தாஜ்மஹால் தக்க வைத்த பெருமை


தாஜ்மஹால் தக்க வைத்த பெருமை
x

இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாஜ்மகாலுக்கு தனி இடம் உண்டு. கொரோனா காலகட்டத்திலும் கூட தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதாவது கொரோனா உச்சத்தில் இருந்த 2019-20-ம் ஆண்டில் மட்டும் நுழைவுக்கட்டணம் மூலம் ரூ.9.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது.

இத்தனைக்கும் அந்த ஆண்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அனைத்து நினைவுச் சின்னங்களும், புராதனச் சின்னங்களும் மாதக்கணக்கில் மூடப்பட்டு இருந்தன. பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அப்படி இருந்தும் ஏராளமானோர் தாஜ்மஹாலை பார்வையிட்டிருக்கிறார்கள். அத்துடன் இந்திய தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ) கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் வரலாற்று கட்டிடங்கள் மூலம் பெறப்படும் வருவாயில் தாஜ்மஹால்தான் அதிக வசூல் ஈட்டியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் கிட்டத்தட்ட ரூ.132 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

2019 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான மூன்று நிதி ஆண்டுகளுக்கான நுழைவுச் சீட்டு விற்பனை மூலம் தொல்லியல்துறை ஈட்டிய மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 24 சதவீதம் தாஜ்மஹால் மூலம் கிடைத்துள்ளது. 2021-2022 நிதி ஆண்டில் மட்டும் ரூ.25.61 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

முகலாய அரசர்களின் நினைவிடங்களை பிரத்யேகமாக பார்வையிட 200 ரூபாய் தனி நுழைவு கட்டணம் வசூலிப்பது 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக ரூ.17.76 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

2021-2022 நிதி ஆண்டில் தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக டெல்லியில் உள்ள செங்கோட்டை ரூ.6.01 கோடியும், குதுப்மினார் ரூ.5.07 கோடியும் வருமானம் ஈட்டியுள்ளன. 2019-20-ம் ஆண்டு குதுப்மினாரில் நுழைவு சீட்டு விற்பனை மூலம் ரூ.20.17 கோடி வருமானம் கிடைத்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் குதுப்மினாரின் வருவாய் ரூ.1.56 கோடியாக சரிந்தது.

ஆக்ரா கோட்டை, கோனார்க்கில் உள்ள சூரியன் கோயில், மாமல்லபுரம், சித்தோர்கர் கோட்டை, கஜுராஹோ, எல்லோரா குகைகள், புனேவின் ஷானிவார் வாடா, ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை மற்றும் டெல்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை ஆகியவையும் அதிக வருவாய் ஈட்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


Next Story