வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்க வழிகாட்டும் பெண்மணி


வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்க வழிகாட்டும் பெண்மணி
x

உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்களுக்கு, மதுரையை சேர்ந்த சுரக்‌ஷி சிறப்பான‌ முன்னுதாரணம்.

ஏனெனில், 4 வருடங்களுக்கு முன்பு 127 கிலோ உடல் எடையோடு இருந்தவர், இன்று அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்துவிட்டார். ஆம்...! கிட்டத்தட்ட பாதிக்கு பாதி என்ற அளவில், 58 கிலோ உடல் எடையை குறைத்து 69 கிலோ எடையுடன் மிடுக்காக காட்சியளிக்கிறார். இவரது இந்த 'டிரான்ஸ்பெர்மேஷன்' பலருக்கும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. பல போராட்டங்கள் நிறைந்த சுரக்‌ஷியின் கதையை தெரிந்து கொள்வோம்.

* உங்களை பற்றி கூறுங்கள்?

என்னுடைய சொந்த ஊர் பரமக்குடி. திருமணத்திற்கு பிறகு மதுரையில் வசித்து வருகிறேன். பி.டெக் ஐ.டி. முடித்திருக்கிறேன்.

* உடல் எடை குறைப்பு எப்படி சாத்தியமானது?

நான் சிறுவயதில் இருந்தே உடல் பருமனாகவே இருந்தேன். இதனால் பலரது கேலிகளுக்கு உள்ளாகி இருக்கிறேன். திருமணம், மகப்பேறு சமயங்களில் உடல் எடை இன்னும் அதிகமானது. குழந்தை பிறந்த பிறகு, ஒருகட்டத்தில் நான் 127 கிலோ உடல் எடையுடன் இருந்தேன். நடப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. என்னுடைய அன்றாட வேலைகளை செய்யவும், குழந்தை பராமரிப்பு வேலைகளை செய்யவுமே ரொம்ப கஷ்டப்பட்டேன். இதற்காக மருத்துவர்களை அணுகியபோது, அவர்கள் உடல் எடையைதான் காரணம் காட்டினார்கள். உடல் எடையை குறைத்தால் மட்டுமே, இயல்பான வாழ்க்கைக்குள் நுழைய முடியும் என அறிவுறுத்தினர். அதனால் உடல் எடையை குறைக்க முயற்சித்தேன்.

* எப்போதில் இருந்து தீவிரம் காட்டினீர்கள்?

2018-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி, சிலரது கேலி-கிண்டல்களால், தூண்டப்பட்டு உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் இறங்கினேன். அன்று முதல் அடுத்த 6 மாதங்களுக்கு வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்துக்கொண்டு, வீட்டிலேயே லேசான உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். முதல் 20 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு பிறகு, அந்த வாழ்க்கைக்கு உடலும், மனதும் பழகிவிட்டது. 6 மாதங்களுக்கு பிறகு, உடலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன.

* என்னென்ன உடற்பயிற்சிகளை செய்தீர்கள்? யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?

என்னுடைய டிரான்ஸ்பெர்மேஷன், மொத்தமும் 'செல்ப் மேட்'. உடலை குறைக்கும் முயற்சிக்காக, நான் எந்த உடற்பயிற்சி கூடத்தையும் அணுகவில்லை. எந்த வல்லுனரையும் கலந்தாலோசிக்கவில்லை. எந்தவிதமான மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளவில்லை. கூகுள் தேடுதளத்தின் உதவியுடன் 'பிகினர்ஸ்' ரக உடற்பயிற்சிகளை ஆரம்பத்தில் செய்தேன். அதில் தேர்ச்சி பெற்ற பிறகு, 'அட்வான்ஸ்ட்' உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். இப்படி இணையத்தில் தேடிப் படித்து, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உடல் எடையை குறைத்தேன்.

* எப்போது உடல் எடையை குறைத்தீர்கள்?

என்னுடைய முயற்சிக்கு பலன் கிடைப்பதை உணர தொடங்கியதும், உணவு பழக்கத்திலும் மாற்றத்தை கொண்டு வந்தேன். மூன்று வேளை உணவை மட்டும் எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகளை அதிகப்படுத்தினேன். இப்படி இரண்டு வருட தொடர் பயிற்சியினால், 127 கிலோவாக இருந்த உடல் எடை, 69 கிலோவாக குறைந்தது. இந்த இரண்டு வருட போராட்டம் வலி-வேதனை நிறைந்ததாக இருந்தாலும், 'சிக்கென்ற' உடல் தோற்றத்துடன் கண்ணாடி முன்பு நின்றபோது, எல்லாமே மறந்துவிட்டது.

* குண்டாக இருந்த நீங்கள் திடீரென ஒல்லியானபோது, சமூகத்தின் பார்வை எப்படி இருந்தது?

எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். என்னை பாராட்டினார்கள். ஏதோ புதிய உலகத்திற்குள் நுழைந்ததை போல உணர்ந்தேன். நிறைய பெண்கள், என்னிடம் உடல் எடை குறைப்பிற்கான ஆலோசனைகளை கேட்க ஆரம்பித்தனர். நானும் அவர்களுக்கு வழிகாட்ட தொடங்கினேன்.

* பெரிய ரசிகர் கூட்டம் கூடியிருக்குமே?

ஆம்..! நிறைய குடும்ப பெண்களுக்கு ரோல் மாடலாக மாறினேன். குறிப்பாக குழந்தை பேறுக்கு பிறகு உடல் எடை கூடியவர்கள் என்னிடம் உடல் எடையை குறைக்கும் யோசனைகளை கேட்க தொடங்கினர். அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆர்வம் இருந்தாலும், அதை முறைப்படி கற்பிக்க ஆசைப்பட்டேன். அதனால் சென்னையில் எம்.எஸ். யோகா பயின்று, கற்பிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றேன். அருகில் இருப்பவர்களுக்கு, வீட்டிலேயே எடையை குறைக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தேன். நாளடைவில், என்னை நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இப்போது உடற்பயிற்சி செய்வதற்கு என பிரத்யேக கூடத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இங்கு தாய்மைக்கு பிறகு உடல் பருமன் கூடியவர்கள், குடும்ப தலைவிகள், கல்லூரி மாணவிகள் என நாங்கள் ஒரே சமூகமாக, சத்தான வீட்டு உணவுகளை உண்ண சொல்லி, தினமும் புதுமையான உடற்பயிற்சிகளை செய்து கொண்டு மகிழ்ச்சியாக உடல் எடையை குறைக்கிறோம். வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்கும் பெண்களுக்கு, 'மோக்‌ஷா ஹெல்தி லைப்ஸ்டைல்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாகவும், உடற்பயிற்சி நுணுக்கங்களை வழங்குகிறோம்.

* வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைப்பது சாத்தியமா?

சாத்தியம் என்ற பதிலுக்கும் நான்தான் சிறந்த உதாரணம். கை-கால்களை அசைப்பது, குனிந்து நிமிர்வது, இடுப்புகளை அசைப்பது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, வீட்டு வேலைகள் செய்வது, ஜங்க் உணவுகளை தவிர்ப்பது, சத்தான உணவுகளை உட்கொள்வது... இப்படிதான் நான் உடல் எடையை குறைத்தேன். மற்றபடி, வேறு எந்தவிதமான பிரத்யேக பயிற்சிகளிலும் நான் ஈடுபடவில்லை. என்னிடம் உதவி கேட்பவர்களையும், சிறப்பு பயிற்சிகளில் உட்படுத்துவதில்லை.

* உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில், சோம்பேறித் தனத்தை விரட்டவேண்டும். அதுதான் உடல் குறைப்பின் முதல் அடிப்படை. பிறகு, பொறுமையாக இருக்க வேண்டும். ஏனெனில், வருட கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த உடல் பருமனை, கொஞ்சம் கொஞ்சமாகவே கரைக்க முடியும். உடற்பயிற்சியை தொடங்கிய முதல் மூன்று நாட்களிலேயே மாற்றத்தை தேடாமல், மூன்று மாதங்கள் வரை பொறுமையாக இருங்கள். அதற்குள் நிச்சயம், மாற்றம் வரும். மேலும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கி ஒரு மாதத்திற்கு பிறகுதான், உங்களது உடல் அதை ஏற்றுக்கொள்ள பழகும். அதற்கு பிறகுதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

* உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டுமா?

நிச்சயமாக. மூன்று வேளை சாப்பாடு மட்டும் போதும். கூடுதல் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அதேபோல, உணவு சாப்பிட்டதும், 2 மணிநேரத்திற்கு வேறு எந்த உணவையும் உட்கொள்ளாதீர்கள். தண்ணீர் பருகலாம். இனிப்புகளை அறவே தவிர்ப்பது சாத்தியமில்லாதது. அதனால் ஒன்று இரண்டுக்கும் மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம். பாதி வேகவைத்த நிலையில் காய்கறிகளை சாப்பிடுவதும், எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பதும் நல்லது. குறிப்பாக, யூ-டியூப் வீடியோக்களை பார்த்து, தேவையில்லாத உடல்நல கோளாறுகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.

* குழந்தை பிறந்தவுடன், நிறைய பெண்கள் உடல் எடையை குறைப்பதில் ஆர்வமாக இருக்கிறார்களே. அதுபற்றிய உங்களது கருத்து?

குழந்தை பிறந்தவுடன், பெண்களின் உடல் பருமன் அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். அதை உடனே குறைக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில் குழந்தைக்கு பாலூட்ட அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். கூடவே இரவு பகலாக கண் விழித்து இருக்கையில், உடற்பயிற்சிக்கு என போதிய நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். அதனால் ஒரு வருடம் அல்லது 2 வருடங்களுக்கு பிறகு கூட உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம். ஆனால் பிஞ்சு குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரத்தை, குழந்தை வளர்ந்த பிறகு அனுபவிக்க முடியாது.

1 More update

Next Story