உலகக்கோப்பை நாயகி 'ஷபாலி வர்மா'


உலகக்கோப்பை நாயகி ஷபாலி வர்மா
x

19 வயதிற்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதற்கு, முக்கிய காரணம் ஷபாலி வர்மா.

சமீபத்தில் நடந்து முடிந்த, 19 வயதிற்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதற்கு, முக்கிய காரணம் ஷபாலி வர்மா. இவர் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கியதுடன், 'நாக்-அவுட்' ஆட்டங்களில், சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். அவர் பற்றிய சிறு தகவல் தொகுப்பு...

ஷபாலி வர்மா, அரியானாவில் பிறந்தவர். இவரது பெற்றோர், சஞ்சீவ்-பிரவீன் பாலா. இவர் 9 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுகிறார். கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்ப பயிற்சிகளை, தன்னுடைய தந்தை மூலமாகவே பெற்றார். பிறகு 3 வருட பயிற்சிக்குப் பிறகு, ராம் நாராயண் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

14 வயதிலேயே அரியானா மாநில அணியில் விளையாட ஷபாலிக்கு இடம் கிடைத்தது. கூடவே, அணியை வழிநடத்தும் கூடுதல் பொறுப்பும் கிடைத்தது.

மாநிலம், தேசியம் என பல அணிகளில் ஷபாலி ஆட்டத்தில் அனல் பறந்ததால், 15 வயதிலேயே இந்திய பெண்கள் அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். அதுவும், டி-20 உலகக்கோப்பை இந்திய பெண்கள் அணியில் அங்கம் வகித்தார். பல போட்டிகளில் அதிரடியாகவும் பவுண்டரிகளை விளாசினார். மிகவும் இளம் வயதில், இந்திய அணியில் விளையாடியவர் என்ற பெருமை, ஷபாலியிடமே இருக்கிறது.

ஷபாலியின் ரோல்மாடல் யார் தெரியுமா...? சச்சின் தெண்டுல்கர். மாநில அளவில் பல வெற்றிகளைத் தேடிக்கொடுத்த ஷபாலி, வெகுவிரைவிலேயே, குறைந்த வயதினருக்கான தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார். அங்கும் அவரது ஆட்டம் சிறப்பாக வெளிப்பட்டது. இவர் அதிரடி ஆட்டக்காரர் என்பதுடன், சிறப்பான ஆல் ரவுண்டரும் கூட. இவரது பந்துவீச்சும், சிறப்பாகவே இருக்கிறது. அதேபோல, பீல்டிங் துறையிலும் அசத்துகிறார்.


Next Story