இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்' நாளை விண்ணில் ஏவப்படும் - ஸ்கைரூட் நிறுவனம் அறிவிப்பு


இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் நாளை விண்ணில் ஏவப்படும் - ஸ்கைரூட் நிறுவனம் அறிவிப்பு
x

Image Credit:Twitter@SkyrootA

இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்', இம்மாதம் 12-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

விண்வெளித் துறையில் தனியார் துறை பங்கேற்பை எளிதாக்க 2020இல் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் 'விக்ரம் சாராபாய்' அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'விக்ரம்-எஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

வானிலையை பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி ராக்கெட் ஏவுதலை இம்மாதம் 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.

இம்மாதம் 15-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படுவதற்கான கால அவகாசம் உள்ளது. நாளை(18-ந் தேதி) காலை 11.30 மணியளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 'இஸ்ரோ' ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. வணிக நோக்கத்தில், ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முதல் இந்திய தனியார் விண்வெளி நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் பெற உள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்பேஸ்-கிட்ஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள 2.5 கிலோ எடையுள்ள 'பன்-சாட்' என்ற செயற்கைக்கோளை 'விக்ரம்-எஸ்' ராக்கெட் சுமந்து செல்லும். இந்த செயற்கைக்கோள் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story