பைக்கில் கீழே விழுந்தார்...! உடனே மீண்டு எழுந்தார்..!


பைக்கில் கீழே விழுந்தார்...! உடனே மீண்டு எழுந்தார்..!
x

விபத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், அதில் இருந்து மீண்டு இன்று பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

எந்த மோட்டார் சைக்கிளால் வீழ்ந்தேனோ, அதே மோட்டார் சைக்கிளைப் பிடித்தே மீண்டும் எழுந்தேன். என்னை இன்று உயரத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பது மோட்டார் சைக்கிள்தான்.

பொதுவாக, தங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்தை இந்திய பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. இதில், வித்தியாசப்பட்டு நின்றவர் சிங்கஜோகி சத்யவேணியின் தாய். தற்போது சிங்கி ஜோகி சத்யவேணிக்கு 25 வயது ஆகிறது. விபத்தில் சிக்கி மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டபோது தாயார் தான் உந்துதலாக இருந்தார்.

இன்று தானும் உயர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள பெண்களும் உயர வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.

இது குறித்து விபத்திலிருந்து மீண்ட சிங்கஜோகி சத்யவேணி, "நான் சென்னையில் பி.காம் முடித்துள்ளேன். மோட்டார் சைக்கிள் ஓட்ட எனக்கு மிகவும் பிடிக்கும். ராயல் என்பீல்டு பைக் வாங்கினேன். இதுதான் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. நான் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை. சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறேன். ஆனால் மோட்டார் சைக்கிள் விபத்து ஒரு நிமிடத்தில் என் கனவைத் தகர்த்துவிட்டது. கை-கால்களில் பலமாக அடிபட்டிருந்ததால், இனி என்னால் டென்னிஸ் விளையாட முடியாது என்று எண்ணினேன். இது எனக்கு மன அழுத்தத்தையும், கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது.

ஒருகட்டத்தில் டென்னிஸ் என்பதை மறந்துவிட்டு, என்னிடம் உள்ள இரண்டு என்பீல்டு மோட்டார் சைக்கிளில் நிறைய பயணம் செய்துவிட்டேன். சென்னையில் இருந்து கிளம்பி, பெங்களூரு சென்று, அங்கு வெகுநாட்கள் தங்கியிருந்தேன். இப்போது தெலுங்கானாவில் பைக் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்'' என்றவர், பைக் விபத்தில் வாழ்க்கையை தொலைத்து, அதே பைக் மூலமாகவே தன்னுடைய வாழ்க்கையை கட்டமைத்து வருகிறார்.

''எந்த மோட்டார் சைக்கிளால் வீழ்ந்தேனோ, அதே மோட்டார் சைக்கிளைப் பிடித்தே மீண்டும் எழுந்தேன். என்னை இன்று உயரத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பது மோட்டார் சைக்கிள்தான்.

என்னுடைய பேஸ்புக் பதிவுகளை பார்த்து, என்னிடம் நிறைய பெண்கள் பைக் ஓட்டும் பயிற்சிக்கு முயற்சித்தனர். அதை நான் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, பைக் ஓட்ட சொல்லிக்கொடுத்தேன்.

இப்போது, நான் இந்தியாவை சுற்றிவரும் கனவில், தெலுங்கானாவில் பயணித்து வருவதால், இங்கிருக்கும் பெண்களுக்கு பைக் ஓட்டும் பயிற்சிகளை கற்றுக்கொடுக்கிறேன். பிறகு, நான் செல்லுமிடங்களில் எல்லாம் கற்றுக்கொடுக்க ஆவலாக இருக்கிறேன். இதுமட்டுமல்ல, பயண வழியில், பைக் மீது விதவிதமான வண்ணங்களைத் தீட்டும் பணியையும் செய்து வருகிறேன். அதோடு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளேன்.

பெண்கள் சுதந்திரமாக இயங்க என் தொண்டு நிறுவனம் உதவி செய்யும். என் இளைய சகோதரி எனக்கு உதவியாக இருக்கிறார்'' என்றவர், பைக்கிற்கு வண்ணம் தீட்டுவதில் இருந்து பணம் சம்பாதித்து அதை தன் தொண்டு நிறுவனம் மூலமாக பயனுள்ள வகையில் செலவு செய்கிறார்.

''என்னோடு சேர்ந்து என் இளைய சகோதரியும் மோட்டார் சைக்கிள்களுக்கு வண்ணம் தீட்டுகிறார். வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைனை வண்ணமாகத் தீட்டுகிறோம். அதன்மூலம் கிடைக்கும் பணத்தை, பெண் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான பைக் பயண செலவுகளுக்கு செலவு செய்கிறோம்.

ஒரு டிசைனை திரும்ப வாகனங்களில் வரைவதில்லை. விமர்சனங்களையே நான் சவாலாக எடுத்துக்கொண்டேன். விமர்சனம் செய்தவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சர்வதேச அளவில் ஓவியக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். மீண்டு வந்து நான் சாதித்துக் கொண்டிருப்பதற்கு உத்வேகம் அளித்தது என் தாய்தான்'' என்று சிலாகிக்கிறார், சத்யவேணி.

சென்னையை பூர்வீகமாக கொண்ட சத்யவேணி, இப்போது பெங்களூருவில் தொண்டு நிறுவனத்தை பதிவு செய்து, அங்கிருந்து பைக் பயணங்களை மேற்கொள் கிறார். இவருடன் பைக் பயணம் மேற்கொள்ளவும், இவரது கலைவண்ணத்தில் பைக்கிற்கு வண்ணம் பூசிக்கொள்ளவும், தனி பெண் ரசிகைகள் பட்டாளமே இருக்கிறது.


Next Story