குப்பையில் உருவான 600 டிரோன்கள்; ஆச்சரியப்படுத்தும் டிரோன் இளைஞர்

பிரதாப், ‘டிரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்களை உருவாக்கி, விண்ணில் பறக்கவிட்டார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர், பிரதாப். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான பிரதாப்பிற்கு, 'டிரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்களை உருவாக்க ஆசை. 14 வயதில் டிரோன்களை பற்றி தெரிந்துகொண்டார். 16 வயதில் உருவாக்க முயற்சித்தார். 18 வயதில் டிரோன் உருவாக்கி, விண்ணில் பறக்கவிட்டார்.
ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 600 டிரோன்களை விண்ணில் பறக்கவிட்டு, தன் ஆசையை நிறைவேற்றினார். 'இது எப்படி சாத்தியமானது?' என்ற கேள்வியுடன், பிரதாப்பை தொலைபேசியில் தொடர்புகொள்ள, விளக்கமாக பதிலளித்தார்.
''டி.வி.யில்தான் முதன்முதலில் டிரோனை பார்த்தேன். கழுகு போலவே கட்டுப்பாடு இல்லாமல் பறந்தன. அதுமுதல் 'டிரோன்' மீது தனி பிரியம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அதுபற்றி படிக்க தொடங்கினேன். கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதிகளெல்லாம் எங்கள் ஊரில் கிடையாது. அதனால் பக்கத்து ஊரில் இருந்த ஒரு கணினி மையத்தில் சுத்தம் செய்பவனாக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்கு சம்பளமாக, தினமும் 45 நிமிடங்கள் இன்டர்நெட் உபயோகிக்க, அனுமதி கிடைத்தது.
இணையதளத்தில் டிரோன் பற்றி தேடினேன். டிரோன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டேன். புரியாத தொழில்நுடங்களை புரிந்து கொள்ள, பல பிரபல விஞ்ஞானிகளுக்கு 'இ-மெயில்' அனுப்பி உதவி கேட்டேன். சில விஞ்ஞானிகளிடமிருந்து பதில் விளக்கம் கிடைத்தன'' என்கிறார், பிரதாப்.
டிரோன் பற்றி அதிகம் தேடிப்படித்த பிரதாப்பிற்கு, 12-ம் வகுப்பு படிக்கையில் அதை உருவாக்கும் ஆசை வந்தது. ஆனால் எலக்ட்ரானிக் உபகரணங்களை வாங்க அவரிடம் பணம் இல்லை. இருப்பினும் செய்து முடித்தார். எப்படி தெரியுமா...?
''டிரோன் செய்ய தேவையான மோட்டார், மதர் போர்ட், ஒயர் போன்றவற்றை வாங்க என்னிடம் பணம் இல்லை. அதேசமயம் பள்ளி படிப்பை நிறைவு செய்து, கல்லூரி படிப்பிற்காக மைசூரு செல்லவேண்டியிருந்தது. கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், புத்தக செலவு என நிறைய செலவுகளை சமாளிக்கவேண்டிய சூழ்நிலையில், குப்பையில் கொட்டப்படும் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை சேகரித்து, அதன்மூலம் டிரோன் செய்ய திட்டமிட்டேன்.
இருப்பினும் இதர பொருட்களை வாங்க பணம் தேவைப்பட்டது. அதனால் மைசூருவில் இருந்து பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்று, அங்கிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தேன். அதில் கிடைத்த பணத்தை தங்குவதற்கும், உணவு மற்றும் டிரோன் தயாரிப்பிற்கும் பயன்படுத்திக்கொண்டேன். இறுதியாக, 18 வயதில் முதல் டிரோன் உருவானது. ஆனால், அது பறக்க 80 முறை பிழைகளைக் கடக்க வேண்டியிருந்தது'' என்று சந்தோஷப்படும் பிரதாப், கல்லூரி பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, டெல்லி ஐ.ஐ.டி.யில் நடந்த டிரோன் போட்டியில் கலந்து கொண்டு, 2-ம் பரிசை தட்டி சென்றார். அங்கிருந்துதான், ஜப்பான் நாட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பங்கேற்றார், பரிசை வென்றார்.
''சில பேராசிரியர்கள் அவர்களது சம்பள பணத்தை கொடுத்தனர். நண்பர்களும் உதவிக் கரம் நீட்டினர். கழுத்து, கையில் அணிந்திருந்த தங்க நகைகளை, என் அம்மா கழற்றி கொடுத்தார். சில நகைகளை விற்றும், சிலவற்றை அடகுவைத்தும் ஜப்பானுக்கு பறந்தேன்.
ஜப்பானில் கால் வைத்தபோது என் பாக்கெட்டில் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே இருந்தது. பலரது உதவியுடன் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு சுமார் 120 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.
நுனி நாக்கில் ஆங்கிலமும், பளபளக்கும் டிரோன் அணிவகுப்பும் என போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே என்னை பலரும் மிரட்ட ஆரம்பித்தனர். இருப்பினும் நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை. எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி, டிரோன் பற்றி விளக்கினேன்.
'டாப்-20' பட்டியலில், கடைசி இடம் கிடைத்தது. இரண்டாம் நாளன்று, போட்டி முடிவுகளை அதிகாரிகள் அறிவித்தபோது 'பர்ஸ்ட் பிரைஸ் கோஸ் டூ பிரதாப்' என்பது மட்டும்தான் என் காதில் கேட்டது. அந்த நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டேன். நான் மேடை வரை நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது'' என்று ஜப்பான் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவின் இளம் டிரோன் விஞ்ஞானியாக அறியப்படும் பிரதாப், இதுவரை 600 டிரோன்களை உருவாக்கியுள்ளார். அவை அனைத்தும் குப்பையில் இருந்து உருவானவை. அதன்காரணமாகவே பிரதாப்பிற்கு, உலகளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. எளிய பொருட்செலவில், பயனுள்ள டிரோன் தயாரிப்பு வித்தையை, பிரதாப்பிடம் பலரும் கேட்டு வியக்கிறார்கள்.
இயற்பியல் பட்டதாரி
டிரோன் தயாரிப்பில் உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தி இருக்கும் பிரதாப், பி.எஸ்.சி. இயற்பியல் பட்டதாரி. பொறியியல் படிக்க வசதி இல்லாத காரணத்தால், கலை அறிவியல் பட்டம் பயின்றார். இது பிரதாபிற்கு பல சிக்கலை உண்டாக்கியது. ஜப்பான் டிரோன் மாநாட்டில் கலந்து கொள்ள அவருக்கு 'பேராசிரியர் சான்றிதழ்' தேவைப்பட்டது. ஆனால் இவர் என்ஜினீயரிங் படிக்காததை காரணம் காட்டி, பல பேராசிரியர்களும் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். பல போராட்டங்களுக்கு பிறகே, சான்றிதழ் கிடைத்தது.






