சூரிய ஒளியூட்டப்பட்ட குடிநீர்


சூரிய ஒளியூட்டப்பட்ட குடிநீர்
x

சூரிய ஒளியை உடல் உள்வாங்குவது போல சூரிய கதிர்கள் ஊடுருவும் தண்ணீரை பருகுவதும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்யும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். அந்த சமயத்தில் சில நிமிடங்கள் உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்பதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை பெறலாம் என்று மருத்துவமும் உறுதிப்படுத்தியுள்ளது. காலை வேளையில் வெளிப்படும் சூரிய கதிர்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு நிவாரணியாகவும் அமைந்திருக்கின்றன. அதனால் இந்திய கலாசாரத்தில் சூரியனுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. சூரிய ஒளியை உடல் உள்வாங்குவது போல சூரிய கதிர்கள் ஊடுருவும் தண்ணீரை பருகுவதும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

ஆயுர்வேதத்தின்படி சூரிய ஒளியூட்டப்பட்ட தண்ணீர் பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனை பருகுவது ஆயுளை அதிகரிக்கச்செய்யும் என்றும் நம்பப்பட்டது. தண்ணீரின் மீது சூரிய ஒளி விழும்போது, நீரிலுள்ள மூலக்கூறு கட்டமைப்பை மேம்படுத்தும் என்றும் ஆயுர்வேதம் சொல்கிறது. தண்ணீருக்கு ஆற்றலை அளித்து, உயிர்ப்பு தன்மை கொண்டதாக மாற்றும் என்றும் கூறுகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பல்வேறு சுகாதார பிரச்சினைகளை குணப்படுத்தவும் சூரிய ஒளியூட்டப்பட்ட நீர் உதவுவதாகவும் குறிப்பிடுகிறது.

சூரிய ஒளியூட்டப்பட்ட நீரை ஏன் பருக வேண்டும்?

சூரிய ஒளியூட்டப்பட்ட நீரில் வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலுக்கும், சருமத்திற்கும் சிறந்தது. ஆயுர்வேதத்தின்படி இந்த நீரை தினமும் பருகுவது நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற செரிமான பிரச்சினைகளை போக்குவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எப்போதுமே வைட்டமின் டியின் சிறந்த ஆதாரமாக சூரிய ஒளி விளங்குகிறது. அது எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் சூரிய ஒளியூட்டப்பட்ட நீரை பருகுவதும் பலம் சேர்க்கும். சரும தடிப்புகள், ஒவ்வாமை போன்ற தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் ஆயுர்வேதத்தில் சூரிய ஒளியூட்டப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பைக் கொடுப்பதற்கும் உதவுகிறது. இருப்பினும் சூரிய ஒளி நீரை பருகுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

எப்படி தயாரிக்க வேண்டும்?

சூரிய ஒளியூட்டப்பட்ட நீரை வீட்டிலேயே எளிதாக தயாரித்துவிடலாம். கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதை குறைந்தபட்சம் 8 மணி நேரம் சூரிய ஒளிபடும் இடத்தில் வைக்க வேண்டும். பின்பு அந்த நீரை பருகலாம். தினமும் 8 மணி நேரம் வீதம் 3 நாட்கள் சூரிய ஒளியில் அந்த தண்ணீரை வைத்திருப்பது அதை விட சிறந்தது. இந்த தண்ணீரை பிரிட்ஜில் வைத்து பருகக்கூடாது.


Next Story