நட்சத்திர பூ

ஐந்து முனைகளுடன் நட்சத்திர வடிவில் காட்சியளிக்கும் நட்சத்திரப்பூக்கள் (star flower) மிகவும் அரிதானவை.
மத்தியத்தரைக்கடல் நாடுகளைத் தாயகமாகக் கொண்டவை. இவை மலரத் தொடங்கும்போது பிங்க் நிறத்தில் இருக்கும். பூக்கள் நன்கு மலர்ந்த நிலையில் நீலநிறமாகிவிடும். மெல்லிய முட்களுடன் காணப்படும் இச்செடியை தேனீக்கள் எப்போதும் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.அதனாலே இதை தேனீக்களின் பிரீட் (Bee bread) என்று அழைக்கிறார்கள்.
இதன் இலை, பூ, காய் மற்றும் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அனைத்தும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. மேலும் பூக்களை சர்க்கரைப்பாகில் நனைத்து கேக்குகளின் மேல் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இதன் எண்ணெய் பண்டைய ரோமானியர் காலத்திலிருந்தே ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ளது. ரோமானியப் போர்வீரர்கள் போருக்குச் செல்வதற்கு முன் நட்சத்திர பூக்களினால் தயாரிக்கப்படும் மூலிகை தேநீரையும், ஒயினையும் கலந்து குடித்து தங்களைப் பலப்படுத்திக்கொள்வார்களாம். அதுபோக, இதன் எண்ணெய் சரும நோய்களுக்கு நல்ல மருந்து என்பதால் சரும அழகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலி, நீரிழிவு, நுரையீரல் நோய், இதயநோய், வலி, வீக்கம் போன்றவற்றிற்கான நிவாரணியாகவும் இது பயன்படுகிறது.






