்சுவை மன்றம் என கூடிக் குலாவுவது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் பரஸ்பர உறவுகளை மேம்படுத்தி மனதை மகிழ்வாய் வைத்திருக்க உதவியது. இன்று அனைத்திற்கும் வாட்ஸ்-ஆப் குழுக்கள் மட்டுமே உள்ளது. அதிலும் அரதப் பழசாய் பகிரப்படும் மொக்கை நகைச்சுவைக்கு சிரிப்பை ஸ்மைலியாய் அனுப்பி விட்டு அமைதியாகி விடுகிறோம்.
சிரிப்பின் வகைகள்
மொழியால் நமது மனதில் உள்ள எண்ணங்களை மட்டும் வெளிப்படுத்த முடியும். ஆனால் அதே வேளையில் அன்பு, மகிழ்ச்சி, அகம்பாவம், செருக்கு, இறுமாப்பு, தற்பெருமை, அவமதிப்பு, புறக்கணிப்பு, வெறுப்பு என்ற அனைத்தையும் வெளிப்படுத்தும் சக்தி புன்னகைக்கு மட்டுமே உண்டு. அதிலும் அன்பை வெளிப்படுத்தும் புன்னகைக்கு உள்ள சக்தி உலகில் வேறு எதற்கும் இல்லை. சிரிப்பில் கூட ஏராளமான வகைகள் உண்டு. அசட்டு சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டி சிரிப்பு, புன்சிரிப்பு, மழலைச் சிரிப்பு, நகைச்சுவை சிரிப்பு. இதில் புதிதாக சேர்ந்துள்ளதுதான் செல்பி சிரிப்பு.
விலையில்லாத அருமருந்து
புன்னகையின் மகத்துவம் தெரியுமா? இதையறிந்த வள்ளுவப் பெருந்தகை ''இடுக்கண் வருங்கால் நகுக'' என்று சிரிப்புக்காக குரல் வடித்துள்ளார். அதைத்தான் இன்றைய நவீன மருத்துவமும் சொல்கிறது. ஆம், புன்னகை போன்ற சிறந்த மருந்து இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள். எந்த கடையிலும் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத அருமருந்துதான் புன்னகை.
நமது உடலில் உள்ள 108 நரம்புகள் மூளையைத் தொடுகின்றன. அதில் நாம் வாய்விட்டுச் சிரிக்கும் போது 62 நரம்புகள் வேலை செய்கின்றன. சிரிக்கும் போது 300 தசை நார்கள் விரிகின்றனவாம். இதனால் என்ன நன்மை தெரியுமா? சிரிக்கும் போது நமது ரத்த ஓட்டம் சீராகிறது.
மிகுந்த கோபமாக இருக்கும் போது, நிதானித்து நாம் சிரித்தால் உடலில் தெம்பூட்டும் வேதியியல் பொருட்கள் சுரக்கின்றன. இதனால் இதயமும், நுரையீரலும் நல்வழியில் தூண்டப்படுகிறது. பிராண வாயு ஓட்டம் அதிகரித்து மனம் உற்சாகமாக மாறுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.






